(Reading time: 13 - 25 minutes)

காற்றுப் போன பலூனாக, என் உற்சாகமும் ஆனந்தமும் கரைந்து காணாமற்போனது.

என் மனைவியின்மீது எனக்கு வருத்தமில்லை. காரணம், பணத்தின் அருமை, நான் சம்பாதிக்கிற குறைவான வருமானத்திலே குடும்பத்தை நடத்துகிற கஷ்டம் அவளுக்குத்தானே முழுவதும் தெரியும்!

அதை விடுங்கள்! 

அந்த ஒரு வார்த்தை பிரசுரமானது, எனக்கு தந்த புத்துணர்ச்சியை, தன்னம்பிக்கையை, உற்சாகத்தை, அஸ்திவாரமாக்கி நான் தொடர்ந்து எழுதினேன்.

அந்தக் காலத்தில், போதிய தபால்தலையுடன் கதைகளை அனுப்பினால், பிரசுரத்துக்கு ஏற்கப்படாதவைகளை திருப்பி அனுப்பப்படும்.

நான் புத்திசாலித்தனமாக சிந்தித்தேன். நான் எழுதுகிறவைகளை ஒரு இதழ் ஏற்காவிட்டாலும், அதே பிரதியை மற்ற இதழ்களுக்கு அனுப்ப ஏதுவாக, திருப்பி அனுப்ப போதிய தபால் தலையுடன் அனுப்புவேன்.

நாம் ஒன்று நினைக்க, தெய்வம்....!

கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்கு, நான் அனுப்புகிற கதைகள் அனைத்தும், திரும்பி வந்தன. 

" இத பாருங்க! நான் உங்களை கதை எழுதச்சொன்னது, என் தப்புதான்! மன்னிப்பு கேட்டுக்கிறேன். போதும்! எனக்கு அவமானமா இருக்கு. நீங்க இனிமேல் எழுதாதீங்க! எழுதினாலும், திரும்பிவரத் தேவையில்லை........."

" ஏன் இவ்வளவு கோபம்? என்னாச்சு?"

அந்த காலத்தில், நான் நங்கநல்லூரிலே தனிவீட்டிலே வசித்தேன். தபால்காரன், தினமும், ரெண்டு தடவை, கதவைத் தட்டி, தபால்களை கொடுப்பான்.

" தினமும் தபால்காரன் உங்க கதைகளை கொடுக்கிறபோது, 'ஏம்மா! ஐயா! கதை எழுதறவரா? நல்ல கதையா எழுதச் சொல்லுங்கம்மா! பாவம்! அவர் அனுப்புகிற அத்தனை கதைகளும், திருப்பி உடனுக்குடன், சுவற்றிலே அடிக்கிற பந்துபோல, வருகிறதை பார்க்கிறபோது, மனசுக்கு கஷ்டமாயிருக்கும்மா!'ன்னு சிரிச்சிண்டே சொல்கிறபோது, அவமானத்திலே கூனிக்குறுகிப் போகிறேன், ப்ளீஸ்! போதும். வந்த ஒரு ஐந்து ரூபாய்க்கு, நூறு ஐந்து ரூபாய் தபால்தலை வாங்கியே வீணாக்கியிருக்கீங்க!"

அவள் சொன்னதிலுள்ள நியாயம் எனக்கு புரிந்தது.

நாலு மாதம் பல்லைக் கடித்துக்கொண்டு, கையிலே பேனாவை எடுக்காமல் சமாளித்தேன்.

" பரத்! நீ பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், கவிமணி, நாமக்கல்லார் கவிதைகள் மனப்பாடமா சொல்லுவியே, கவிதை எழுதி அனுப்பு. கட்டாயமா போடுவாங்க!" என்று நண்பன் ஒருவன் உசுப்பிவிடவே, மனைவிக்குத் தெரியாமல், ஒரு தபால்கார்டில், மூதறிஞர் ராஜாஜியை புகழ்ந்து, ஒரு எட்டு வரி கவிதையை எழுதி 'கல்கி' இதழுக்கு அனுப்பினேன். என் அதிர்ஷ்டம், அந்த சமயத்தில் ராஜாஜியின் பிறந்தநாள் வந்தது. 

என் கவிதையும் பிரசுரமாகி, இதழோடு ஐந்துரூபாய் பணமும் வீடுவந்து சேர்ந்தது.

மனைவி என்ன சொல்லப்போகிறாளோ என்ற அச்சத்தோடு இருந்தேன்.

" சந்தோஷமா இருக்குங்க! நீங்க இனிமேல் கவிதை எழுதி அனுப்புங்க, தபால்கார்டிலே."

அவளுடைய எச்சரிக்கை கலந்த பாராட்டைக் கேட்டு பூரித்துப்போனேன்!

கவிதைகளைவிட, கதைகளுக்குத்தான் பிரசுரமாகும் வாய்ப்பு அதிகமென்பதால், மனதிலேயே பல கதைகளை எழுதி எழுதி பழக்கிக்கொண்டேன்.

ஒருகட்டத்தில், நம்பிக்கை பிறந்தது. ஒருபக்க கதைகளை அப்போது குமுதம் நிறைய பிரசுரித்துவந்தது.

ஒருபக்க கதை எழுத ஆரம்பித்து, அது இரண்டரை பக்கங்களில் முடிந்தது. ஆனால், என் அபிப்பிராயத்தில், மிக நல்ல கதை! 

வருவது வரட்டும் என, துணிந்து அதை குமுதம் இதழுக்கு அனுப்பினேன். ஞாபகமாக, திருப்பியனுப்ப தபால்தலை வைக்காமல் அனுப்பினேன். பிரசுரமானால் மகிழ்ச்சி, ஆகாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களே குப்பையில் போட்டுக்கொள்ளட்டும்.

அதிர்ஷ்டம் வந்தால், கூரையை பிய்த்துக்கொண்டுவருமாமே!

அடுத்த வார இதழிலேயே, என் கதை பிரசுரமாகி, வீட்டுக்கு இதழோடு பணமும் வந்தது.

இது தெரியாமல் நான் ஆபீஸிலிருந்து வீடு திரும்பியதும், என் மனைவி முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, " என்ன! எனக்குத் தெரியாமல் கதை எழுதி அனுப்பிக்கொண்டிருக்கீங்க போலிருக்கே!......."

நான் தபால்தலை அனுப்பவில்லையே, ஏன் திரும்பி வந்தது? என விழித்தேன்.

மெதுவாக என்னை நெருங்கி என் மனைவி என் கன்னத்தில் ஒரு 'இச்' பதித்தாள்!

என்ஆச்சரியம் கரை கடந்தது.

"ஆமாம்! நீங்க ஆபீஸ்க்கு ரயிலில்தானே போறீங்க, 18ஆம் நம்பர் பஸ்ஸிலே நடந்தது உங்களுக்கு எப்படி தெரியும்?"

குழப்பம் பயமாக மாறிக்கொண்டிருந்தது. மனைவிக்கு திடீர்னு ஏதோ மனோவியாதியோ?

" கதை சூப்பர்! படிக்கிறபோதே, நான் அழுதுவிட்டேன். உங்களிடம் திறமையிருக்குங்க! நீங்க பாருங்க! இந்தக் கதைக்கு பாராட்டுக் கடிதம் வாசகர்களிடமிருந்து குவியப்போகுது பாருங்க!"

அப்பாடா! நீண்ட பெருமூச்சுடன், முகத்தில் சிரிப்பை காட்டினேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.