(Reading time: 5 - 10 minutes)

எனக்கு பிடித்தவை - 10 - சொல்லத்தான் நினைக்கிறேன்

sOLAL THAAN NINAIKIREN

ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு விதம்... ஒரு கதையை படிக்கும் போது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள் தோன்றும்... இவை எல்லாம் ஒரே போல இருப்பது இல்லை... இந்த தொடரில் நான் சொல்ல போவது எல்லாம் என்னுடைய ரசனைகள், என்னுடைய எண்ணங்கள்... உங்களின் கருத்துக்கள் இதில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்... அதையும் தெரிந்துக் கொள்ள விழைகிறேன்... உங்களுடைய கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

ந்த முறை நான் எடுத்துக் கொண்டிருக்கும் கதை, அருணா நந்தினி எழுதிய “சொல்லத்தான் நினைக்கிறேன்’ எனும் கதை.

சமீபத்தில் இன்டர்நெட், டி.வி எதுவும் இல்லாமல் ஒரு தோழி வீட்டில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. கேட்பதற்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும் ஒரு நாளில் எத்தனை மணித்துளிகள் இருக்கின்றன என நான் மீண்டும் உணர்ந்துக் கொண்ட நாட்கள் அவை. தோழிகளுடன் பழைய கதைகள் பேசியே நாளின் முக்கால் பாகம் சென்றாலும், மிச்சம் இருக்கும் நேரத்தில் அவள் வைத்திருந்த பல விதமான புத்தகங்களை படிக்கும் வைப்பு கிடைத்தது.

அதில் ஒன்று தான் இந்த கதை.

ருணா நந்தினியின் கதைகள் பொதுவாகவே எனக்கு பிடிக்கும். இந்த கதையும் அவருடைய பாணியில் அற்புதமாக இருந்தது.

444 பக்கங்கள் கொண்ட கதை என்றாலும், இளவயது கதாநாயகன், நாயகி இருந்தாலும், காதல் என்பதை ஒரு நான்கு ஐந்து பக்கத்தில் மட்டுமே இருப்பது ஆச்சர்யமாக இருந்தது.

அதற்காக கதை போராக செல்லவும் இல்லை.

ஒரு இளம்பெண்ணின் தாய் பாசத்தை மையமாக வைத்த கதை. சில இடங்களில் melodramatic ஆக இருந்தாலும், அதையும் ரசிக்கும் விதத்தில் கொடுத்தது ஆசிரியையின் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

கதை:

பெற்றோர் இல்லாமல், அண்ணன்களின் துணையும் இல்லாமல் ஒரு சிறு குழந்தை நவீனுடன் தனியே வசிக்கிறாள் இந்துஜா.

அந்த குழந்தை இறந்து போன அவளுடைய தங்கையுடையது. ஆனாலும் அவனை தன் குழந்தையாக பாவித்து உயிராக வளர்க்கிறாள். அவளை காதலிப்பதாக சொன்னவனும் குழந்தையின் பொறுப்பை ஏற்க மறுக்கிறான். எனவே நவீனுக்காக காதலையும் மறுக்கிறாள் இந்துஜா.

அவளுக்கு துணையாக இருப்பது அவள் தங்கி இருக்கும் வீட்டு ஓனர் தம்பதிகள் மட்டுமே.

திடீரென ஒரு நாள் நான் நவீனின் பெரியப்பா என சொல்லிக் கொண்டு அவளை தேடி வருகிறான் வித்யாசாகர். இந்துஜாவை நவீனின் அம்மா என தவறாக நினைத்துக் கொள்பவன் அவள் மீது வெறுப்பை வாரி கொட்டுகிறான். அவள் பிரிந்து வந்த கணவன் இறந்து விட்டதாக சொல்பவன் தன்னுடைய சித்திக்காக நவீனை அழைத்து போக வந்திருப்பதாக சொல்கிறான்.

அதிர்ந்து போகும் இந்துஜா, தன் மானசீக மகனுக்காக தங்கையின் அடையாளத்தில் வித்யாசாகரின் வீட்டிற்கு செல்ல முடிவு செய்கிறாள்.

