(Reading time: 14 - 28 minutes)

05. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

ன்னும் ஒரு மணி நேரத்தில் நடக்கப்போகும் மீட்டிங்கில் கலந்துக் கொள்ள வேண்டும்.. துஷ்யந்தை அழைத்துப் போக வண்டி வந்து காத்திருக்கிறது... நேற்று துஷ்யந்த் வருவதற்கு முன்னரே, அவனுடைய பி.ஏ வும் வந்துவிட்டிருந்தான்... துஷ்யந்தும் டெல்லிக்கு வந்தபின், இருவரும் அந்த மீட்டிங்கை பற்றி சிறிதுநேரம் உரையாடினர்...

அது மிகவும் முக்கியமான மீட்டிங்... இந்த மீட்டிங் மூலமாக அதிக லாபம் கிடைக்கக் கூடிய ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது... சிறிய அளவில் இருந்திருந்தால் செல்வாவே இந்த மீட்டிங்கில் கலந்துக் கொண்டிருந்திருப்பான்... இது பெரிய அளவில் இருப்பதால் தான் துஷ்யந்த் வந்திருந்தான்...

நேற்று மாலை இதைப் பற்றி உரையாடியதோடு சரி... காலை எழுந்ததிலிருந்து, கங்காவிடம் இருந்து போன் வருமா..?? என்று காத்துக் கொண்டிருந்தான்... அவனது பி.ஏ விற்கோ இவன் இவ்வளவு அலட்சியமாக இருப்பதை பார்த்து இந்த வியாபார ஒப்பந்தம் இவர்களுக்கு அமையுமா..?? என்ற சந்தேகமே வந்துவிட்டது..

ஆனால் துஷ்யந்த் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை... அவனுக்கு இப்போது கங்காவிடம் பேச வேண்டும் என்பது மட்டும் தான் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது... இவனாக போன் செய்யவும் விரும்பவில்லை.... அவள் கண்டிப்பாக போனில் தொடர்புக் கொள்வாள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

அவன் நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை... கங்காவிடம் இருந்து அழைப்பு வந்தது... முதல் ரிங்கிலேயே அந்த அழைப்பை ஏற்றிருந்தான் அவன்...

"ஹலோ..."

"ஹலோ நான் கங்கா பேசறேன்..."

"ம்ம் சொல்லு.."

"உங்களோட இந்த மீட்டிங் சக்சஸ்புல்லா அமைய, என்னோட வாழ்த்துக்கள்..."

"ரொம்ப தேங்க்ஸ் கங்கா... நீ போன் பண்ணது, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..."

"அது.. வெறும் வாழ்த்து சொல்லத்தானே.. அதனால தப்பில்லன்னு தோனுச்சு..."

"ரொம்ப தேங்கஸ்... அப்புறம்.."

"அப்புறம் என்ன..?? மீட்டிங் எப்போ..??"

"இன்னும் டைம் இருக்கு..."

"அப்படியா..?? இன்னொரு விஷயத்துக்கும் உங்களுக்கு வாழ்த்து சொல்லனும்... அதுக்கு தான் கேட்டேன்.."

"என்ன கங்கா..??"

"உங்களுக்கு கல்யாணம் முடிவாயிடுச்சாமே.. வாணிம்மா சொன்னாங்க... ரொம்ப சந்தோஷம்..." அவள் பேச, அவனோ அமைதியாகிவிட்டான்...

"பொண்ணு எப்படியிருக்கா..?? அவ போட்டோ பார்த்தீங்களா..?? அவ பேர் என்ன..??" உற்சாகத்தோடு கேட்டாள்... அதற்கும் அவன் அமைதியாகவே இருந்தான்...

அவன் லைனில் இருக்கிறானா..?? என்ற சந்தேகத்தில், "ஹலோ.. ஹலோ.." என்றாள்.

"கங்கா.. கார் வந்து வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்காம்... நான் கிளம்பனும்.." என்றான்.

"ஓ... சரி.. ஆல் தி பெஸ்ட்.." என்றவள், சொல்லக் கூடாது என்று மனதுக்குள் நினைத்தாலும், "பத்திரமா திரும்பி வாங்க.." என்று சொல்லிவிட்டிருந்தாள்...

என்னவோ காலையில் அந்த விமானம் மாயமான செய்தியை படிக்கவே, அப்படி சொல்ல தோன்றியது அவளுக்கு...

