(Reading time: 6 - 12 minutes)

உன் குத்தமா? என் குத்தமா? யாரை.. நாங் குத்தஞ்சொல்ல..? - தங்கமணி சுவாமினாதன்

Gender equality

ட்டு வயதேயான மகீ என் எதிர்வீட்டுச் சிறுமி.படு சுட்டி.மூன்றாம் வகுப்பு படிப்பவள்.

என்னுடைய குட்டித் தோழி.தினமும் பள்ளி விட்டு வந்ததும் பாட்டீ என்று கூப்பிட்டுக்கொண்டே என் வீட்டுக்கு வந்து அன்று வகுப்பில் நடந்தவற்றையெல்லாம் சொல்லிவிட்டு கற்றுக்கொண்டு வந்த சின்னச் சின்ன விளையாட்டுக்களையெல்லாம் எனக்கு சொல்லித்தருவாள்.

ன்று நெடு நேரம் ஆகியும் மகீ வரவில்லை.நானும் அவளுக்கு உடம்பு கிடம்பு சரியில்லையோ..பிறகு கேட்டுக் கொள்ளலாம் என இருந்து விட்டேன்.சிறிது நேரம் கழித்து அவளே வந்தாள்.முகம் வாட்டமாக இருந்தது.

என்ன மகி குட்டி என்னாச்சு?....இது நான்..

பாட்டீ..எனக்கு ஒரு சந்தேகம்...இது மகி..

என்ன சந்தேகம் கேளுப்பா..

பாட்டீ...இன்னிக்கு ஆட்டோல என்ன நடந்துது தெரியுமா..?(ஆட்டோவில் பள்ளி சென்று வருபவள்)

என் அவசர புத்தி சட்டெனெ எங்கெல்லாமோ போய்விட்டது..ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் (சிலர்தான்) ஆட்டோவில் வரும் பள்ளிச் சிறுமிகளை அருகே  உட்கார வைத்துக்கொள்வது சிறுமியின் தொடையில் கைவைப்பது..இடது கையால் தன்னோடு அணைப்பது,திருப்பங்களில் வண்டியைத் திருப்பும் போது பெண்குழந்தைகளை தன் மீது சாய வைப்பது போன்ற கீழான வேலைகளைச் செய்கிறார்கள்.அது போல் நடந்திருக்குமோ என்று நினைத்தது.கொஞ்சம் பதட்டப் பட்டது.

பதற்றத்தை குரலில் காட்டாமல் என்ன நடந்தது மகீ என்றேன்.

ஏம் பாட்டீ..கேள்ஸ்ன்னா மட்டமா..?

யார் சொன்னது அப்பிடி..கூப்பிடு அவங்கள ரெண்டு வக்கறேன்..இது நான்..

இல்ல பாட்டீ..எங்க ஆட்டோ அங்கிள் இருக்காரில்ல அவரு எப்பவும் ஆட்டோல பாய்ஸ்ஸ மட்டும் சீட்டுல ஒக்கார வைக்கிறாரு.கேள்ஸ் நாங்கெல்லாம் கீழ பாய்ஸ்ஸுக்கு காலடிலதான் ஒக்காரணும்.அப்பிடி ஒக்காந்தா பாய்ஸ்ஸோட ஷூ எங்க முதுகிலயும் ஒக்கார்ர எடத்துலயும் பட்டுக்கிட்டே இருக்கு.மொழங்காலால இடிக்கிறாங்க..பிரேக் போட்டா அவங்க ரெண்டு கையயும் எங்க தோள் மேல வெச்சு அழுத்தறாங்க. திருப்பத்துல்லல்லாம் பாய்ஸ்ஸுங்க எங்க ஏல விழறாங்க..புடிக்கவே இல்ல பாட்டி...ஏன் நாங்க கேள்ஸ் மட்டும் சீட்டுலயே ஒக்காரக் கூடாதா?....

தினமு இப்பிடித்தான் நடக்கமா?...இது நான்..

ஆமா பாடீ..

நீங்கெல்லாம் டிரைவர் அங்கிள கேக்கவே இல்லியா?

இன்னிக்க் கிருத்திகா அக்கா(ஒன்பது வயது)கேட்டிச்சு..ஏன் அங்கிள் நாங்க மட்டும் எப்பவும் பாய்ஸுக்குக் கீழதான் ஒக்காரணுமா?சீட்டுல ஒக்காரக் கூடாதா?அப்பிடின்னு..

