முதல் நாள் இருப்பு வைத்துப் போன நாணயங்கள் மறுநாள் காலையில் காணாமற் போனது கண்டு நிதி அதிகாரி கலங்கிப் போனார்.
இது வெளியில் தெரிந்தால் பூவேந்தன் ஆட்சிக்கே கெட்ட பெயர் உண்டாகிவிடும், என்று நிதியதிகாரி அரசனிடம் வந்து பொன் நாணயங்கள் காணமல் போன செய்தியை மிகக் கமுக்கமாகக் கூறினார்.
யாரோ கள்ளச்சாவி போட்டுப் பெட்டகத்தைத் திறந்திருக்கிறார்கள். உறுதியாக அரண்மனையில் உள்ள யாரோதான் திருடியிருக்கிறார்கள் என்று தோன்றியது. வெளியில் இருந்து யாரும் திருடர்கள் வந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் யார் மீதும் ஐயுறுவதற்குத் தோன்ற வில்லை. அரண்மனையில் வேலை செய்யும் அனை வருமே உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அமைச்சர்கள், படைத்தலைவர்கள், அதிகாரிகள் ஆகியவர்களின் உறவினர்களே எல்லா வேலையிலும் இருந்தார்கள்.
அதனால் யார் மீது குற்றம் சொன்னாலும் அது சரியாக இருக்காது.
இதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று சிந்தித்துப் பார்த்தால் குழப்பமாகவே இருந்தது.
அரசன் பூவேந்தன் என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
அப்போது முதலமைசர் அரசனிடம் வந்தார்.
"அரசே! நம் நாட்டின் எல்லையில் தங்க வயல் என்று ஓர் ஊர் இருக்கிறது. அங்கே அறிவாளன் என்று ஒரு குடியானவன் இருக்கிறான். பக்கத்து நாடுகளில் நடக்கும் பல திருட்டுக்களை அவன் கண்டு பிடித்துக் கொடுத்திருக்கிறான். அவனை அழைத்து வந்தால் நாம் இந்தத் திருடனைக் கண்டு பிடித்து விடலாம்'' என்று கூறினார்.
பூவேந்தன் இரண்டு காவல் வீரர்களை அழைத் தார். தங்க வயலுக்குச் சென்று அறிவாளன் என்ற அந்தக் குடியானவனை உடனே அழைத்துக் கொண்டு வருமாறு கூறினார்.