அவனுக்கோ... முதலில் அவள் பேசிய விஷயத்திற்கு இறுகியிருந்த முகம் மீண்டும் மலர்ந்து, ஒரு புன்னகையை உதிர்த்தான்...

"சரி கங்கா.. நான் போனை வைக்கிறேன்.." என்று வைத்துவிட்டான்... கங்காவோ.. அவன் திருமணம் குறித்து பேச விரும்பாததை நினைத்து.. ஏன் இப்படி இருக்கிறான்..?? என்று ஒரு பெருமூச்சை விட்டாள்.

அதன்பின் துஷ்யந்திற்கு சில மணி நேரங்கள் அந்த மீட்டிங்கில் செலவானது... அந்த மீட்டிங் வெற்றிகரமாக முடிந்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தான்...

அவனது பி.ஏ விற்கோ அவனை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது... காலையில் அவன் அலட்சியமாக இருந்ததும், இப்போது இவ்வளவு திறமையாக அந்த மீட்டிங்கை கையாண்டதும், பாஸ்க்கிட்ட ஏதோ பவர் இருக்கு.. என்று மனதில் நினைத்துக் கொண்டான்...

மீட்டிங் சிறப்பாக முடிந்திருந்தாலும், இன்னும் அது சம்பந்தமாக நாளை வரை அவனுக்கு டெல்லியில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது... அதனால் ஏற்கனவே அவன் நண்பன் அழைத்தது போல் அவன் புதிதாக திறந்திருக்கும், நகைக் கடைக்கு செல்வதென துஷ்யந்த் முடிவெடுத்தான்...

இவனை பார்த்ததும் அந்த நண்பன் சந்தோஷமாக வரவேற்றான்... இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்தனர்... அந்த நண்பனுக்கு டெல்லி தான் சொந்த ஊர்... அவனுடைய அப்பா சென்னையில் நகைக் கடை வைத்திருந்தார்... கல்லூரி முடிந்ததும் இருவருக்கும் தொடர்பு இல்லாமல் போனது...

இப்போது வியாபார சம்பந்தமாக அடிக்கடி இங்கு வந்த போது தான் திரும்பவும் அந்த நண்பனை துஷ்யந்த் சந்தித்தான்... அந்த நண்பன் திருமணமாகி டெல்லியிலேயே செட்டில் ஆகி இருந்தான்...  அந்த நண்பனை சந்திததிலிருந்து, அவனும் தன் கடைக்கு வருமாறு இவனை அழைப்பான்.. இவனுக்கும் இங்கு வந்தால் அதிக வேலையிருப்பதால் நண்பனின் கடைக்கு செல்ல நேரம் இருக்காது... இன்று தான் அதற்கு வாய்ப்பு கிடைத்தது...

"ஏதாச்சும் வாங்கிக்கிட்டு தான் போகனும் துஷ்யந்த்.." என்று கொச்சை தமிழில் அந்த நண்பன் கூறினான்...

ஏதாவது வாங்க சொல்வான் என்று துஷ்யந்தும் யூகித்தது தான்... ஆனால் என்ன வாங்குவது என்று தான் தெரியவில்லை.. இவனுக்கோ, இவன் தம்பி செல்வாவிற்கோ... தங்க நகை அணிய பிடிக்காது... அன்னையின் திருப்திக்காக இருவரும் விரலில் மோதிரம் அணிவதோடு சரி... அப்படியே பிடித்தாலும், கழுத்தை இறுக்கி கட்டிய டையும், பட்டன் போட்டு மூடிய முழுக்கை சட்டையும் என்று பெரும்பாலும் அதே உடையில் இருப்பவர்களுக்கு நகைகள் அணியும் எண்ணமும் இருக்காது...

இவனின் அன்னையும், அத்தையும்... அப்பாவும், மாமாவும் இறந்ததற்குப் பிறகு அவ்வளவாக நகைகள் அணிவதை குறைத்துக் கொண்டனர். அப்படியே அவர்களுக்கு ஏதாவது தேவையிருந்தாலும் அதை செல்வாவே வாங்கிக் கொடுத்துவிடுவான்... வீட்டில் எந்த தேவையிருந்தாலும் அதை பார்த்து, பார்த்து பூர்த்தி செய்வது செல்வா தான்... அதனால் நண்பன் கொடுத்திருந்த கேட்லாக்கை ஒரு ஈடுபாடில்லாமல் துஷ்யந்த் புரட்டிக் கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.