அதுக்கு அவரு என்ன சொன்னாரு..?

அதுக்கு ஆட்டோ அங்கிள் என்ன சொன்னாரு தெரியுமா.?வாய மூடு..நீங்கெள்ளாம் பொட்டச்சிங்க.. என்னிக்கும் ஆம்பளைக்களுக்குக் கீழதான்.. ஆம்பளைங்கதான் ஒசத்தி.. அவங்க காலடிலதான் நீங்க கெடக்கணும்..அப்பிடின்னு சொல்லிட்டு கெட்ட வார்த்த சொல்றாரு..பாய்ஸெல்லாம் கைய தட்டி..சிரிக்கிறாங்க பாட்டீ..கிருத்திகா அக்கா அழுதுட்டாங்க..ஏம் பாட்டீ..பொம்பளைங்கன்னா மட்டமா?ஆம்பளைங்கதான் ஒஸ்தியா?

என்ன கொடுமை இது?குழந்தைகளின் மனம் என்பது உழுது போடப்பட்ட விளை நிலம். அதில் எதை விதைக்கிறோமோ அதுவே முளைக்கும்.அந்த பிஞ்சு நெஞ்செங்களில் இப்படியா நஞ்சை விதைப்பார்கள்?.ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஆண்குழந்தைகள் வளர ஆரம்பிக்கையிலேயே சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டியது நம் கடமை. ஆனால் இந்த ஆட்டோக்காரர் நஞ்சை அல்லவா விதைத்திருக்கிறார்.என்ன ஆண்கள் இவர்கள்?

மகி குட்டி..ஆட்டோ அங்கிள் சொன்னது கொஞ்சம் கூட நிஜமில்ல.அம்பளையும் பொம்பளையும் சமம் தான்...அவர் கிடக்கிறாரு விடு என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தேன்.ஆனாலும் என் மனம் சமாதானம் அடையவில்லை. 

தி காலத்திலிருந்தே பெண்கள் அடிமைகளாகவும் போகப் பொருட்களாகவுமே சித்தரிக்கப் பட்டு அவ்வாறே நடத்தப்பட்டு வந்ததும் நாமறிந்ததே.னாகரிகம் வளர வளர ஆண்களின் சிந்தனை மாறிவருவதாகவே நாம் நினைக்கிறோம். ஆனால் அவ்வாறு ஆண்கள் மாறி வருகிறார்களா? பெண்களுக்கான சுதந்திரம் முழுமையாக கிடைத்து விட்டதா என்று பார்த்தால் அது சந்தேகமாகவே இருக்கிறது.

ஒரு மாடு..அதன் சொந்தக்காரன் அதை மேய்ப்பதற்காக புல்வெளிக்கு ஓட்டிவருகிறான். புல்வெளியில் ஒரு முளைக்குச்சியை அடித்து மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் மறு முனையை அந்தமுளைக்குச்சியில் இறுகக் கட்டுகிறான்.தன்பாட்டுக்கு மற்ற அலுவலைப் பார்க்கப் போய்விடுகிறான்.இப்போது மாடு குச்சியின் அருகே இருக்கும் புல்லை மேய்கிறது.கொஞ்சம் நகர்ந்து மேய்கிறது..இன்னும் கொஞ்சம் நகர்ந்து மேய்கிறது.இங்கு  நம்மை அடிக்கவோ வண்டியில் பூட்டவோ..தார்க்குச்சியால் குத்தவோ யாரும் இல்லை நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக எண்ணி தன் இஷ்டப்படி படுத்துக்கொள்கிறது..உண்டவற்ரை மீண்டும் வாய்க்குக் கொண்டுவந்து அசைபோடுகிறது..கண்களை மூடி உறங்குகிறது.மீண்டும் எழுந்து மேய்கிறது.கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்று மேய்கிறது.எல்லாம் கயிறின் நீளம் முடியும் வரைதான். கயிற்றின் நீளம் முடிந்துவிட்டால் அதனால் அடுத்த அடிகூட எடுத்து வைக்க முடியாது.

