(Reading time: 5 - 10 minutes)

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கீதம் சங்கீதம்....- 14 - தேவி

krishna_and_yashoda_ma

ணக்கம் பிரெண்ட்ஸ்,

கீதம் சங்கீதம் தொடரில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

இந்த முறை கிருஷ்ணா ஜெயந்திக்காக ஒரு பாடல் எடுத்து வந்துள்ளேன். நான் ஏற்கனவே முன்னர் ஒரு பாடலில் சொல்லியிருந்தேன். கிருஷ்ணர் ஜெயந்தி என்பது நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் எப்படிக் கொண்டாடுவோமா அப்படி தான் கிருஷ்ணரை வணங்கும் அனைவரும் கொண்டாடுகின்றனர்.

உலகை காக்கும் நாராயணன் தன் அடியவர்களை காக்கும் பொருட்டு தேவகி, வசுதேவருக்கு எட்டாவது மைந்தனாக பிறக்கிறார். அவரே கம்சனை வதம் செய்யவேண்டும் என்பதால் அதுவரை அவரைக் காக்கும் பொருட்டு வசுதேவரின் நண்பரனான நந்தகோபரிடத்தில் யாரும் அறியாமல் சேர்க்கிறார்.

நந்தகோபரின் இருப்பிடமான துவாரகை கிருஷ்ணரின் வரவில் பெரு மகிழ்ச்சி தோன்றுகிறது. பெரியாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்  தாலப்பருவம் என்று பத்து பாடல்கள் கண்ணனை தொட்டிலிட்டு தாலாட்டுதல் என்று பாடி இருக்கிறார்.

மாணிக்கமும் , வைரமும் இடையில் கட்டி, ஆணிப்பொன் என்பது தங்கத்தில் உயர்ந்த வகை. அதில் தொட்டில் கட்டி கிருஷ்ணன் படுத்து உறங்க பிரம்மன் வீடு செய்தான்.       உலகை அளந்தவனே தாலேலோ என்று பாடுகிறார்.

திருப்பானாழ்வார் திவ்விய பிரபந்தத்தில் பாடிய இரண்டு பாசுரங்கள் அப்படியே கண்ணனை கண் முன் கொண்டு வந்து காட்டும்.

   ஆலமா  மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் 
   ஞால மேழு முண்டான் அரங்கத் தரவின் அணை யான் 
   கோலமாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோர் எழில் 
   நீல மேனி யையோ! நிறை கொண்டதென்  நெஞ்சினையே! 

 

"கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன்
 அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட
 கண்கள் மற்றொன்றினைக் காணாவே."

 

அவர் சொன்னது போல் கண்ணனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணுமோ.?

ழ்வார்கள் பாடியது எல்லாம் கற்பனையில் கண்ணனைக் கண்டு பாடியதே. ஆனால் கண்ணனுக்கு நேரடியாக தாலாட்டு பாடும் பெருமை கிடைத்தது யசோதைக்கு மட்டுமே. உலகையே தன் வாயில் காட்டி யசோதையை மயங்கச் செய்த கண்ணன் கட்டுபடுவதும் அந்த யசோதைக்கு மட்டும் தானே. கண்ணன் தன் வீட்டில் மட்டும் இல்லாமல், ஊரில் உள்ள அத்தனை வீட்டிலும் வெண்ணையை திருடி, அதனால் ஆயர்பாடியில் உள்ளவர்கள் வந்து யசோதையிடம் புகார் செய்த போது, கண்ணனைக் கண்டித்து உரலில் கட்டினாளே யசோதா. இந்த பாக்கியம் அவன் பெற்ற அன்னை தேவகிக்கு கூட கிடைக்கவில்லையே.

