(Reading time: 13 - 25 minutes)

எங்க ஆபீஸிலே யாராவது இந்த முயற்சியில் எனக்கு உதவி செய்யமுடியுமா என யோசித்தேன். ஆங்! லைப்ரரி செயலாளரை அணுகினேன்.

"பரத்! முதல்லே, வார இதழ்களில் வருகிற சிறுகதைகளைப் படி! ஜோக்ஸ்களையும் படி! ஏன்? எது கைக்கு கிடைத்தாலும் அவைகளைப் படி! படிக்கிற ஹேபிட்டை முதல்லே ஆரம்பிச்சிக்கோ!"

நல்ல யோசனையாகப்பட்டது. படிக்கத் துவங்கினேன்.

தற்செயலாக, நான் மனைவியுடன் அவள் சகோதரியின் வீட்டுக்கு செல்லும் சந்தர்ப்பம் வந்தது. என் மனைவி, அவள் தாயுடன் பேசிக்கொண்டிருந்த சமயம் பார்த்து, நான் எழுத்தாள சகோதரியை சந்தித்து, உதவி கேட்டேன்.

" மாமா! முதல்லே, எழுதுகிற ஹேபிட்டை ஆரம்பியுங்க! எதைப்பற்றி வேண்டுமானாலும், எழுதுங்க! மனசுக்குள்ளே நம்ம புராணங்களிலே வருகிற கதைகளையெல்லாம் ஞாபகப்படுத்திக்கொண்டு, அதை நீங்க எழுதுங்க! ஒருமாசத்திலே, நீங்க எக்ஸ்பர்ட் ஆகிடுவீங்க!"

றுநாள், அலுவலக வேலையா, பம்பாய் (இன்றைய மும்பை) சென்றேன். மாதுங்கா சர்க்கிளிலிருந்து, சையானுக்கு வழியிலிருந்த கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே, நடந்துபோய்க் கொண்டிருந்தேன். பின்னாலிருந்து, யாரோ என்னை கைதட்டி அழைப்பதுபோல், கையொலி கேட்டதும், திரும்பிப் பார்த்தேன்.

நிறைய மக்கள்! என்னை யாரும் அழைத்ததாக தெரியவில்லை. 

திரும்பி நடந்தேன். மீண்டும் அதே கையொலி!

திரும்பினேன். என்னுடன் நடந்துகொண்டிருந்தவர், 'களுக்'கென சிரித்தார். அவரைப் பார்த்தேன்.

" பம்பாய்க்கு புதுசா?"

"ஆமாம்!"

" அதுதான் கையொலி கேட்டு திரும்பி பார்க்கிறீங்க! உங்களுக்கு 'தம்பாக்கு' பழக்கம் உண்டா?"

" நான் எந்த வம்புக்கும் போகமாட்டேன்......"

" தம்பாக்கு என்பது புகையிலையின் ஒரு வடிவம்! இந்த ஊரிலே கீழ்த்தட்டு மக்களிடையே ஒரு பழக்கம். தம்பாக்கு என்கிற புகையிலையை இடதுகை உள்ளங்கையிலே எடுத்துவைச்சிண்டு அதிலே கொஞ்சம் சுண்ணாம்பு கலந்து வலதுகையால் நன்றாக இரண்டையும் கலந்து, அந்த கலவையை வலதுகையால் தட்டி, தட்டி, மேலேயுள்ள சுண்ணாம்பை ஊதிவிட்டு, கையிலுள்ளதை உருட்டி வாய்க்குள் ஒரு பக்கமாக ஒதுக்கிக்கொண்டு, ஊறுகிற உமிழ்நீரை வழியெல்லாம் 'தூ, தூ'ன்னு துப்புவார்கள்.............."

இந்த சம்பவம் என் மனதில் ஆழமாக பதிந்தது. சென்னை திரும்பியதும், ஒரு தபால்கார்டில் (இப்பொழுதெல்லாம் எவரும் அதை அதிகமாக பயன்படுத்துவதில்லை) ஒரே ஒரு வார்த்தையில் எழுதி குமுதம் வார இதழுக்கு அனுப்பினேன்.

'பம்பாயில் சாலையில் கைதட்டினால் திரும்பிப் பார்க்காதீர்கள்! தம்பாக்கு உருவாகிறது!'

வேடிக்கை என்னன்னா, அதை எந்தப் பிரிவில் வகைப்படுத்துவது? ஜோக்ஸ்னு சொல்லமுடியாது, கதைனு கூறமுடியாது........

அனுப்பியபிறகு, நம்பினால் நம்புங்கள்!, என்னவோ அது அடுத்த வார இதழிலேயே பிரசுரமாகி, எல்லோரும் படித்து, ரசித்து, தெரிந்தவர் தெரியாதவர் எல்லோரும் நான் போகுமிடமெல்லாம் கைகுலுக்கி பாராட்டுவதுபோலவும், கற்பனை!

கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பிரச்னைகளின் அழுத்தத்தில், அதை மறந்தே போனேன்.

ஒருநாள், ரயில்வே நிலயத்தில் கூட்டத்தில் ஒருவனாக ரயிலுக்காக காத்திருந்தபோது, நண்பன் ஒருவன் கட்டிப்பிடித்து, கைகுலுக்கி, சுற்றியிருந்தோர் காதில் விழும்படியாக " கங்கிராட்ஸ்! குமுதம் இதழிலே நீ எழுதிய ஜோக் படிச்சேன். நல்லாயிருந்தது. எப்போடா நீ எழுத்தாளன் ஆனே?"

என்றான்.

நான் திருதிருன்னு விழித்தேன். உடனேயே சமாளித்தேன்.

" எப்பவாவது ஒரு தடவை தமாஷா எழுதுவேன். ஆனா எழுதியனுப்பறதை, உடனே பிரசுரிச்சிடுவாங்க......."

என்று பெருமையாக சொல்லிக்கொண்டேன்.

அன்று ஆபீஸிலும் என்னை அதிகம்பேர் பாராட்டினர். எனக்கு முதலில், என் கண்ணால் குமுதம் இதழை பார்த்து, அதில் என் பெயரையும் படித்து, ஓடிப்போய் என் மனைவியிடம் காட்டி பெருமையையும் சந்தோஷத்தையும் அவளுடன் பகிர்ந்துகொள்ள துடித்தேன்.

அன்றுமாலை, கையில் குமுதம் இதழுடன், வீட்டுக்குள் பெருமிதமுடன் நுழைந்தேன். 

என்னை முதலில் பார்த்தது, இல்லை, என்கையிலிருந்த குமுதம் இதழை பார்த்தது, என் மனைவிதான்!

" அதை காசு கொடுத்து வாங்கினீங்களா? வேஸ்ட்! கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம் இப்படியா கரியாகணும்?"

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. 

" குமுதம் ஆபீஸிலிருந்து இதழும் மணியார்டரிலே ஐந்துரூபாய் பணமும் வீட்டுக்கு மத்தியானமே வந்தாச்சு! நீங்க வேறு எதுக்காக காசு கொடுத்து வாங்கினீங்க?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.