(Reading time: 3 - 5 minutes)

அழகு குறிப்புகள் # 52 - இளநரையை அகற்றுவது எப்படி?

பொதுவாக முடி நரைப்பது என்பது வயதாவதின் அறிகுறியாகும். ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு கூட நரை முடி இருப்பது காணப்படுகிறது.

 

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.

குடும்ப மரபணுக்கள், அதிக மன அழுத்தம், செயற்கை முடி பராமரிப்பு பொருட்களை அதிகம் பயன்படுத்துவது, அல்ட்ரா வயலட் கதிர்வீச்சு, வைட்டமின்கள் பி 12 மற்றும் டி 3 ஆகியவற்றின் குறைபாடு என சொல்லிக் கொண்டே போகலாம்.

  

இள நரையை அகற்ற நிபுணரை அணுகி உதவிப் பெறலாம். ஒருவேளை இயற்கை முறைகளை முயற்சி செய்ய விரும்பினால், இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்துப் பாருங்கள்.

 

நெல்லிக்காய்

தலை முடி விஷயத்தில் நெல்லிக்காய் பல நன்மைகளை அளிப்பது நம்மில் பலருக்கும் தெரியும்.

முடி நரைப்பதைத் தடுக்க, நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கிளாஸ் தண்ணீரில் சேருங்கள். அதை கொதிக்க விடுங்கள். பிறகு, அதை ஆற அனுமதியுங்கள்.

இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவுங்கள்.

பிறகு எப்போதும் போல கூந்தலை அலசி விடுங்கள்.

 

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் கூந்தலில் உள்ள புரதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், நரைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது.

அது மட்டுமல்லாமல் எண்ணெயில் ஊட்டமளிக்கும் பல பண்புகள் உள்ளன. இது உங்கள் தலைமுடிக்கு மிகவும் நல்லது.

2 ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயை உங்கள் தலையிலும், கூந்தலிலும் படுமாறு தேயுங்கள்.

சில நிமிடங்ள் அப்படியே மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் விட்டு விடுங்கள்.

பின் மைல்ட் ஷாம்பூவினால் அலசிவிடுங்கள். கண்டிஷனரையும் பயன்படுத்துங்கள்.

வாரத்திற்கு மூன்று முறை இதைச் செய்வது நல்ல பலன்களைத் தரும்.

 

கற்றாழை

கற்றாழையை ஹென்னாவுடன் பயன்படுத்தினால், முடி நரைப்பதைத் தடுக்கலாம்.

ஒரு கப் கற்றாழை சாற்றை எடுத்து அதில் ஹென்னாவை சேர்த்து கலக்குங்கள்.

பின்னர் கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் தலைமுடியில் தடவுங்கள்.

அதை அப்படியே ஒரு மணி நேரம் விட்டு விடுங்கள்.

பின்னர் எப்போதும் போல தண்ணீரால் முடியை அலசி விடுங்கள்.

இதை நீங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு முறை செய்யலாம். ஆனால் வாரத்திற்கு ஒரு முறை கற்றாழை சாற்றை மட்டும் தனியாக பயன்படுத்தலாம்.

ஹென்னாவிற்கு பதில் ஆர்கானிக் காபிதூளையும் பயன்படுத்தலாம்.

 

முதல் முறை பயன்படுத்தும் முன் சிறிய முடி கற்றையில் பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான முடிவு வருகிறதா என்று பார்த்து விட்டு செய்யுங்கள்.

 

முயற்சி செய்துப் பாருங்கள்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.