அந்த கிருஷ்ணனின் ஆயர் பாடி லீலைகளை யசோதாவிடம் புகார் சொல்வதாக அமைந்த இந்த “தாயே யசோதா” என்ற இந்த பாடல் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் எழுதியது. தமிழில் இவர் எழுதிய பாடல்களில் மிகவும் பிரசித்தம் கண்ணனைக் குறித்த பாடல்கள். அதில் இதுவும் ஒன்று,

தோடி ராகத்தில் அமைந்த இப்பாடலை நம் மதுர குரலோன் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடியதை இங்கே பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.

மகாவிஷ்ணு அலங்கார பிரியர். அதனால் தான் கிருஷ்ணன் அவதாரத்தில் பாலகனாய் இருந்த போதும் கால் தண்டை, கை வளை, கழுத்தில் முத்து ஆரம் அணிந்து தெருவில் வந்தவன், அவனின் குழல் இசைக்கேற்ப நர்த்தனமாடியவனின் செயலில் மயங்கி, பாலகந்தானே என்று அணைக்க, அவனோ வாயில் முத்தம் கொடுக்கிறானே. இப்படி ஒரு பிள்ளையை நான் எங்கும் காணவில்லை யசோதா. 

முதல் நாள் மாலை நேரத்தில், சொந்தமுடன் அருகில் வந்து கொஞ்சி கெஞ்சி பந்து அளவாவது வெண்ணை தந்தால் தான் விடுவேன் என்றான். சரி குழந்தை என்று மடியில் வைத்து அவனின் அழகு முகத்தைப் பார்த்து மயங்கிய எனக்கு வைகுந்தம் முதல் அத்தனை லோகத்தையும் காட்டினானே. இவனா சிறு பிள்ளை என்று வியக்கிறார் ஊத்துக்காடு ஐயர்..

என்ன அழகான வரிகள். அவரின் வரிகளில் அந்த நிகழ்ச்சிகள் அப்படியே கண் முன் வந்து செல்கின்றது. அவனின் லீலைகள் கணக்கில் அடங்காதது. அதை சொல்ல நமக்கு இந்த பிறவி போதுமோ?

இந்த கிருஷ்ணா ஜெயந்தி நன்னாளில் அந்த கிருஷ்ணனை வரவேற்று அவன் செய்யும் ஜாலத்தை ரசித்து, அவனுக்குப் பிடித்த பட்சணங்களை செய்து மகிழ்ச்சியாய் இருப்போம். இந்நாளில் தோன்றும் இந்த சந்தோஷம் நமக்கு என்றென்றும் கிடைக்க அந்த பரமாத்மாவை வணங்குவோம்.

பாடல் வரிகள், பாடல் லிங்க் கீழே கொடுத்து இருக்கிறேன். மீண்டும் ஒரு பாடலோடு விரைவில் உங்களை சந்திக்கிறேன். நன்றி. 

பாடல் வரிகள்

ராகம்: தோடி      

தாளம்: ஆதி

 

பல்லவி

தாயே! யசோதே! – உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே)

அனுபல்லவி

தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே – இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே)

சரணம்

காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க – முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்!
காலசைவும் – கையசைவும் – தாளமோடிசைந்து வர
நீலவண்ணக் கண்ணனிவன் நர்த்தனமாடுகிறான்!
பாலனென்று தாவியணைத்தேன்! – அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் – வாயில் முத்தமிட்டாண்டீ!
பாலனல்லடி! உன்மகன் – ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன்
நாலுபேர்கள் கேட்கச் சொல்ல – நாணமிக வாகுதடீ! (தாயே-)

முந்தாநாள் – அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
வித்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவாகிலும் வெண்ணை – தந்தால் விடுவேனென்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாஸுதேவன் இவன்தான் – அடி யசோதே!
மைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால்
சுந்தர முகத்தைக் கண்டு – சிந்தையுமயங்கு நேரம்
அந்தர வைகுந்தமோடு – எல்லாம் காட்டினானடி! (தாயே யசோதே!)

மீண்டும் சந்திப்போம்.

Geetham... Sangeetham - 13

Geetham... Sangeetham - 15

{kunena_discuss:1092}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.