(Reading time: 13 - 25 minutes)

ஜெஸிகா அமைதியாக நின்றாள்.

"அடுத்த வாரத்துல அந்த வீட்டுல சூட்டிங் நடக்கணும்" என்று கூறி அவ்விடத்தை விட்டு அகன்றார் டைரக்டர்.

மனதளவில் மிகவும் சோர்ந்து போன ஜெஸிகா அருகே இருந்த மரத்தடி பெஞ்சில் அமர்ந்தாள்.

"நீ இவ்வளவு பொய் பேசுவேன்னு நான் நினைக்கவே இல்லை" என்று கூறியபடி ஜெஸிகாவின் அருகில் அமர்ந்தான் வசந்த்.

"பொய் சொல்லி கூட என்ன பிரயோஜனம்? நான் நினைச்சது நடக்கலையே"

"கவலைப்படாத ஜெஸ்ஸி, நான் ஜான் கிட்ட பேசுறேன்"

"உன்னால அது முடியுமா? அவன் சம்மதிப்பானு எனக்கு தோணல"

"பேசி பாக்கலாம். நாம கேட்டு இல்லனா சொல்ல போறான்"

"என்னது? நாம கேட்கணுமா? நீ மட்டும் கேளு. என்னை ஏன் இதுல சேக்குற?"

"உனக்காக தான உதவி கேக்க போறேன். நீ கூட வரலைன்னா எப்படி?"

"ப்ளீஸ் வசந்த், இந்த உதவி மட்டும் எனக்கு செஞ்சு கொடுத்திடு. உனக்கு பின்னாடி ஏதாச்சும் கஷ்ட காலம் வந்தா நான் உனக்கு உதவுறேன்"

சில நொடிகள் வசந்த் யோசித்தான்.

"நிச்சயமா உதவி செய்வியா?"

"கண்டிப்பா வசந்த்"

"அப்போ ஓகே"

"என்ன உதவி தேவைப்படுது உனக்கு?"

"இதுவரைக்கும் எதுவும் தேவைப்படலை. அப்படி தேவைப்பட்டா சொல்றேன்" என அங்கிருந்து எழுந்து சென்றான் வசந்த்.

ஏடாகூடமா ஏதாச்சும் உதவி கேக்க போறானோ என பயந்த ஜெஸ்ஸி, ஜான் விஷயம் சக்ஸஸ் ஆய்டுச்சுனா போதும் என மனத்திருப்தி கொண்டாள். 

சந்த் சிந்தனையோடு காரில் சென்றுகொண்டிருந்தான். அவன் நினைவு முழுவதும் அமேலியாவே நிரம்பியிருந்தாள். நீண்ட நாட்கள் கழித்து அமேலியாவை நினைக்கிறோம் என அவன் உள்மனம் கூறியது.

அமேலியாவின் முகம் வசந்தின் மனக்கண் முன்னால் நிழலாடியது. ஆரம்பத்தில் பார்த்ததை விட இப்பொழுது அவள் அழகு பன்மடங்கு கூடியிருப்பதாய் எண்ணினான். அதே முகம். ஆனால், இப்பொழுது மட்டும் ஏன் அழகாக தெரிகிறது? அதன் காரணம் என்ன? அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

'அமேலியாவிடம் எப்படி ஓவியத்தை வரைய சொல்வது? நான் கூறுவது அவளுக்கு புரியுமா? கடவுளே!.நான் நினைத்தது போல் அவள் ஓவியம் தீட்ட வேண்டும்' என மனதிற்குள் கூறியவாறே வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தான்.

வழியில் சிடி கடை அவன் கண்ணில் படவே காரை நிறுத்திவிட்டு கடைக்குள் நுழைந்தான். ஏகப்பட்ட சிடி-க்கள் நிறைந்த கடை. இளம் சிறார்கள், வாலிபர்கள், வயதானவர்கள் என வயது வரம்பின்றி அங்கே சிடி-க்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.

வசந்தும் சில மியூசிக் சிடி-க்களைதேடினான். அவன் எதிர்பார்த்த ஆல்பங்கள் எல்லாமே அவனுக்கு கிடைத்தன. தான் தேர்ந்தெடுத்த சிடி-க்களுக்கு பணம் செலுத்த போன போது, அவன் கண்ணில் தி வார் (The war) என்ற சிடி தென்பட்டது. அதை பற்றி அங்கு வேலை செய்பவரிடம் கேட்டான்.

அந்த சிடியின் மேல் தன் கண்களை பாயவிட்ட அவர், "ஈராக்கில் நடக்கும் போர், அந்நாட்டு மக்களோட சூழ்நிலையை மையமா வச்சு எடுத்த டாக்குமெண்ட்ரி பிலிம் சார் அது" என்றார்.

அந்த சிடியை சற்று நேரம் கையில் வைத்து யோசித்தவன் அதையும் சேர்த்து வாங்கிக்கொண்டு காரில் ஏறி தன் வீட்டை நோக்கி விரைந்தான். 

மேலியா ஜன்னல் வழியாக சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டிலேயே அடைபட்டு கிடைந்தவளுக்கு ஜன்னல் காட்சி ஒன்றே பொழுதுபோக்காய் தெரிந்தது.

மேகலாவும் நாராயணனும் வெளியில் சென்று நீண்ட நேரம் ஆகிவிட்டதால் கவலைகொண்டாள். அமேலியாவிற்கு தனிமையில் இருப்பது பிடிக்கும் என்றாலும் அந்தத் தனிமை அவள் உள்ளத்தில் புதைந்து கிடந்த பயத்தை மேலும் வெளிக் கொணர்ந்தது.

திடீரென அமெரிக்க ராணுவனத்தினர் வீட்டினுள் நுழைந்து துப்பாக்கி முனையில் தன்னைப் பிடித்துச் சென்றுவிடுவார்களோ என அவள் பலமுறை பயந்திருக்கிறாள்.

அப்படி பிடித்து சென்றால் என்ன ஆகும்? அதன் பின் தன் நிலையென்ன? அவர்கள் எப்படி விசாரிப்பார்கள்? துன்புறுத்துவார்களோ? என விடை தெரியா பல கேள்விகளை மனதினுள் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருப்பாள்.

ஆனால், ஒன்று மட்டும் அவளுக்கு தெரியும். விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றால், மீண்டும் உயிரோடு வருவது சாத்தியமில்லை என்று.

ஈராக்கில் அவள் வசித்த இடத்தின் பக்கத்துக்கு தெருவில் குடிகொண்டிருந்த இரண்டு பேரை விசாரணை என்ற போர்வையில் அழைத்துச் சென்ற அமெரிக்க ராணுவனத்தினர் அவர்களை பிணமாய்த் தான் ஒப்படைத்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.