(Reading time: 13 - 25 minutes)

"எனக்கு அதுல விருப்பம் இல்லைப்பா"

"அதான் சொன்னேன் அவங்கவங்க வேதனையை அவங்க தான் அனுபவிக்கணும். தகப்பனா இருந்து சொல்லுறது என் கடமை. ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உன்னோட உரிமை"

மேற்கொண்டு மேகலாவும் நாராயணனும் சிறிது நேரம் பேசிக்கொள்ளவில்லை.

நிலா விளையாடி களைத்துப் போய் அவர்களிடத்தில் வந்தாள். மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.

டாக்ஸி டிரைவர் வண்டியை சீரான வேகத்தில் ஒட்டிச் சென்றுகொண்டிருந்தார்.

"மேகலா"

"சொல்லுங்கப்பா"

"நான் இந்தியா போயிட்டு வரலாம்னு நினைக்கிறேன்"

"திடீர்னு ஏன் இந்த முடிவு?"

"இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன்னு தெரியல. அதுக்குள்ள இந்தியா போயிட்டு சில கோவில்களை தரிசிச்சிட்டு சொந்தபந்தங்களை பார்த்துட்டா நல்லா இருக்கும்னு தோணுது"

"ஆனா உங்களால தனியா போக முடியாதுப்பா, நானும் கூட வரேன்"

"நீ வீட்டை பாத்துக்கம்மா. அந்த அமேலியா பொண்ணு, வசந்த் எல்லாம் தனியா இருக்கிறது அவ்வளவு நல்லா இல்லை"

மேகலா தீவிர சிந்தனைக்குள் வீழ்ந்தாள். 

ஜெஸிகாவால் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அவளது இதயத்துடிப்பு பன்மடங்கு அதிகரித்தது. அவ்வப்போது தண்ணீரைக் குடித்து தன்னை சாந்தப்படுத்த முயற்சித்து தோற்றுப்போனாள்.

இப்படியொரு கொடுமையை தான் சந்திப்போம் என அவள் நினைத்துப் பார்க்கவேயில்லை. 'உன் முகத்தில் விழிக்க மாட்டேன். இது தான் நம் கடைசி சந்திப்பு' என ஜானின் முகத்தில் அறைந்தார் போல் கூறி வந்ததை எண்ணிப் பார்த்தாள். ஆனால், இப்பொழுது மீண்டும் அவனைச் சந்திக்க வேண்டும், அது மட்டுமில்லாமல் அவனிடம் உதவியை நாட வேண்டும். நினைக்க நினைக்க ஜெஸிகாவிற்கு வெறுப்பு தலைக்கேறியது.

டைரக்டர் எப்பொழுது வேலையை முடித்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வருவார் என காத்துக்கொண்டிருந்தாள்.

"இன்னும் நீ வீட்டுக்கு போகலையா?" என்றபடி அவளை நோக்கி வந்தான் வசந்த்.

"எங்கே போறது? என் நிலைமை இப்படி மோசமாகும்னு நினைக்கவே இல்லை. பேசாம வேலையை விட்டுடலாம்னு இருக்கேன்"

"நீ ஏன் இப்படி மடத்தனமான யோசிக்கிற?"

"இந்த பைத்தியக்கார டைரக்டர் போயும் போயும் அந்த வீட்டையா செலக்ட் பண்ணுவாரு. எனக்குன்னு வந்து மாட்டுறானுங்க பாரு வீணா போனவங்க"

"முன்னலாம் ஜான் உன்ன தேடி தேடி வருவான், இப்போ நீ ஜானை தேடி போற அளவுக்கு நிலைமை மாறிப் போச்சு" என்று வசந்த் சிரித்தான்.

ஜெஸிகா அவனை முறைத்தாள். அந்நேரத்தில் டைரக்டர் வெளியே வந்துகொண்டிருந்தார்.

"சார் சார் கொஞ்சம் நில்லுங்க" என்று டைரக்டரை நோக்கி ஓடினாள் ஜெஸிகா.

"என்ன ஜெஸ்ஸி, ஏதாச்சும் முக்கியமான விஷயமா?"

"சார், லொகேஷன்க்கு இடம் செலக்ட் பண்ணீங்கல்ல"

"ஆமா"

"அந்த இடம் வேணாம் சார்"

"ஏன்?"

"அதை விட நல்ல இடம் உங்களுக்கு நாளைக்கு காட்டுறேன்"

"ஜெஸ்ஸி .நான் சொல்லுற காரியத்தை செய்யுறது தான் உன்னோட வேலை. நீ எனக்கு ஆர்டர் போட தேவையில்லை"

"நான் சொல்ல வந்ததை நீங்க தப்பா புரிஞ்சிட்டீங்க சார். அந்த வீட்டுல இருக்கவங்க ஷூட்டிங் நடத்த அனுமதி தரமாட்டாங்களாம்"

"இது சில நேரங்கள்ல வழக்கமா நடக்குற விஷயம் தான? சொன்னதை விட அதிகமா பணம் கொடுத்தா விழுந்துட போறாங்க"

"பேசி பாத்துட்டேன் சார், அவங்க எதுக்கும் ஒத்து வரல"

ஜெசிகா பொய்களாய் அடுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு வசந்த் வாய்பிளந்தபடி நின்றான்.

டைரக்டர் சில நொடிகள் ஜெஸிகாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

"ஜெஸ்ஸி என்னுடைய விளம்பரத்திற்கு அந்த வீடு தான் சரியா இருக்கும். என்ன ஒரு அட்டகாசமான லொகேஷன் தெரியுமா? எப்போவாவது தான் இது போல அதிஷ்டம் நம்மளை தேடி வரும்"

"அது வந்து சார்..."

"எத்தனையோ மனிதர்களை நீ சாதாரணமா வழிக்கு கொண்டு வந்திருக்க. இந்த வீட்டுல இருக்க மனிதரை சம்மதிக்க வைக்கவா நீ கஷ்டம்னு சொல்லுற?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.