(Reading time: 15 - 30 minutes)

மூங்கில் குழலானதே – 24 - புவனேஸ்வரி

Moongil kuzhalanathe

சில வருடங்களுக்கு முன்!

இதயம் நுழைந்தவளே

இன்னுயிராய் இனிப்பவளே

இதமாய் உன்னை அழைத்தால்

என் இதழில் மையம் கொள்கிறாய்!

காதல் அதிகம் உண்டு

உன் மேல மோகமும் நிறைய உண்டு!

கிறங்க வைக்கும் நீயே

உறங்கவிடாதே என் தமிழே!

அந்த கல்லூரியின் அரங்கில் தனது இனிய குரலை மைக் மூலமாக பரவ விட்டு அனைவரின் மனதையும் கட்டி போட்டு வைத்திருந்தான். தமிழ்மொழியையே காதலியாய் பாவித்து அவன் பாடிய விதம் அனைவரையுமே கவர்ந்தது.

பொதுவாகவே அவன் கவிதைகளுக்கு அக்கல்லூரியில் ரசிகர்கள் அதிகம். இதில் அக்கவிகளுக்கு அவனே தாளம் தேடி பாடும்போது ரசிக்காமலிருந்திட முடியுமா?

அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவன் மீது இருக்க, அவனோ மேடை கீழிருந்தபடி தன்னை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் நண்பனைப் பார்த்தான். அபிநந்தனின் மேடை பாடல்களை எல்லாம் பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவேற்றுவது அவனது பொழுது போக்கு. அவன் ஏதோ ஆர்வத்தில் பதிவேற்றும் பாடல்களை பொக்கிஷமென கருதி அவனை “நந்திதா” என்ற பெண்ணொருத்தி தொடர்வதை அறிந்திடாதவன் அபி.

இமயமோ?

இமை நீயோ?

இன்முகமாய் சிரித்தாயோ

இனியவளே உன்னை

இதழ்களுக்குள் நான் அடைத்திட மாட்டேனோ?

கிட்டாரை இயக்கி கொண்டே தன் நண்பனை அவன் பார்க்க, அதுவரை அபிநந்தனை அசராமல் காணொலியில் பதிவு செய்துகொண்டிருந்தவனின் பார்வை வேறு பக்கம் திரும்பியது.

அவன் மட்டுமல்ல, அங்கு அவனுடன் நின்றிருந்த சகமாணாவார்களின் பார்வையும் அவ்வரங்கத்தின் வாசலை தொட்டிட, அவர்களுடன் படிக்கும் மாணவிகளின் கண்களிலோ பொறாமை அப்பட்டமாகத் தெரிந்தது.

“வந்துட்டாடீ!இனிமே இவனுங்க  விடுற ஜொல்லில் நாம நீச்சல்தான் அடிக்கனும் பாரு!” என்றுகூட்டத்தில்ஒருத்தி சொல்லவும், அவளின் பேச்சை கேட்ட ஒருவன்,

“ அழகா இருந்தா ஜொல்லு விடத்தான் தோனும்.. நீ அடங்கு!” என்று கேலியாக சொன்னான். மற்ற நண்பர்களும் அதை ஆமோதிப்பது போல சிரிக்கவும், இன்னும் எரிச்சலுற்றனர் மற்ற பெண்கள்.

எரிச்சல் கொண்டது அவர்கள் மட்டுமல்ல! அபிநந்தனும். இவ்வளவு நேரம் கருமமே கண்ணென இருந்த தன் நண்பனின் பார்வை மாறியது அவனுக்கு சுள்ளென கோபம் வந்தது. “பெரிய பேரழகி! இவன் பெரிய ரவிவர்மன்..பார்வையாலேயே ஓவியம் வரையுறான்” என்று அவன் வசைப்பாடிய நேரம் மிடுக்காய் அங்கு நடந்து வந்தாள் நந்தினி!

நிஜத்தில் அபிநந்தன் சொன்னது போலவே அவள் பேரழகித்தான். அவள் கண்களில் குடிக்கொண்டிருக்கும் ஒரு விதமான திமிர் அவளது அழகினை இன்னும் பன்மடங்காக காட்டியது. அவள் கொஞ்சம் சிரித்து பேசினாலே பலரின் மனம் கள் உண்ட நரிபோல மயங்கிவிடும். அந்த மயக்கம்தான் அவளது கர்வத்தை இன்னும் ஏற்றிவைத்திருந்தது.

அபிநந்தன் கல்லூரின் கடைசியாண்டு கல்வியை தொடங்கும்போதுதான் அவர்களது வகுப்பில் சேர்ந்தாள் நந்தினி. அவளின் அழகும் மிடுக்கும், பல மாணவர்களை அவளுக்கு நண்பர்களாகவும் மாணவிகளை எதிரிகளாகவும் மாற்றி வைத்தது. இருப்பினும் இன்னொரு பக்கம், அழகான பெண்ணின் தோழி என்று சொல்லிக்கொள்ளும் பெருமையை பெறவும் சில தோழிகள் இருந்தனர்.

“ஹாய் கேர்ள்ஸ்” என்று அவள் கூவிட,

“ஹாய் நேண்டி.. ஹனி… யூ ஆர் லுகிங்க் க்ரேட்” என்று சில மாணவர்களின் குரல் சத்தமாக கேட்டது. வழக்கமான சிரிப்பு அவளிடம்.

“தேங்க்ஸ்” என்றவள் மேடையில் பாடிக்கொண்டிருந்த அபியைப் பார்த்தாள். அவனோ அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.. அப்படியே பார்த்தாலும் அப்பார்வையில் அலட்சியம் மட்டுமே இருந்தது.  கோபம் அவளுக்கு!

இன்று நேற்று என்றல்ல.அந்த வகுப்பில் அவள் சேர்ந்ததில் இருந்தே அபியின் ஒதுக்கத்தை அவள் கவனித்துக் கொண்டுத்தான் இருக்கிறாள். “சரிதான் போ” என்று ஒதுக்கிவிட முடியாத அளவிற்கு அவனது ஒதுக்கம் அவளை பாதித்தது. இவர்களுக்கும் மூளாமல் மூண்டிருக்கும் மௌன பகையை அவளின் எதிரியணி பெண்ணொருத்தி தெரிந்தே வைத்திருந்தாள்.

சற்றுமுன் நந்தினியின் வருகைக்குகிடைத்த மரியாதை மூட்டிய எரிச்சல் எல்லாம் இப்போது மறைந்தே போயிருந்தது. மெல்ல பூனை நடை போட்டு நந்தினியின் அருகில் வந்தாள் வைஷ்ணவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.