(Reading time: 4 - 7 minutes)

09. எனக்கு பிடித்தவை - நெஞ்சத்தில் நீ மட்டும்

Nenjathil nee mattum

ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு விதம்... ஒரு கதையை படிக்கும் போது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள் தோன்றும்... இவை எல்லாம் ஒரே போல இருப்பது இல்லை... இந்த தொடரில் நான் சொல்ல போவது எல்லாம் என்னுடைய ரசனைகள், என்னுடைய எண்ணங்கள்... உங்களின் கருத்துக்கள் இதில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்... அதையும் தெரிந்துக் கொள்ள விழைகிறேன்... உங்களுடைய கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

ந்த முறை நான் எடுத்துக் கொண்டிருக்கும் கதை, கீதா வீரேந்திரன் எழுதிய “நெஞ்சத்தில் நீ மட்டும்’ எனும் கதை.

பின் 90க்களில் ஓவியர் மாருதியின் மனம் மயக்கும் ஓவிய நாயகி அட்டை படத்தில் இருக்க வெளியான தேவியின் கண்மணி பத்திரிக்கையில் நான் படித்த கதை இது.

எளிமையான ஆனால் இனிமையான காதல் கதை என்று சொல்லலாம்.

கதை:

ராஜி பெற்றோரை இழந்து பெரியம்மா கமலம் குடும்பத்துடன் வாழ்பவள். தோற்றத்தில் சற்றே சுமாரானவள் தான் என்றாலும் குணத்திலும் மிகவும் சிறந்தவள்.

கமலமின் மகள் சீதா திருமண நாள் அன்று தன் காதலன் பாபுவுடன் சென்று விட, ராஜி வேறு வழி இல்லாமல் மணமகள் ஆக நேர்கிறது.

மணமகன் பிரகாஷ் பிரசித்தி பெற்ற மருத்துவன். தன் குடும்பத்தினர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பவன். இந்த திருமணமும் கூட அவனின் குடும்பத்தினர் நிச்சயித்த திருமணம் தான்.

கமலமும், அவளின் கணவன் கைலாசமும் செய்த மணமகள் மாறாட்டம் திருமணம் முடிந்த பிறகு பிரகாஷின் குடும்பத்திற்கு தெரிய வர, ஒரே கலாட்டாவாகிறது. பின் ஒருவாறு பேசி, மற்றவர்கள் சமாதானப்படுத்த ராஜியை மட்டும் உடன் அழைத்து செல்ல பிரகாஷின் குடும்பம் சம்மதிக்கிறார்கள்.

பிரகாஷின் குடும்பம், கமலமும் கைலாசமும் தங்களை ஏமாற்றி விட்ட கோபத்தில் ராஜியை விலக்கியே வைக்கிறார்கள். கூடவே பிரகாஷிற்கு தாங்கள் தவறு இழைத்து விட்டதாக மனதினுள் மறுகுகிறார்கள்.

ராஜியும் கூட தான் தோற்றத்திலும் அந்தஸ்திலும் பிரகாஷிற்கு ஏற்றவள் அல்ல என்ற உணர்வுடனே இருக்கிறாள்.

பிரகாஷிற்கு மணமகள் மாறியதில் வருத்தமும் இல்லை சந்தோஷமும் இல்லை. ஆனால் தன் குடும்பத்தினரை இப்படி ஏமாற்றி விட்டார்களே என்ற கோபம் மட்டும் இருக்கிறது.

குற்ற உணர்வுடன் இருக்கும் ராஜி அந்த வீட்டின் சமையலறை பக்கம் மட்டுமே நடமாடுகிறாள். பிரகாஷ் தன் மருத்துவ தொழிலை கவனிக்க தொடங்குகிறான். இப்படி பிரகாஷும் – ராஜியும் நேருக்கு நேர் சந்திக்காமலே ஒரே வீட்டில் வாழ்கிறார்கள்.

நேராக சந்திக்கா விட்டாலும் பிரகாஷை பற்றி காதில் விழும் விஷயங்களாலேயே, ராஜிக்கு அவன் மீது தனி அன்பு தோன்றுகிறது...

பிரகாஷும் தான் திருமணம் செய்துக் கொண்ட ‘பெண்’னை பற்றி அவ்வப்போது யோசித்தாலும் குடும்பத்தினருக்காக எதுவும் கேட்காமல் இருக்கிறான்.

இந்த நிலையில் கமலத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. அதை கேள்வி படும் ராஜி அவளை சென்று சந்திக்க விரும்புகிறாள். ஆனால் பெரியமாவை பார்க்க சென்றால் இந்த வீட்டிற்கு திரும்பி வரக் கூடாது என்று திட்டவட்டமாக சொல்லி விடுகிறார் பிரகாஷின் தந்தை. வளர்ப்பு பாசம் இழுக்க பிரகாஷின் வீட்டை விட்டு வெளியேறுகிறாள் ராஜி.

ராஜி வீட்டை விட்டு சென்றதை பற்றி தெரிந்துக் கொள்ளும் பிரகாஷ் அதிர்ச்சியாகிறான்.

ஆனால் கமலம் அவனுடைய மருத்துவமனையிலேயே அனுமதிக்கப் பட, மீண்டும் ராஜியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இப்பொழுதும் இருவரும் மனம் விட்டு பேசாமலே இருக்கிறார்கள்.

கமலம் மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் ஆகி விட, ஒரு மருத்துவமனையில் நர்சாக வேலைக்கு சேர்கிறாள் ராஜி.

ராஜியின் பிரிவு பிரகாஷை அவனையும் மீறி வருத்த தொடங்குகிறது.

பிரகாஷிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை தவறாக புரிந்துக் கொள்ளும் அவனின் பெற்றோர் அவனுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.

பிரகாஷ் – ராஜியின் சொல்லாத காதல் மற்றவர்களுக்கு தெரிந்ததா இல்லையா, என்ன நடந்தது என்பது மீதி கதை.

கொஞ்சம் யூகிக்க கூடிய கதை தான் என்றாலும் கீதா வீரேந்திரன் தன் கை வண்ணத்தில் கதையை அழகாக கொண்டு செல்கிறார்கள்.

வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் படியுங்கள். படித்தவர்கள் உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

நன்றி!

நந்தினி 

*Image is used for illustration purpose only! Chillzee.in doesn't claim any rights on this image.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.