(Reading time: 13 - 25 minutes)

பொது - நகைச்சுவை கட்டுரை: சிறுகதை எழுதுவது எப்படி? - ரவை

write

நான் ஆசிரியனுமல்ல, நீங்கள் மாணவர்களுமல்ல!

தலைப்பை பார்த்து, நான் ஏதோ சிறுகதை எப்படி எழுதுவதென, எல்லாம் தெரிந்த மேதைபோல, விளக்கப்போவதாக, தவறாக எண்ணிவிடாதீர்கள்!

1970 ஆம் ஆண்டு, ஜனவரி முதல் தேதி, விளம்பரம் ஒன்று, செய்தித் தாளில், பிரசுரமானது. என்ன விளம்பரம் தெரியுமா? " எழுத்தாளர் ஆகவேண்டுமா? சிறுகதை எழுதுவது எப்படி என தெரிந்துகொள்ள வேண்டுமா? உடனே, எங்கள் வகுப்பில் சேர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். கட்டணம் கிடையாது." என்றிருந்தது.

அது மட்டுமா! அந்த வகுப்பு நடக்கும் இடம், என் வீட்டுக்கு மிக அருகில் இருந்தது!

எனக்கு அப்போது முப்பத்தைந்து வயது. திருமணமாகி மூன்று குழந்தைகளின் தகப்பன்!

என் மனைவியின் சகோதரியின் சிறுகதைகள் வாராவாரம் ஏதாவதொரு வார இதழில் வெளியாகிக்கொண்டிருந்தது.

" நீங்களும் பெரிய பேச்சாளர், கவிஞர், இலக்கியவாதி என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்கிறீர்களே! என் தங்கை பெயர், பிரிண்ட்டிலே வார இதழிலே, வருவதுபோல, உங்க பெயர் எங்கேயாவது வந்திருக்கா? அவளுக்கு ஒவ்வொரு கதைக்கும் சன்மானம் கிடைக்குதே, உங்களுக்கு இதுவரையிலும் ஒரு பைசா யாராவது கொடுத்திருக்காங்களா?......."

தினமும் என் மனைவி இப்படி உசுப்பேற்றி நான் பல்லை நறநறவென கடித்துக்கொண்டிருந்தபோது, இந்த விளம்பரம் என் கண்ணில் பட்டது.

வகுப்பில் சேர்ந்த முதல் மாணவன் நான்தான்! ஆசிரியர் யார் தெரியுமா? கல்லூரியிலே, என்னுடன் படித்த நண்பன்!

"டேய்! நீ எங்கடா இங்க வந்தே? இது வீட்டிலே வேலைக்குப் போகாத பொழுது போகாம திண்டாடற பெண்களுக்குடா! கல்யாணம் ஆகிறவரையில் பொழுது போக்கா அவங்க கதை எழுத, சொல்லித்தர, இந்த வகுப்பு நடத்தறாங்க, நீ பெரிய மேனேஜர் உத்தியோகம் பார்க்கிறவன்! உனக்கேன்டா கதையும் கத்திரிக்காயும்?"

" அதை பிறகு சொல்றேன்! நீ எப்படி இங்கே?"

" அதுவா? நானும் பேங்கிலே கேஷியரா வேலை பார்க்கிறேன், உண்மைதான்! ஆனா, படிப்பு முடிச்சு, வேலை கிடைக்காம வீட்டிலே சும்மா இருந்தபோது, கதை எழுத ஆரம்பிச்சேன், பிடிச்சிண்டுடுத்து, பத்து வருஷமா சிறுகதை, நெடுங்கதை எல்லாம் எல்லா வார இதழ்களிலும் வந்தாச்சு! நீ என் பெயரை பார்த்ததில்லே? என் நெடுங்கதை ஒண்ணு, சினிமாவா எடுக்கப்போறாங்கடா!......"

" அப்படியா! கங்கிராட்ஸ்! அதுசரி! இந்த வகுப்பு எதுக்கு நடத்தறே?"

" இந்த இடத்துக்கு சொந்தக்காரி, மாதர் சங்கத்தலைவி! அவங்க சங்கத்திலே இருக்கிற பெண்கள் கேட்டாங்கன்னு இந்த வகுப்பை நடத்தும்படியா, என்னை கேட்டுண்டா! ஞாயிற்றுக்கிழமை காலை எட்டிலிருந்து பத்துவரை! இப்ப, நீ சொல்லு! உனக்கெப்படி திடீர்னு கதை எழுதற ஆசை வந்தது?"

வேறுவழியின்றி, உண்மையை அவனிடம் பகிர்ந்துகொண்டேன்.

" உன் மனைவிக்கு நேர் எதிரிடை என் மனைவி! அவளோடு பேசாமல், எப்போது பார்த்தாலும் நான் எழுதிண்டிருக்கேன்னு, 'எழுதினது போதும். எழுத்துலகத்திலிருந்து ரிடையராகிடுங்க'ன்னு சொன்னா, நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். இது வாரத்துக்கு ரெண்டுமணி நேரந்தானே! ஒத்துக்கொண்டேன்......."

அதற்குள், நிறைய பெண்கள் அங்கு வரவே, என் நண்பன் வகுப்பை துவங்கினான்.

" வணக்கம்! முதல்லே, நீங்க அத்தனை பேரும் சிறந்த எழுத்தாளர்களாக என் வாழ்த்துக்கள். இப்ப, நீங்க ஒவ்வொருவரா எழுந்து, ஏன் இந்த வகுப்பில் சேர்ந்தீங்கன்னு ரெண்டு நிமிஷத்திலே சுருக்கமா சொல்லுங்க!"

வகுப்பில் இருந்த இருபது பேரிலே, எவரும் வாயை திறக்கவில்லை. அவர்கள் அனைவரும் கன்னிப்பெண்கள்! எதற்காக என்னைப் பார்த்தார்களோ, தெரியவில்லை!

" உங்களிலே மூத்தவர், திரு பரத் அவர்கள் முதலில் சொல்வார்" என்று என்னை மாட்டிவிட்டான், நண்பன்!

நீங்களே சொல்லுங்க! உண்மையை நான் சொல்லமுடியுமா? எதையாவது பேசி சமாளிக்கவேண்டிய கட்டாயம்!

" நம்ம மாநில அமைச்சர்களில் சிலர் பெயரைக்கூட அறியாதவர்கள் இருக்கிறார்கள், இந்த நாட்டில்! ஆனால், படிக்கத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் உங்க பெயர் தெரியும் ஏன்னா, நீங்க ஒரு எழுத்தாளர்! இந்தப் புகழ் எனக்கும் கிடைக்கணும்னு ஆசை! அதற்காகத்தான்..........."

வகுப்பே கைதட்டி மகிழ்ந்தது. நண்பனுக்கும் மகிழ்ச்சி!

வகுப்பு முடிந்தபிறகு, நண்பன் என்னை தனிமையில் மடக்கினான். "ஏன்டா! இன்னிக்கி இங்க வரவரையிலும் என்னைப்பற்றி ஒண்ணுமே தெரியாதவன், என்னமா டூப் அடிச்சு சமாளிச்சே! இந்த திறமை எழுத்தாளனாக மிகவும் அவசியம். ஒழுங்கா வாராவாரம் வந்துவிடு! உன்னை பெரிய ரைட்டரா ஆக்கிக் காட்டறேன்"

அவன் தந்த உற்சாகமோ, என்னவோ, ஆபீஸிலே வேலை செய்யும்போதுகூட, கதை எழுதறதைப் பற்றியே சிந்தனை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.