(Reading time: 9 - 18 minutes)

01. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

வியூகம்...!

தடைகளுக்கு தடை விதிக்கும் ஆற்றல் கொண்டது!!மண்ணில் மனிதன் ஒருவன் பிறக்கும் சமயம்,அவன் எண்ணற்ற வியூகங்களை தன் வாழ்வின் உயிர்நாடியாய் மாற்றி அவதரிக்கிறான்!!வாழ்வில் விதிப்போடும் பல சூட்சும கணக்குகளுக்கு எதிராக அவன் தன் வியூகங்களை அரணாக்குகிறான்!பிறவி எடுக்கும் ஆன்மா பிறக்கும் முன்னரே பல்வேறு போராட்டங்களை எதிர்க்கத் தான் செய்கிறது.புத்தி தெளியும் வரை தான் அறியாமலே மனிதனாகப்பட்டவன் பல்வேறு இன்னல்களை களை எடுக்கிறான்!அதில் ஐயமில்லை!!புத்தி தெளிந்து விவரம் அறிந்தப்பின் சோதனைகளை உடைப்பவனால் அதிலிருந்து மீண்டு வர இயலவில்லை.பாரத யுத்தத்தில் நீதிக் காக்க களம் புகுந்த மாவீரன் ஒருவன்,தன் இன்னுயிரையும் பொருட்படுத்தாது,சக்ரவியூகம் தனை முறித்தெறிந்தான்.விதி வசம் அவ்வியூகத்தில் இருந்து அவன் வெளிவராமல் தடுத்து அவன் இன்னுயிர் விண்ணுலகம் அடைந்தது.நம்மில் பலரும் இதுபோலவே,முட்டி மோதியும் எப்பாடுப் பட்டேனும் துன்பங்களை தகர்க்கிறோம்!ஆனால்,அதன் நினைவுகளில் இருந்து மீள இயலாமல் தத்தளிக்கின்றோம்!!அந்நிகழ்வு வாழும்  போதே வாழ்வனைத்தும் துயர் அளித்து புவியில் நரகத்தினை பரிசாக அளிக்கிறது!!இதுவும் நரகமே!!ஆம்..!இக்கதை நிச்சயம் நரகமே!!அப்படி என்ன இருக்கிறது நரகத்தினுள்??இக்கதையோடு பயணம் மேற்கொள்ளுங்கள்..!இறுதியில் புலப்படுவது ஒன்றே..!எதுவும் இல்லாத நிர்மூலமான நிலை!!நரகத்தினை வென்ற ஒரு பிடிவாதத்தின் கதை சக்ரவியூகம்!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"வ்வளவு கேவலமானவனா நீ?ச்சே...!இனி நான் உனக்கு மனைவியும் இல்லை!நீ எனக்கு கணவனும் இல்லை!உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை!"-என்றவர் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளிவர எத்தானித்தார்.

"காயத்ரி!நான் சொல்றதைக் கேளும்மா!என் மேலே எந்தத் தப்பும் இல்லை!"-பிரிந்து செல்ல நினைக்கும் தன் மனையாளை இயன்றவரை தடுக்க முயன்றார் அவர்.

"ச்சீ..கையை விடு!எனக்கு அருவருப்பா இருக்கு!"-கரம் தீண்டிய கணவனின் கரத்தினை உதறினார் அவர்.

"நான் சொல்றதைக் கேளு!என் மேலே எந்தத் தப்பும் இல்லைம்மா!தயவுசெய்து போகாதே!ந...நம்..நம்ம பொண்ணுக்காகவாது இரும்மா!அம்மா இல்லாம அவ வளரக் கூடாது!உன்னை நான் கெஞ்சி கேட்கிறேன்!"-அப்பெண்மணி சுவரோரம் அச்சத்தோடு ஒட்டி இருந்த தன் புதல்வியின் மேல் ஒரு அக்னிப் பார்வையை வீசினார்.

"உன் பொண்ணு தானே!அவளும் இனி உன்னை மாதிரி தான் வளர்வா!எனக்கு அப்படிப்பட்ட அவமானம் தேவையே இல்லை!"-என்றவர் பதிலுக்கு காத்திராமல் வெளியேறினார்.

"காயத்ரி!"-துன்பம் மிகுந்த சமயம் தன்னில் அரவணைத்த துணையின் கூக்குரல் அவரது செவிகளில் விழவில்லை.கொட்டும் மழையில்,அந்த இரவு வேளையில் தனித்துப் புறப்பட்டார் அவர்.கண்ணீர் மல்க செய்வதறியாது நின்றிருந்தவரின் கால்களை வந்து கட்டிக்கொண்டாள் அவரது ஆருயிர் புதல்வி!!

"பா!"-அவளது அழைப்பில் நொடிந்துப் போய் மண்டியிட்டார் அவர்.தன் தந்தையின் கண்ணீரை துடைத்தவள்,

"அழாதீங்கப்பா!நான் இருக்கேன்!"என்றாள்.துக்கம் இதயம் முழுதும் வியாபிக்க,தன் புதல்வியை இறுக அணைத்துக் கொண்டார் அவர்.

"ந்தப் பையன் என்னிக்கு என்கிட்ட உதைப்பட போறான்னு தெரியலை!ஒரு பொருளை எடுத்தா எடுத்த இடத்துல வைக்கிறது இல்லை!அப்பறம்,பாட்டி என் போனை பார்த்தியா!பேனாவை பார்த்தியான்னு என் உயிரை எடுப்பான்!"-புலம்பியப்படி அந்த அறையை சுத்திகரித்துக் கொண்டிருந்தார் மஹாலட்சுமி.

"பாட்டிம்மா!ருத்ரா தம்பியை பார்த்தீங்களா?"-காபிக் கோப்பையுடன் வந்துக் கேட்டார் அந்த இல்லத்தில் பணிப்புரியும் முருகன்.

"இங்கே தானேடா இருந்தான்!"

"இல்லையே!வீடு முழுக்க தேடிட்டேனே!"

"இவன் பின்னாடியே யாராவது ஓடணும் போல!வரட்டும் அவனுக்கு இருக்கு!நீ போய் வேலையை கவனி!"

"சரிங்க பாட்டி!டிபன் என்ன பண்ணட்டும்?"

"சமையல் வேலை எப்போதும் என் மித்ராவோட வேலை!அதைப் பற்றி நீ கவலைப்படாதே!ருத்ராக்கு எது பிடிக்கும்!பிடிக்காதுன்னு அவளுக்கு தான் சரியா தெரியும்!"

"இப்போ தான் பேரனை திட்டினீங்க!அதுக்குள்ள ருத்ரா தம்பிக்கு பிடித்ததை சமைக்கணும்னு சொல்றீங்க?"

"என்ன இருந்தாலும் என் வீட்டோட முதல் வாரிசு இல்லையா!சரி...பேசிட்டே இருக்காம மித்ராவுக்கு போய் உதவி பண்ணு!"

"சரிங்க பாட்டி!"-என்றவர் விரைந்து நகர்ந்தார்.

"எங்கே போனானோ!வீட்டில மட்டும் தங்குறதே இல்லை!"-புலம்பியப்படி தனது பணியை தொடர்ந்தார் அவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.