(Reading time: 3 - 5 minutes)

மகளிர் தின சிறப்பு கட்டுரை -பாரதியும் பெண் விடுதலையும் - ரவை

ருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற கவிஞன் மகாகவி பாரதி!

அவன் நாட்டு விடுதலையையும் பெண் விடுதலையையும் முகத்தின் இரு கண்களாக நம்பினான்.

பெண்கள் தினத்தன்று, முண்டாசுக் கவிஞனை நினைக்காமல் இருக்க முடியுமா?

 "பெண்ணுக்கும் ஞானத்தை வைத்தான்-புவி

 பேணி வளர்த்திடும் ஈசன்!

 மண்ணுக்குள்ளே சிலமாந்தர்-நல்ல

 மாதர் அறிவை கெடுத்தார்!"

 இதைவிட தெளிவாக, நேரிடையாக, பெண்களின் நிலையை எவரேனும் கூறியுள்ளனரா?

 'பெண் விடுதலை' எனும் தலைப்பிலே எழுதிய பாடலின் இறுதியில், உறுதியாக உரைத்தான்:

 'பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால்

பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை!'

 காணிநிலம் வேண்டுமென பராசக்தியிடம் கேட்டபோது, இறுதியாக, அதற்கான காரணத்தை கூறும்போது, தனது பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தை பாலித்திட வேணும் என்றவன், அத்தகைய பாடல் எழுத, அவனுக்கு, தன் பக்கத்தில் ஒரு பத்தினி பெண் வேண்டும் என்கிறான்.

 தாயின் மாண்பு பற்றி பேசும்போது,

'உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை

உமையவள் என்றறியீரோ? உணர்ச்சி கெட்டீர்?'

 சிகரமாக, தன்னை எழுத வைப்பதே, தனக்குள்ளே வாழும் 'மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி!' என்று பெண் தெய்வம் பராசக்தி தனக்கு முதலும் முடிவுமான தெய்வம் என்று முரசறைகிறான்.

 'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்-அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்!' என்று பெண்களுக்கு சம உரிமை கோரி குரல் எழுப்பிய முதல் தலைவன் பாரதியே!

 அத்துடன் நிற்காமல், 'பூணுநல்லறத்தோடு இங்கு போந்து நிற்பது தாய்சிவசக்தி' என்கிறான்.

 'மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையை கொளுத்துவோம்' என்றும்,

'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள்

புரியவந்தோம்!' என்று ஓங்கி குரல் தந்தான், குன்றின்மேல் ஏறி!

 ' பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா-பெண்மை வெல்கவென கூத்திடுவோமடா!' என ஆடிப் பாடி மகிழ்கிறான்.

 அவனுடைய கட்டுரைகளிலும் கதைகளிலும், விதவைத் திருமணத்தை வலியுறுத்துகிறான். குடும்பச் சொத்தில், பெண்ணுக்கும் பங்கு வேண்டும் என வலியுறுத்தினான்.

 அவனுடைய வருத்தமெலாம், பெண் விடுதலைக்கு சில பெண்களே எதிரிகளே இருப்பதுதான், என்கிறான்.

 பாரதியின் கனவு பலித்ததா? பெண்கள் முழு விடுதலை பெற்றனரா?

 இன்னமும் இல்லை என்பதோடு, இந்த நிலை, உலகமுழுவதும் உள்ளது வேதனைக்குரியது.

 இன்று பெண் சாதனையாளர்கள் அதிகம் பேர் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர்!

 உதாரணமாக, பத்தாண்டுகள் முன்பு, ஏழு பெண்கள் கூடி ஆரம்பித்த 'சில்சீ' வெற்றிநடை போடுகிறது!

 பாரதி கண்ட சமுதாயத்தை நிறுவ, தங்கள் பங்கை செலுத்த எல்லா பெண்களுக்கும் வாய்ப்பு தருகிறது!

 சில்சீ வாழ்கவென கூத்திடுவோமடா-

சில்சீ வெல்கவென

கூத்திடுவோமடா!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.