விலுக்கென்று முளைக்குச்சி மாட்டின் கழுத்தைப்பிடித்து இழுக்கும்.அத்தோடு அந்த எல்லையோடு மாட்டின் சுதந்திரம் சரி.மாட்டின் சுதந்திரம் போல்தான் பெண்களின் சுதந்திரமும்.பிறந்தவுடன் தந்தைக்கு,பின்னர் சகோதரனுக்கு,பின் கணவனுக்கு,கடைசியில் பெற்ற பிள்ளைக்கு என அடங்கியே வாழவேண்டியுள்ளது. பெண்கள் தங்கள் இஷ்ட்டப்படி புடவை வாங்கலாம்,நகைகள் வாங்கலாம் மளிகை வாங்கலாம்,உணவு தயாரிக்கலாம்..இதைத்தவிர பெரிய அளவில் எந்த முடிவையும் எடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இருக்கிறதா? ஏதாவது பெரிய அளவில் முடிவெடுக்க வேண்டிய நிலையில் வீட்டில் ஆண்கள் பெண்களின் யோசனையையும் கேட்பதுபோல் கேட்பார்கள்.ஆனால் முடிவு என்னவோ ஆண்கள் எடுப்பதுதான்.பால்காரருக்கு மாதப் பணம் கொடுக்கும் பெண்கள் வீட்டில் ஆண்களை கேட்காமல் டொனேஷன் கேட்டு வருபவர்களுக்கு கொடுத்துவிட முடியுமா?

எனக்குத் தெரிந்த ஒரு பெண்..தன் கண்வர் தன்னை கைனீட்டி அடிப்பதைப் பெருமையாகச் சொல்லுவார்.அவருக்கு இல்லாத உரிமையா?அடிக்கிறதும் அவரே கட்டி அணைப்பதும் அவரே..தொட்டுத் தாலி கட்டினவன் அடித்தால் என்ன அவரு ஆம்பள என்பார்.எனக்கு சிரிப்பு வரும்..என்ன ஒரு அடிமைத் தனம்.இதே உரிமையுள்ள மனைவி கட்டிய கணவனை ஓங்கி ஒரு அறைவிட்டு பின்னர் கட்டி அணைத்தால் கணவன் சமாதானம் ஆகிவிடுவாரா?தான் ஒரு ஆண் என்னும் அகந்தை எழும்பாதா?

இப்படி எழுதுவதால் நான் ஒரு பெண்ணியவாதி என்று நினைக்கவேண்டாம்.நானும் ஒரு சாதாரண சராசரி பெண்தான்...பெண்கள் முழு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நம்புகிறார்களா?.ஆண்கள் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டதாக பசப்புகிறார்கள்.

முழு சுந்திரம் உண்மையில் கிடைத்த பெண்கள் ஆசீர்வதிக்கப் ப்பட்டவர்கள்.

அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

னீஸ்வரனை குறிப்பிட்ட எல்லை தாண்டிச் சென்று தரிசிக்கவும் மலைமேல் இருக்கும் கடவுளின் கோயிலுக்கு கோயில் வாசல் வழியாகச் சென்று வழிபடவும் சுதந்திரம் கேட்டு போராட வேண்டிய னிலையில் பெண்கள் இருக்கும்போது..ஒரு ஆட்டோ டிரைவர் பெண்களை அடிமைகளாக ஆண்களின் காலடியில் கிடக்கவேண்டியவர்களாக சொல்லுவதும் நினைப்பதும்....என்ன சொல்ல?...

பெண்களைச் சமமாக கருதும் ஆண்களும் உண்டுதான்.அவர்களுக்கு நன்றி.

புறையோடிப்போன இந்த பெண்ணடிமை எனும் நாச எண்ணம் இனி வரும் சந்ததிகளின்

நெஞ்சுக்குள் புகாமல் அவர்களை நல் வழிப்படுத்த வேண்டியது இதைப் படிக்கும்

இளம் தலைமுறைப் பெண்களே உங்கள் கைகளில்தான் உள்ளது.

மிக அதிகமாக எழுதிவிட்டேனோ?என் எண்ணத்தைச் சொன்னேன்...உங்களுக்கு ஒத்துப்போனால் சரி..இல்லாவிட்டால் என்னை தவறாக நினைக்கவேண்டாம்..நன்றி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.