(Reading time: 4 - 8 minutes)

" இந்தக் கேள்விக்குப் பதில் கூகுளில் கிடைக்கவில்லையா?"

" அமாவாசைபற்றி அப்துல்காதரிடம் கேட்கலாமா? அழகைப்பற்றி அந்தகனிடம் கேட்கலாமா? ஏகாதசி பற்றி எவனையோ கேட்கலாமா?

" இரு இரு....அடுக்குமொழி அமர்க்களமாக இருக்கிறதே, நான் சொல்வதையும் சேர்த்துக்கொள்! கணேசனிடம் கல்யாணத்தைப்பற்றி கேட்கலாமா? எப்படியிருக்கு?"

" கணேசா! ரொம்ப தேங்க்ஸ்! வந்த விஷயத்தை மறந்தே போய்விட்டேன், எனக்கு விரைவில் விவாகம் நடக்க ஆசி தரப்போகிறாயா இல்லையா?"

" என் பிறந்தநாளன்று எனக்கேதும் படைக்காமல் பட்டினி போட்டுவிட்டு, மிரட்டல் வேறா?"

" சாரி, சாரி, ஏதோ ஒரு வேகத்தில் அப்படி பேசிவிட்டேன், மிரட்டலை வாபஸ் பெறுகிறேன்..."

" நிருபரே! சென்ற முறையும் இப்படித்தான், எதையெதையோ சொல்லி என்னிடமிருந்து ஆசி பெற்று கல்யாணம் செய்துகொண்டாய்! அதை அரைகுறையாக கைநழவ விட்டுவிட்டு, திரும்பவும் வந்து நிற்கிறாய்? ஆமாம், தாலி கட்டி தாரமாக்கிக் கொண்டவளை, ஏன் தலாக் செய்தாய்?"

" கணேசா! பிரமாதம்! தாலி, தாரம், தலாக்....."

" கிண்டலா? நீ பேசி என்னையும் இழுத்துவிட்டாய்!"

" கணேசா! உன் தாய்மொழி தமிழா? வடமொழியா?"

" உனக்குத் தெரியும், என் தாய் மீனாட்சி, சங்கத்தமிழ் வளர்த்த தென்மதுரையில் பிறந்து வளர்ந்தவள்! என் தம்பி கந்தன், தமிழைப் பேணி வளர்த்தவன், என் உடலில், தும்பிக்கையில்கூட ஓடுவது தமிழ்ரத்தம்! நான் பச்சைத் தமிழன்!"

" அதென்ன பச்சைத் தமிழன், சிகப்புத் தமிழன், கருப்புத் தமிழன்னு கலர் கலரா தமிழனை பிரிக்கிறே?"

" நீங்க சொல்லிக் கொடுத்ததை நான் பேசினால் கிண்டலா? சரி, நீ என் பசியை தீர்க்கப்போவதில்லை, அதோ ஒரு பக்தன் தட்டில் எதையோ மறைத்து எடுத்துவருகிறான், கொழுக்கட்டையாகத்தான் இருக்கும், அவனுக்கு வழியை விடு! விலகிப்போ!"

" ஆங்! அதெப்படி? எனக்கு நான் கேட்டதை தாமதமின்றி கொடு, நான் போய்விடுகிறேன்,"

" சரி, சற்று பொறு! அவன் தரப்போகிற கொழுக்கட்டையை ருசித்து உண்டுவிட்டு, உனக்கு பதில் சொல்கிறேன்........"

" கணேசா! உனக்கு நாட்டுநடப்பு தெரிந்திருக்காது, ஒரு எச்சரிக்கை! தட்டில் அவன் மறைத்து கொண்டு வருவது, நீ நினைப்பதுபோல் கொழுக்கட்டையாக இல்லாமல் கைத்துப்பாக்கியாக கூட இருக்கலாம்....உஷாராயிரு!"

" அடப்பாவிகளா! எனக்கு கல்யாணம் ஆகிறவரையில் நான் உயிரோடிருந்தாகணும், உங்க கொழுக்கட்டையும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம், ஆளை விடுங்க!"

"கணேசா! எங்கே இப்படி தலைதெறிக்க ஓடுகிறாய், சொல்லிவிட்டுப் போ!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.