(Reading time: 3 - 5 minutes)

கருத்துக் கதைகள் – 31. எண்ணித் துணிக... - தங்கமணி சுவாமினாதன்

donkey

கிராமம் ஒன்றில் கோவிந்தன் என்பவன் வாழ்ந்து வந்தான்.அவன் வயதானவன்.அவனிடம் கழுதை ஒன்று இருந்தது.அவனுக்குத் திடீரெனப் பண முடை ஏற்பட்டது.கையில் போதுமான அளவு பணம் இல்லை.எனவே கழுதையை விற்பதென தீர்மானித்தான்.தன் மகனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு கழுதையை விற்பதற்காக அதனை சந்தைக்கு ஓட்டிச் சென்றான்.

கடும் வெயில்.நடக்க முடியாமல் நடந்து சென்றனர்.வழியில் சில பெண்கள் இவர்களிடம்.. ஏன் இப்படி நடந்து செல்ல வேண்டும்?கழுதை மீது ஏறிச் செல்லலாமே என்றனர்.அதுவு சரிதான் என எண்ணிய கோவிந்தன் தன் மகனைக் கழுதையில் ஏறி அமரும்படி கூற அவனும் ஏறிக் கொண்டான்.இப்போது கிழவனான அப்பன்காரன் வெயிலில் நடந்து வர மகன் கழுதை மீது உட்கார்ந்து வந்தான்.

இதைப் பார்த்த வழியில் சென்ற சில ஆண்கள் இது என்ன கொடுமை வயதானவன் வெயிலில் நடக்க சின்ன வயது மகன் கழுதை மீது அமர்ந்து செல்கிறானே என சொல்லிச் சிரித்தனர்.

உடனே கிழவன் மகனைக் கீழே இறங்கச் செய்து விட்டு தான் கழுதை மீது ஏறிக்கொண்டான்.கொஞ்ச தூரம் போயிருப்பார்கள்.வழியில் தென்பட்ட சிலர் ஐயோ இதென்ன அறியாமை? கொடுமை..? சின்னப் பையன் வெயிலில் நடக்க வயதில் பெரியவர் கழுதை மீது ஜம்மென்று செல்கிறாறே என்று இவர்களின் காது பட சொல்ல கிழவன் தன் மகனையும் கழுதை மீது ஏற்றிக்கொள்ள இருவரையும் சுமந்தவாறு கழுதை நடந்தது.

அது ஒரு பாலம்.அப்பாலத்தின் கீழே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.அப் பாலத்தின் மீது கழுதை நடந்து கொண்டிருந்தது.அப்போது குறும்புக்கார இளைஞன் ஒருவன் வந்தான்.அவன் இவர்களிடம் ஐயோ பாவம் கழுதை. வாயில்லா ஜீவன்.உங்கள் இருவரையும் சுமக்க முடியாமல் சுமக்கிறதே?என்று சொல்லியபடி சென்றான்.இதை கேட்ட கிழவன் கழுதை மீதிருந்து கீழே இறங்கினான்.மகனையும் இறக்கினான்.ஒரு கம்பில் கழுதையைக் கயிற்றால் கட்டி அதனைத் தலை கீழாய்த் தொங்கவிட்டு கம்பின் ஒரு முனையைக் கிழவனும் மறு முனையை மகனும் பிடித்துக் கொண்டு கழுதையைத் தூக்கிச் சென்றனர்.

கழுதைக்கு பெரும் இம்சையாய் இருந்தது.விலுக் விலுக் என்று கால்களை அசைத்தது.கட்டு நழுவியது.

தொபுகடீர் என்று கீழே இருந்த ஆற்றில் விழுந்தது கழுதை.நிறைய தண்ணீரைக் குடித்து இறந்து போயிற்று கழுதை.பாவம் அது.

ஒரு காரியத்தைப் பற்றி மக்கள் அனைவரும் ஒரே கருத்தை கொண்டிருக்கமாட்டார்கள்.ஒருவர் கருத்து மற்றொருவரின் கருத்தோடு மாறு படும்.நாம் எக்கருத்தையும் காரியத்தையும் எண்ணித் துணிய வேண்டும்.

துணிந்தபின் அது பற்றிப் பிறர் கொண்டிருக்கும் கருத்து பற்றிச் சிந்திக்கக் கூடாது.ஒருவன் எல்லோருடைய கருத்துக்கேற்ப நடக்க முடியாது.

 

கதை சொல்லும் கருத்து:

எண்ணித் துணிக கருமம்.துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.

Story # 30 - Paasam

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.