ஏற்காடில் இருக்கும் அந்த பெரிய வீட்டில் வித்யாசாகரின் பெற்றோர், கமலம் - சந்திரமௌலி அவளிடம் அன்பாக நடந்துக் கொள்ள, வித்யாசாகரும், நவீனின் பாட்டி சாரதாவும் அவளை வெறுக்கிறார்கள்.

இந்துஜா நவீனின் அம்மா அல்ல என்பதை முதலிலேயே தெரிந்துக் கொள்கிறார் கமலம். ஆனால் அவளின் உண்மையான பாசம் புரிவதால் அதை பற்றி சொல்லாமல் இருக்கிறார்.

அங்கே வித்யாசகரின் அத்தை மகள் ரோஹிணியை சந்திக்கும் இந்துஜா, அவளிடம் உண்மை அனைத்தையும் ஒப்பிக்கிறாள். எப்படியாவது உண்மையை எல்லோருக்கும் சொல்லி விட வேண்டும் என  முடிவு செய்கிறாள் ரோஹினி.

அதற்குள் இந்துஜா நவீனின் அம்மா இல்லை எனும் உண்மையை தெரிந்துக் கொள்கிறான் வித்யாசாகர். அவளை கோபமாக பேசி அந்த வீட்டை விட்டு போக சொல்கிறான்.

நவீனை பிரிந்து செல்ல மனம் வராவிட்டாலும் வேறு வழி இல்லாமல் செல்கிறாள் இந்துஜா.

தன் அம்மாவை பார்க்க முடியாமல் நவீனிற்கு ஜுரம் வருகிறது. பெரியவர்கள் மூவரும் எத்தனை எடுத்து சொல்லியும் இந்துவை மீண்டும் அழைக்க மறுக்கிறான் வித்யாசாகர்.

நவீனால் அம்மா இல்லாமல் வாழ முடியாது என கமலம் எடுத்து சொல்ல, தான் திருமணம் செய்துக் கொள்ள போவதாகவும், அவனின் மனைவி நவீணிற்கு அம்மாவாக இருப்பாள் என்றும் முடிவு செய்கிறான் வித்யா.

பெரியவர்கள் மூவரும் இந்துஜாவை அவன் திருமணம் செய்துக் கொள்வான் என எதிர்பார்க்க, அவனோ தன் 'ஈகோ'வினால் வேண்டுமென்றே வேறு ஒரு பெண்ணை தேர்வு செய்கிறான்.

அவள் நவீணிற்கு தாயாக இருக்க முடியாது என கமலமும், சாரதாவும் வருத்தப் பட, நிலைமையை சீர் செய்ய முடிவெடுக்கிறாள் ரோஹினி.

அவள் நாரதராய் ஆரம்பித்து வைக்கும் கலகத்தினால் தான் தேர்ந்தெடுத்திருக்கும் பெண் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்றவள் அல்ல என்பதை தெரிந்துக் கொள்ளும் வித்யாவிற்கு, கூடுதலாக இந்துஜாவிற்கு நவீன் மீது இருக்கும் உண்மை அன்பும் தெரிய வருகிறது.

அவள் மீது தான் தேவையே இல்லாமல் வெறுப்பை கொட்டுவதை நினைத்து வருந்துபவன் அவளிடம் மன்னிப்பை கேட்டு, தன் காதலை சொல்கிறான்.

முதலில் தயங்கினாலும், இந்துஜாவும் அவனை ஏற்றுக் கொள்கிறாள்.

சில பக்கங்களே வந்தாலும் நம் மனதை அள்ளிக் கொண்டு போகிறாள் ரோஹினி! அவளின் கலகலப்பும், கலகங்களும் அமர்க்கள படுகின்றன.

அமைதியான ஹீரோயின் இந்துஜா! தன் சொந்த குழந்தை இல்லை என்றாலும் நவீன் மீது அவள் உயிராக இருப்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

இறுதி அத்தியாயத்தில் பல்ப் எறியும் ஹீரோ வித்யாசாகரையும் புரிந்துக் கொள்ள முடிகிறது.

ஒட்டு மொத்தமாக, அருமையான குடும்ப கதை!

வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் படியுங்கள். படித்தவர்கள் உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

நன்றி!

நந்தினி

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:1141}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.