(Reading time: 6 - 11 minutes)

தற்கொலை தீர்வாகுமா? - தங்கமணி சுவாமினாதன்

suicide

நீங்களே சொல்லுங்கள்..இது சரியா..?

வள் வைஷ்ணவி அவன் ராகேஷ்.காதலர்களாய் இருந்து வீட்டினை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்தவர்கள்..ஐ.டி துறை ஊழியர்கள்.கணிசமான சம்பளம்.லக்சுரி ஃப்ளாட் ஒன்றில் குடியேறி குடித்தனம் செய்ய ஆரம்பித்தவர்களுக்கு வாழ்க்கை ஆரம்பத்தில் அடிக்கரும்பு போல் இனிக்க இனிக்கத்தான் இருந்தது.பெற்றவர்களும் உடன் பிறப்புக்களும் மற்றவர்களும் உற்றவர்களும் உறவில் இல்லாததன் தாக்கம் சிறிதும் தெரியவில்லை. எல்லாம் ஒரு குழந்தை பிறக்கும் வரைதான். அது என்னவோ காதலிக்கும் போது காதலனுக்குக் காதலியின் நிறைகள் மட்டுமே கண்ணுக்கும் மனதுக்கும் தெரியும் போலும்.அது போலவே காதலிக்கு காதலனின் நிறைகள் மட்டுமே தெரியும்போலும்.ஆனால் மணமாகி போதும் போதுமென மகிழ்ச்சியில் திளைத்த பிறகு இவன் கண்ணுக்கு அவள் குறைகளும் அவள் கண்ணுக்கு இவன் குறைகளும் தெரிய ஆரம்பிக்குமோ?

அதுவும் ஒரு குழந்தை பிறந்த பிறகு இவள் வேலைக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்தபோது பிரர்ச்சனையும் சேர்ந்தே வந்தது.ஒரு வயதே ஆன குழந்தையை இருவரும் பணிக்குச் சென்று விட்டால் யார் பார்த்துக்கொள்வது?வேறு வழியின்றி குழந்தைகள் காப்பகத்தில் விட்டுப் பார்த்தபோது குழந்தைக்கு ஒவ்வாமையால் உடல் நலம் பாதித்ததோடு சரி.வேலைக்குப் போகவேண்டாமென முடிவெடுக்கவும் மனதில்லை.கணிசமான வருமானம் ஆயிற்றே.அதை எப்படி இழப்பது? இப்போதுதான் தெரிந்தது பெரியவர்களின் முக்கியத்துவம்.வீட்டில் யாராவது பெரியவர்கள் இருந்தால் எந்தக் கவலையுமின்றி அவர்களிடம் குழந்தையை விட்டுச் செல்லலாமே?இருவீட்டாரும் திரும்பிப் பார்க்காத நிலையில் இந்தப் பிரர்ச்சனை இருவருக்குமிடையே சின்னச் சின்ன உரசலை ஏற்படுத்தியது. ஓருடல் ஈருடலாக இருந்தவர்களிடையே கருத்து வேற்றுமை.

அவன் சாதாரணமாகச் சொல்வது இவளுக்கு பிழையாய்த் தெரியும்.அவள் ஏதும் சொன்னால் இவனுக்கு.இருவருக்குமிடையே கோபம் இரண்டு நாட்களுக்கு மேலும் கூட நீடிக்க ஆரம்பித்தது.

ன்று அப்படித்தான் காலையிலிருந்தே குழந்தைக்குக் காய்ச்சல்.கணவனை அலுவலகம்  செல்ல வேண்டாமென்றும் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டுமென்றும் அவள் சொன்னபோது அலுவலகத்தில் தனக்கு முக்கிய பணி இருப்பதாகவும் தன்னால் அன்று விடுப்பு எடுக்க முடியாதென்றும் அவன் கூறினான்.அது என்னவோ உண்மைதான். ஆனால் அதை அவள் ஏற்கவில்லை.சண்டை தீவிரமாயிற்று. பாவம் அவன் அலுவலகம் விட்டு சீக்கிரமே வந்தான். ஆனாலும் அவள் சமாதானம் ஆகவில்லை.

இரவு இருவரும் பேசிக்கொள்ளவில்லை.நடுவில் குழந்தை அதன் இருபக்கமும் இருவர் படுத்தாயிற்று. விடிகாலை மூன்று மணிக்குப் பசியோ என்னவொ குழந்தை அழ சட்டெ விழித்துக்கொண்ட அவன் அவளை எழுப்புகிறான்.

வைஷூ.. கொழந்த அழவுது பசிக்கிதோ என்னவோ வயித்துக்கு எதுனா குடு.

புரண்டு படுத்த அவள் சட்டென எழுந்து ஏன் நீங்கதான் கொடுக்கிறது..பகல் முழுக்க நான் பாத்துக்கல?

என்ன வைஷூ..அவ்வளவு தூரம் டூ வீலர்ல ஆஃபீஸ் போய்ட்டு வரேன் எனக்கு அலுப்பா இருக்காதா?

அப்ப நான் வீட்டுல தண்டமா இருக்கேன்றீங்களா?..

இருவரும் மாறி மாறி பேச ஒரு கட்டத்தில் அவன் ..

நீ யெல்லாம் ஒரு பொம்பள..என சொல்லிவிட்டு வேறு பக்கம் பார்த்துப் படுத்து தூங்கிவிட..அழுத குழந்தையும் தூங்கிவிட்டது.

