(Reading time: 12 - 24 minutes)

குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார் சுசீலா. சித்தார்த் அந்தப் பிறந்த குழந்தையை ஆசையாக தொட்டுப் பார்த்தவன் தன் அம்மாவின் மேடிட்டிருந்த வயிற்றனை தடவிப் பார்த்து தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொண்டான்.

இதையெல்லாம் மாடிப்படியில் நின்றிருந்தபடியே ‘உர்ர்’ என முகத்தை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள் காவ்யா.

"அடடா காவ்யாகுட்டி வா வா" குழந்தையைக் கையில் ஏந்தியபடியே சுசீலா அழைக்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"காவ்யா உனக்கு வாட்டர் கலர்ஸ் வாங்கிட்டு வந்தேன்" சித்தார்த் அவளை தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று அவளுக்கான பரிசுப்பொருளை கொடுக்கவும் சந்தோஷமாக சிரித்தாள்.

"சித்து அந்த பாப்பா வேண்டாம்...அது பேட் பாப்பா  நீ அது கூட விளையாடாத" சித்தார்த்திடம் மிகத் தீவிரமாக காவ்யா சொல்லிக் கொண்டிருந்தாள்.

"ஏன் காவ்யா. தம்பி பாப்பா அழகா  இருக்கானே. எவ்ளோ சாப்ஃட்" புரியாமல் சித்தார்த் விழித்தான்.

"எப்போ பார்த்தாலும் அந்த பாப்பா தான் அம்மா பக்கத்துல படுத்துக்குது. எல்லோரும்  அந்த பாப்பாக்கு தான் கிப்ட் தராங்க. அதான் நான் கா விட்டுட்டேன் நீயும் கா சொல்லு"

இன்னொரு குழந்தை வந்ததும் தான் ஒதுக்கப் படுகிறோம் என்ற மனநிலையில் இருந்தாள்  காவ்யா. இத்தனை நாளாக மனதிற்குள் பூட்டி வைத்திருந்தவள் தன் விளையாட்டு தோழன் சித்துவைக் கண்டதும் வெளிப்படுத்திவிட்டாள்.

தற்செயலாக அங்கு வந்த பத்மா இதைக் கேட்டு அதிர்ந்தார். குழந்தை பிறக்கும் முன் வரை ஆசையாக இருந்த மகள் இப்போது அக்குழந்தையை வெறுக்க தாமும் ஒரு காரணம் என எண்ணி மனம் வருந்தினார்.

அதிலும் காவ்யாவிற்கு தானே எல்லாவற்றையும் செய்து பழக்கிவிட்டு இப்போது 20 நாட்களாக அந்த கவனிப்பு தர முடியாமல் போனது குழந்தையின் மனதில் காயமாக தோன்றிவிட்டதே என்று வேதனை அடைந்தார்.

இன்னும் சில மாதங்களில் தங்கையோ தம்பியோ சித்துவிற்கு பிறக்கவிருக்க அவன்  மனதிலும்  இந்த  எண்ணம் வந்துவிடக் கூடாதே..ஒரு முடிவாய் குழந்தைகளிடம் சென்றார்.

"அத்தை" பத்மா வந்தவுடன் சித்து ஓடி வந்து கட்டிக் கொண்டான்.

"சித்துக்கண்ணா காவ்யாவுக்கு கிப்ட் வாங்கிட்டு வந்தியா"

"ஆமா அத்தை. வாட்டர் கலர்"

"காவ்யாவுக்கு காட் தான் ஏற்கனவே சூப்பர் கிப்ட் தந்துட்டாரே"

"காட் தந்தாரா. எப்போ அத்தை" சித்தார்த் கேட்க காவ்யாவோ ஆர்வமானாள்.

"யாரெல்லாம் குட் கேர்ள்ஸ், குட் பாய்ஸ்ஸோ அவங்களுக்கு காட் தம்பி பாப்பா தங்கச்சி பாப்பா கிபிட் கொடுப்பார். உங்களுக்கு குடுத்த கிப்ட்ட நீங்க தான் பத்திரமா பாத்துக்கணும்"

"நான் குட் கேர்ள் அதான் காட் தம்பி பாப்பா கொடுத்தாரா" உடனே ஓடி வந்து அன்னையை கட்டிக் கொண்டு மகள் கேட்க

"ஆமாம் டா தங்கம். சித்துவும் குட் பாய் அதான் அவங்க அம்மா வயித்துல காட் தங்கச்சி பாப்பா வச்சிருக்கார்.. இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு சித்துக்கு தருவார்" பத்மா சொல்லவும் சித்தார்த் படு குஷியாகி விட்டான்.

ஏற்கனவே சுசீலா குட்டிப்பாப்பாவை பற்றி சித்துவிடம் நிறைய சொல்லி வைத்திருந்தார். இப்போது கடவுள் நல்ல பிள்ளைகளுக்குக் கொடுக்கும் பரிசு எனவும் அந்தப் பிஞ்சு மனது எல்லையில்லா ஆனந்தம் அடைந்தது.

அன்றிலிருந்து குழந்தைகள் இருவரும் கடவுளின் பரிசான தம்பிப் பாப்பாவை பிரியமுடன்  கொஞ்சிக் கொண்டு சுற்றி சுற்றி வந்தனர்.

"குழந்தை காதுல மூணு முறை பேரைச் சொல்லுங்கோ" புதிதாய் பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டும் வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

"காவ்யா தான் பேரு செலக்ட் பண்ணிருக்கா"

பத்மா காவ்யாவிடம் "என்ன பேரு" என கேட்க நான் தான் சொல்வேன் என்று அடம்பிடித்து தனது தம்பியின் காதில் "கார்த்திக்" என்று சொன்னாள்.

"அக்கா தம்பி ரெண்டு பேர் பேரும் "கே" ல ஸ்டார்டிங்கா...நல்லாயிருக்கே" காவ்யாவின் பேர் செலக்ஷன் அனைவராலும் பாராட்டப்பட்டது.

திடீரென தன் தாயின் அருகில் ஓடிச் சென்ற சித்தார்த் அவரின் வயிற்றின் அருகே குனிந்து "சிந்து" என்று மூன்று முறை கூறினான்.

அனைவரும் வியந்து சிரிக்க அங்கிருந்த ஒருவர்," தம்பி பாப்பா பொறந்தா எப்படி இந்த பேர் வைப்பாங்க" என்று கேட்க "தங்கச்சி பாப்பா தான் எனக்கு வேணும்" என்று தீர்மானமாக சொன்னான் சித்தார்த்.

காவ்யாவாவது அவள் தந்தை சொன்ன பல பெயர்களில் இருந்து கார்த்திக் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தாள். சித்து  எங்கிருந்து தன் பெயரைப் போலவே ஒரு பெயரைப் பிடித்தான் என சுசீலா மிகவும் வியந்து போனார்.

ஒரு வாரம் கழித்து வந்த கணவரிடம் அத்தனையையும் கதை கதையாக சொல்லிக் கொண்டிருந்தார் சுசீலா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.