(Reading time: 4 - 8 minutes)

படித்ததில் பிடித்தது - மாத்தி யோசி..!! - வசுமதி

Maathi yosi

சிஸ்டம் சரியில்ல...’ தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெல்லாம் இந்த வார்த்தை பாடாய்ப்படுகிறது. பால் பேதமின்றி இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இன்னொரு பக்கம், வாழ்வதற்கான நெருக்கடிகள் மனிதர்களை இயந்திரங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் எப்போதும் மனிதர்களாக இருப்பதுதான் அவர்களுக்கான இயல்பும் மகிழ்வும். பெண்களையும் இந்த நெருக்கடிகள் விட்டுவைக்கவில்லை. பெண்கள் தங்கள் சந்திக்கும் பிரச்னைகளையே தடைக்கற்களாகப் பார்க்கின்றனர். கொஞ்சம் மாற்றி சிந்தித்தால் அவைகளே வெற்றிப் படிக்கட்டுகளாகும். 

தன்னை அறிதல்

ம்மால் வளர முடியாமல் போவதற்கு சிஸ்டம் சரியில்ல என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க முடியாது. மாற்றவேண்டியது சிஸ்டத்தையா அல்லது நம்மையா என்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும். தன்னிடம் உள்ள பிளஸ், மைனஸ் விஷயங்களைப் பெண்கள் மனம் திறந்து ஒத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் புறக் காரணங்களை விட்டு விட்டு தன்னிடம் மாற்றிக்கொள்ள வேண்டியவற்றை பட்டியலிட்டு சரி செய்யவும். 

எதார்த்த பார்வை

பிரச்னைகளை அணுகுவதில் ஆண்களைவிடப் பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள். அதுவே, அவர்களின் பிரச்னைக்கான வலியை அதிகரிக்கச் செய்கிறது. பெண் தன் உடல் ரீதியான மாற்றங்களைக்கூட சங்கடங்களோடும், சிரமங்களோடும் எதிர்கொள்வதால் பல தருணங்களில் அவர்கள் ஏன் பெண்ணாய்ப் பிறந்தோம் என்று யோசிக்கின்றனர். எந்தப் பெண்ணும் தன் வாழ்வில் ஒருமுறையாவது இப்படி யோசித்திருக்கக் கூடும். இந்த உலகுக்கு ஓர் உயிரைத் தருவதற்கான கருவறையே பெண்ணுக்குள் தனக்கான மாற்றங்களை அந்தந்தப் பருவங்களில் ஏற்படுத்திக்கொள்கிறது. தாய்மையின் அற்புதங்களை உணர்ந்த பெண்ணுக்கு வலிகளோ, அது சார்ந்த சிரமங்களோ பெரிதில்லை. வலிகளே பெண்களுக்கான சிகரங்களை எப்போதும் திறந்திருக்கின்றன. தான் சந்திக்கும் பிரச்னகளைப் பெண்கள் எதார்த்தமாக அணுகலாம்.

திறனை மேம்படுத்து

ர் அலுவலகத்தில் உங்களுக்கான வேலை இலக்கை நிர்ணயிக்கிறார்கள், புதிய வேலைகளை உங்களது தலையில் சுமத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், உடனடியாக மனதில் டென்சன் தொற்றும். கசக்கிப் பிழிவதாக மனம் புலம்பும். இதை நம்மால் சமாளிக்க முடியுமா என்று அச்சப்படும். இதை இப்படியும் பார்க்கலாம். கொடுக்கப்பட்ட பணிகளுக்கான நேரத்தையும் எளிய வழிகளையும் உத்தேசிப்பதன் மூலம் உங்களது வேலைத்திறனை நீங்கள் உயர்த்திக்கொள்ள முடியும். இப்படிப் பல சந்தர்ப்பங்களை நீங்கள் எளிதாகக் கடந்துவிட்டால், அதே அலுவலகத்தில் திறமை மிகுந்த ஆளாக நீங்கள் மிளிர்வதை உணரலாம். இதுவே உங்களுக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். கூடுதல் பெறுப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுவதன் மூலம் தன் தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம். 

சக மனிதரைப் புரிதல்

திருமணம் பெண்ணின் வாழ்வில் மிகவும் மதிப்பு மிகுந்த பகுதி. ஒரு வீட்டில் பெண்ணாக வளர்க்கப்பட்ட செல்ல மகள், தனக்கான குடும்பத்தின் தலைவியாகப் பொறுப்பேற்கும் வைபவம். புதிதாக ஒரு குடும்பத்தில் நுழையும்போதும் எதிர்ப்படும் எல்லா விஷயங்களுமே பிரச்னைகளாகத்தான் தோன்றும். புதிய உறவுகள் வலியுறுத்தும் சிறிய விஷயம்கூடப் பெரிதாக மனதைக் காயப்படுத்தும். புதிய மனிதர்களை முன்கூட்டிய விருப்புவெறுப்புகளுடன் பார்க்காமல், அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். புதிய உறவுகளைத் தனதாக்கிக்கொள்வதன் வழியாக, பெண் தனக்கான ஓர் அன்புக் கூட்டை உருவாக்க முடியும். பெண்கள் மனிதர்களைப் புரிந்து செயல்படுவதால் வீட்டிலும்..தனது வேலையிடத்திலும் பிரச்னைகளை எளிதாக சமாளிக்க முடியும். 

இனிக்கும் இல்லம்

ல வீடுகளிலும் எதிரெதிர் துருவங்களாக இருப்பது தம்பதிகள்தான். முதலில் அன்பை மட்டுமே பகிர்ந்துகொள்ள உருவாக்கிக்கொண்ட உறவுதான். போகப்போக அவர்களுக்கிடையில் பலவீனங்களும் வெறுப்புகளும் மட்டுமே இடிக்க முடியாத சுவராக வளர்ந்து நிற்கும். நெகட்டிவான விஷயங்களை மட்டுமே பட்டியலிடுவதால் வரும் பிரச்னைதான் இது. இந்தச் சுவரையே ஊதினால் உடைந்துவிடும் கண்ணாடி மொட்டுகளாக மாற்ற முடியும். அப்படியே இருவருக்குமான அன்பின் பகிர்வுகளை நினைவு கூறுங்கள். பாசிட்டிவ் விஷயங்களைப் பட்டியலிடுங்கள். அவரவருக்கான சுதந்திர வெளியை அனுமதித்து, உறவை அழகாக்குங்கள். உங்களைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருக்காமல், உங்களது குழந்தைகளுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்கத் தொடங்குங்கள். உங்கள் குழந்தைகளுக்கு இந்த உலகின் சிறந்த அப்பா, அம்மாக்களாக நீங்கள் மாற வாய்ப்புள்ளது. எந்த உறவிலும் பாசிட்டிவ் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் வழியாக பெண்கள் சுமுகமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம். 

பெண்கள் மாற்றி சிந்திப்பதன் வழியாகவே எந்தப் பிரச்னையும் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். அவர்களுக்கான தடைக்கற்கள் எல்லாம் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

 தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர் வசுமதி

 

{kunena_discuss:1107}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.