காலை ஆறறை மணி. மீண்டும் குழந்தை அழ..விழித்துக்கொள்ளும் ராகேஷ் படுக்கையில் வைஷ்ணவியைக் காணாமல் குழந்தையைத் தூக்கி தோளில் சாய்த்துக் கொண்டு கிச்சனுக்குப் போக அங்கு லைட்டே எரியவில்லை.பாத்ரூம் போயிருப்பாளோ அங்கு சென்று பார்க்க வெளித் தாழ்ப்பாள் அப்படியே போட்டபடியிருந்தது.இன்னும் மிச்சமிருப்பது ஒரு அறை மட்டுமே.அந்த அறையின் கதவைத் தொட்ட போது தானாக கதவு திறந்து கொள்ள உள்ளே பார்த்தவன் வைஷ்ணவீ...என்று கத்திய கத்தலில் அந்த ஃப்ளாட்டின் மொத்தக் குடியிருப்பும் விழித்துக்கொண்டது.

தூக்கில் தொங்கிய வைஷ்ணவியின் உடல் கீழே இறக்கப்பட்டது.அவளின் செயல் அவள் மீது எனக்கு பரிதாபத்தை ஏற்படுத்தவில்லை.மாறாக அவள் மீது கோபத்தைத்தான் ஏற்படுத்தியது.

ன்ன பெண் அவள்?ஒரு சாதாரண வார்த்தையைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல்? இதன் பேர் ஈகோவா?சகிப்புத் தன்மை இன்மையா?ஒரு சின்ன வாத்தையைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக்கொள்வது சரியான முடிவா?எவ்வளவு பைத்தியக்காரத்தனம்.?அவரவர் வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்த பெண்களைக் கேட்டுப் பாருங்கள் அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு மனதை புண்ணாக்கும் அமில வார்த்தைகள் கணவனாலோ மற்ற உறவுகளாலோ வீசப்பட்டும் அவமானப் படுத்தப்பட்டும் மரியாதைக் குறைவாகவும் நடத்தப் பட்டிருப்பார்கள்.இவற்றிற்கெல்லாம் பெண்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருந்தால் உலகில் பெண்களின் தொகை அடிமட்டத்தில் அல்லவா இருக்கும்?

நொடியில் தன் உயிரை மாய்த்திக்கொண்டாளே இந்த வைஷ்ணவி இனி நொடிக்கு நொடி தாயின்றி தவிக்கப் போகும் தன் குழந்தையைப் பற்றி நினத்துப்பார்த்தாளா?

தந்தை வழி உறவோ தாய் வழி உறவோ பரிதாப்ப் பட்டு அக்குழந்தையை எடுத்து வளர்க்கலாம்.ஆயிரம் பேர் எடுத்து வளர்த்து அன்பு காட்டினாலும் அது தாயின் அன்புக்கு ஈடாகுமா?ஒரு வருடமோ இரண்டு வருடமோ மனைவியை இழந்த ஒரு ஆண் மீண்டும் இன்னொரு பெண்ணை மனைவியாக்கிக்கொண்டுவிடுவான்.அவனின் தேவைகள் பூர்த்தியாகிவிடும் ஆனால் ஒரு தாயை இழந்த குழந்தையின் தேவையான தாயின் அரவணைப்பு அம்மாவின் பாசம் அது எங்கிருந்து கிடைக்கும்? தன் வயதை ஒத்த தோழர்கள் அல்லது தோழிகள் அவரவர்கள் தாயால் தூக்கி முத்தமிட்டுக் கொஞ்சப்படும்போது அதைப் பார்க்கும் தாயில்லாத குழந்தையின் மனம் ஏங்காதா?

அக்குழந்தையை வளர்ப்பவர்கள் உண்மையில் அக்குழந்தையிடம் அன்பு காட்டுபவர்களாய் இருந்தால் போயிற்று.அப்படி இல்லாவிட்டால் அக்குழந்தையின் நிலை என்ன.இப்படி தான் பெற்ற குழந்தையின் நலனையோ எதிர்காலத்தையோ சற்றும் சிந்திக்காது உப்புசப்பில்லாக் காரணுங்களுக்காக உயிரை மாய்த்துக்கொள்வது எவ்வளவு அறிவீனம்?இயற்கை மரணம் தவிற்க முடியாதது.ஆனால் தற்கொலை?

எந்த ஒரு காரணத்திற்கும் தற்கொலை தீர்வாகுமா?பெண்கள் மனோ பலம் படைத்தவர்கள்.யானைக்குத் தன் பலம் தெரியாது என்பார்கள்.அதுபோலத்தான் பெண்களும் தங்களின் மன பலத்தை அறியாதவர்களாய் இருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது.எவ்வளவு துன்பம் வந்தாலும் அதனை எதிர்கொண்டு போராடி வெற்றி பெறவே வேண்டுமேயன்றி துன்பங்களையொ பிரர்ச்சனைகளையோ சந்திக்கத் துணிவின்றி அதிலிருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொள்வது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கூட அழகல்ல.வாழ்க்கையின் பாதை ரோஜாப்பூ இதழ்களால் போட்டப்பட்டது அல்ல.அது கரடு முரடான சில இடங்களில் முட்கள் கூட மறைந்திருக்கும் பாதைதான்.நாம்தான் பார்த்து நடந்து இலக்கை அடைய வேண்டும்.

வைஷ்ணவியின் தற்கொலை எனக்குக் கோபத்தைத்தான் ஏற்படுத்தியது.நீங்களே சொல்லுங்கள் எந்த ஒரு துன்பத்திற்கும் தற்கொலை தீர்வாகுமா?வைஷ்ணவி செய்தது சரியா?

படித்தவர்களுக்கு நன்றி... இது கேள்விப்பட்ட..செய்தி சானல்களில் சொல்லப்பட்ட நிகழ்வு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.