(Reading time: 13 - 25 minutes)

அமேலியா - 24 - சிவாஜிதாசன்

Ameliya

ழில் கொஞ்சும் அழகோடு ஓங்கி வளர்ந்திருந்த மரங்களை ஆச்சர்ய விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்தார் நாராயணன்.

எப்பொழுதும் நாராயணன் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் ஒரு மாறுதலுக்கு குழந்தைகள் விளையாடும் பூங்காவிற்கு அழைத்து வந்திருந்தாள் மேகலா. அமேலியாவையும் அழைத்து வரவேண்டும் என விரும்பினாள். ஆனால், ஏதேனும் பிரச்சனை வந்தால் சமாளிப்பது சுலபமல்ல என்பதால் அவளை வீட்டில் தனியே விட்டுவிட்டு வந்திருந்தாள். 

பசுமையான இயற்கையின் பிடியில் தன்னை பறிகொடுத்த நாராயணன் சிறிது நேரம் கவலையை மறந்திருந்தார். அவருக்கு பின்னால் நின்றிருந்த மேகலாவும் இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தாள். சிறிது தூரத்தில் சிறு பிள்ளைகளோடு சேர்ந்து ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தாள் நிலா.

மாலை நேர குளிர்காற்று நாராயணனின் உடலை மெல்ல சில்லிட வைத்தது. விளையாடிக்கொண்டிருந்த சிறு குழந்தைகளை ஏக்கத்தோடு பார்த்தார். அவர் மனம் பால்ய காலத்தை அசைபோட்டது.

வாழுகின்ற வாழ்க்கையில் கவலைகள் அற்ற மகிழ்ச்சியான காலம் என்றால் முதலில் வரும் சிறு பிள்ளை காலம் தான். எந்த கவலையும் தோன்றாத வயது; படுத்தவுடன் சட்டென உறங்குகின்ற அற்புதமான பருவம்; வறுமை, எதிர்காலம், பணம், நோய் என எந்தத் தொந்தரவும் அந்த வயதில் கிடையாது.

தான் சிறுவனாய் இருந்தபோது சீக்கிரமே பெரியவனாக வேண்டும் என தான்தோன்றித் தனமாக யோசித்ததை நினைவு கூர்ந்தார். இப்பொழுது வயதான பின் சிறுவனாய் மாற மனம் துடிக்கின்றது. வாழ்க்கையே இக்கரைக்கு அக்கரை பச்சை என எண்ணி சிரித்தார்.

"என்னப்பா சிரிக்கிறீங்க?" என்றாள் மேகலா.

"ஒண்ணும் இல்லம்மா திடீர்னு ஏதோதோ நினைப்பு"

அந்நேரத்தில் ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த நிலா நிலை தடுமாறி கீழே விழுந்தாள்.

அதைக் கண்டு பதறிய மேகலா நிலாவைத் தூக்க ஓட முற்பட்டாள்.

"நில்லும்மா"

மேகலா புரியாமல் தன் அப்பாவை நோக்கினாள்.

"அவளே எழும்பட்டும். ஒவ்வொரு முறையும் நீ போய் தூக்கிட்டு இருக்க முடியாது"

மேகலாவுக்கு நாராயணன் கூறியது சுத்தமாக விளங்கவில்லை.

"நான் வாழ்க்கையை சொன்னேன்"

"ஒரு சாதாரண சம்பவத்திற்கும் வாழ்க்கைக்கும் ஏன் அப்பா முடிச்சு போடுறீங்க?"

"எல்லாத்துக்குமே ஒரு தொடர்பு இருக்குமா. இந்த பூமியில பிறக்கிற எல்லோரும் அவங்கவங்க வேதனையை அவங்க தான் அனுபவிக்க முடியும். மத்தவங்ககிட்ட இருந்து ஆறுதல் தான் கிடைக்கும். தீர்ப்பு கிடைக்காது"

"நீங்க பேசுறது எனக்கு சுத்தமா புரியலப்பா"

"இந்தியாவுல இருக்கும்போது படிக்கிறப்போவே நீ ஒருத்தனை காதலிச்ச. அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு விடாப்பிடியா இருந்த"

இவ்வாறாக நாராயணன் கூறிக்கொண்டிருந்தபோதே மேகலாவின் கண்களில் நீர் கசிந்தது.

"அந்த காதல் சரிப்பட்டு வராதுன்னு நான் எவ்வளவோ எடுத்து சொன்னேன். நீ கேக்கல. வேறு வழி இல்லாமல் நானும் உங்க காதலுக்கு சம்மதிச்சேன்"

நாராயணன் சிறிது நேரம் பேச்சை நிறுத்தி நிலாவை பார்த்தார். கால் முட்டிகளில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கசிந்தாலும் அந்த வலியைப் பொருட்படுத்தாமல் மீண்டும் ஊஞ்சலில் ஆடுவதிலேயே கவனம் செலுத்தினாள்.

என்ன தான் உறவுகளில் வேதனை ஏற்பட்டாலும் மீண்டும் அந்த உறவுகளோடு வாழத் தான் மனம் விரும்புகிறது. மனித குலமே விந்தைகள் பல நிறைந்த உலகம் என நாராயணன் எண்ணிக்கொண்டே மேகலாவின் முகத்தை நோக்கினார்.

"உங்க ரெண்டு பேருக்கும் நல்லபடியா தான் கல்யாணம் பண்ணி வச்சேன். மகிழ்ச்சியான வாழ்வு தான் நீங்க வாழணும்னு ஆசைப்பட்டேன். ஆனா நடந்தது என்ன? கல்யாணம் ஆன ஒரு வருஷத்துக்குள்ளாகவே உன் கணவனுக்கு சித்தப்ரம்மை பிடிச்சது. எவ்வளவோ வைத்தியம் பாத்தும் பலனில்லை. நாளுக்கு நாள் அவன் நிலை மோசமாகிட்டே போச்சு. கடைசியில மனநல மருத்துவமனைல சேக்குற அளவுக்கு நிலைமை முத்தி போச்சி"

மேகலாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

"திடீர்னு ஒரு நாள் மனநல மருத்துவமனைல தீ விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்றிருந்த பல பேர் தீயில் கருகி இறந்து போய்ட்டாங்க. சிலர் தப்பிச்சு ஓடிட்டதா சொன்னாங்க. ஆனா அவங்களை கண்டுபிடிக்க முடியல. அதுல உன் கணவனும் இருப்பான்னு நம்பிக்கைல வாழ்ந்துட்டு இருக்க"

மேகலா தேம்பி அழத் துவங்கினாள். நாராயணன் கூறிய சொற்கள் விஷமுட்களாய் அவள் நெஞ்சில் பாய்ந்தன.

"நான் ஏதாச்சும் தவறா பேசியிருந்தா என்னை மன்னிச்சிடுமா"

"அப்படியெல்லாம் இல்லைப்பா" அழுகையை அடக்கியபடி கூறினாள் மேகலா.

"இனி நான் என்னம்மா சொல்லுறது. உன்னை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொன்னேன். நீ கேக்கல"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.