விநாயகர் சதுர்த்தி சிறப்பு கீதம் சங்கீதம்....- 15 - தேவி

வணக்கம் நட்புக்களே
அடுத்த கீதம் சங்கீதத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இவ்ளோ சுறுசுறுப்பா வந்துட்டேனேன்னு யோசிக்கரீங்கதானே.
இதுவும் ஒரு சிறப்பு கீதம் சங்கீதம் தான். எந்த ஒரு செயல் ஆரம்பிக்கும் முன்னும் முழு முதல் கடவுள் பிள்ளையாரை வணங்கி விட்டுதான் ஆரம்பிக்கின்றோம்.
இன்றைக்கு அந்த பிள்ளையாருக்கு சதுர்த்தி விழா. அவரின் ஒரு பாடலோடு உங்களை சந்திக்கின்றேன்.
விநாயகர் அகவல் ஔவையார் எழுதியது. சங்ககால தமிழ் புலவர்களில் பெண் புலவர் என்றால் அவ்வை தான் அதிகம் தெரிந்து கொண்டு இருக்கிறோம். விநாயகர் மேல் கொண்ட பக்தியால் திருமண வாழ்வில் நாட்டமில்லாமல் சிறு வயதிலேயே முதுமையை வேண்டிப் பெற்றவர். தனக்கு அரிதாகக் கிடைத்த நெல்லிக்கனியை தமிழ் வளர்க்க ஔவைக்கு கொடுத்தான் அதியமான். ஒளவையின் தமிழ் அத்தனை புலமை பெற்றது.
அத்தகைய சிறப்பு பெற்ற ஔவை இயற்றியது விநாயகர் அகவல். இந்த பாடலில் விநாயகரின் உருவம் முதல் குணதிசயங்கள் வரை அழகு தமிழில் கொடுத்து இருப்பார்.
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
இந்த வரிகளின் அழகு அப்பப்பா.. அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் எங்கும் நிறைந்து இருப்பவன் என்ற பொருள் தரும் ஆழமான வார்த்தைகள்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியாரின் வாக்கை மெய்ப்பித்த வரிகள்.
இந்தப் பாடலை நான் திரு.சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரலில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இசைத்தட்டுகள் அறிமுகம் ஆன காலத்தில் பக்தி பாடல்களுக்கு என்று தனி இசைத்தட்டுகள் திரைப் பாடல்களோடு போட்டி போட்டு விற்றது. அதில் பெரும் பங்கு பாடல்கள் திரு. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுடையது என்று சொன்னால் அது மிகையாகது.
அந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் எந்த ஒரு திருவிழாவாக இருந்தாலும் சரி, இல்லை திருமணம் போன்ற விசேஷ வீடாக இருந்தாலும் சரி நம் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரலில்
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு .. என்ற பாடலோடு தான் தொடங்கும்.
சீர்காழி அவர்களும், டி.எம்.எஸ் அவர்களும் இணைந்து அனேக பக்தி பாடல்கள் இசைத்தட்டு வெளியிட்டுள்ளார்கள். இன்றைக்கும் அவை எல்லாம் பசுமையான நினைவுகள்.
சீர்காழி அவர்கள் விநாயகர், முருகன், பெருமாள் , அம்பாள் என்று எல்லா கடவுள்கள் மீதும் பாடல்கள் பாடியுள்ளார்.
அதில் இந்த விநாயகர் அகவல் சற்று வித்தியாசம் தான். காரணம் இதை மெட்டமைத்த விதத்தில் பரதநாட்டியத்திற்கும் ஏற்ற பாடலாக இருப்பது தான் சிறப்பு.
இந்த பாடல் வரிகளே அபிநயம் பிடிக்கும் அளவிற்கு அழகு என்றால், அதன் மெட்டோ தாளத்திற்கும் ஏற்ற வகையில் இருக்கும். அதிலும் சீர்காழி அவர்களின் கம்பீரக் குரல் அந்த வேழ முகம் கொண்ட விநாயகரை இன்னும் கம்பீரமாக காட்டும்.
இன்றைய விநாயக சதுர்த்தி நன்னாளில் இந்த பாடலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
பாடல் வரிகள்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
மீண்டும் அடுத்த கீதம் சங்கீதத்தில் சந்திக்கலாம்.
மீண்டும் சந்திப்போம்.
{kunena_discuss:1092}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.