(Reading time: 6 - 12 minutes)

பயணங்கள் முடிவதில்லை - 01 - என்ன ஒரு ஸ்டார்ட்! - பிந்து வினோத்

ஹாய் பிரென்ட்ஸ்,

சில வருடங்களுக்கு பிறகு சென்னை வந்திருக்கிறேன்.

இந்த ட்ரிப்பில் ஏற்படும் அனுபவங்களை பற்றிய தொடர் தான் இந்த பயணங்கள் முடிவதில்லை.

நான் எதை எழுதினாலும் அதன் பின் ஒரு inspiration அல்லது triggering point இருக்கும். அந்த விதத்தில் பீச் சென்றது பற்றி எழுதி என்னை இந்த தொடர் எழுத தூண்டிய பெருமை என் தோழிக்கே :-)

சரி, வாங்க பிரென்ட்ஸ் நாம நம்ம பயணத்தை தொடங்குவோம்.

Newyork JFK Airport

நியூயார்க் டூ அபுதாபி

சென்னை செல்ல டிக்கட் வாங்கிய நாள் முதலே என்னை சுற்றி தனியாக ஒரு ஒளி வட்டம் வந்து சேர்ந்துக் கொண்டது. நிறைய மாதங்களுக்கு பிறகு உறவுகளை சந்திக்க போவது, அம்மா ஸ்பெஷல் சாப்பாடு ஐட்டம்ஸ் என மனசுக்குள்ளே ஒரே குஷி தான்.

ஆனால் பெட்டிகளை ரெடி செய்ய செய்ய, சின்னதாக வருத்தம் + கலக்கம். நான் மட்டும் இரண்டு குட்டீசுடன் தனியாக பயணம் செய்ய வேண்டுமே!

யூ.எஸ் டு சென்னை விமானங்களில் ஒரு பயணிக்கு 2 பெட்டிகள் எடுத்து செல்லலாம். பேக் செய்ய தொடங்கிய போது 3 பெட்டிங்கள் என்று இருந்த என் லக்கேஜ், கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, ஆறு பெட்டியில் வந்து முடிவு பெற்றது.

இரண்டு குட்டீஸ், ஆறு பெட்டி எப்படி சமாளிக்க போகிறோம் என்று வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும் கொஞ்ச நாளாகவே மனசுக்குள் ஒரே டென்ஷன்.

எத்தனை ப்ளான் செய்தும் கடைசி நிமிட பர்சேஸ், பெட்டிகளின் எடை என ஒரு சில சூப்பர் டூப்பர் அட்வென்ச்சர்களுடன் எங்கள் பயண நாளும் வந்து சேர்ந்தது.

ட்ராவல் செய்ய வேண்டிய நாளுக்கு என்று நான் பெரிய ப்ளான்ஸ் எல்லாம் வைத்திருந்தேன். அதில் ரொம்ப முக்கியமான விஷயம், முன் தினம் சற்று முன்னராகவே தூங்குவது! சரியான தூக்கம் இல்லையென்றால் எனக்கு தலைவலி வரும்.

ஒரு வாரமாகவே இதை பற்றி சொல்லிக் கொண்டே இருந்தேன், ஆனால் சரியாக ஊகித்திருப்பீர்கள், பயணம் செய்வதற்கு முன் தினம் பேக்கிங், ப்ரிப்பரேஷன் என அனைத்தும் முடிய விடிகாலை ஒன்றாகி விட்டது.

மீண்டும் காலை ஐந்து மணிக்கு எழுந்து விட வேண்டும் என்ற நினைவே எனக்கு தலைவலியை கொடுத்தது.

தலைவலியும் என்னை ஏமாற்றாமல் காலை தூங்கி எழுந்த போதே என்னோடு ஒட்டிக் கொண்டது.

வழக்கமான கலாட்டாக்களுடன் ஒரு வழியாக கிளம்பி வீட்டை விட்டு வெளியே வந்தால், லேசான மழை தூரலிட்டுக் கொண்டிருந்தது.

விமானத்தில் பயணம் செய்யும் நாளில் மழை, காற்று, பனி என எது வந்தாலும் பிரச்சனையே. பாதுகாப்பு என்பதை மீறி அதனால் ஏற்படும் தாமதங்கள் பெரிய பிரச்சனை.

கடவுளே நல்ல க்ளைமேட்டை கொடுங்கள் என்று வேண்டிக் கொண்டு எங்கள் காரில் எப்படியோ பெட்டிகளை அடுக்கிக் கொண்டு நியூ யார்க் நோக்கி பயணத்தை தொடங்கினோம்.

அது என்னவோ எல்லோருக்கும் பிடிக்கும் நியூயார்க், எனக்கு மட்டும் அலர்ஜி.

நியூயார்க்குக்கு அருகேயே இருந்தப்போதும், அந்த நகரத்தை சுற்றி பார்க்க நான் பெரிதாக ஆர்வம் காட்டியதில்லை.

அதற்கு முக்கிய காரணம் அங்கே இருக்கும் போக்குவரத்து நெரிசல்!

நியூயார்க்கிற்கு செல்ல பஸ், ட்ரெயின் என பப்ளிக் போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், அங்கே சாலை + சாலையோரங்களில் இருக்கும் கூட்டம் என்னை அந்த பகுதியை ‘நோ-நோ’ சொல்ல வைதிருந்தது.

ஏதோ விதத்தில் நியூயார்க் என்றாலே எனக்கு நம் சென்னை தி.நகர் தான் நினைவுக்கு வரும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், நியூயார்க்கில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டால் அதோ கதி தான். விமான நிலையத்திற்கு சென்று பெட்டிகளை அனுப்பி விட்டு, செக்யூரிட்டி செக் முடிக்க சில சமயம் மூன்று – நான்கு மணி நேரம் தேவை படலாம்.

இதை எல்லாம் மனதில் வைத்து தான் சற்று முன்னராகவே கிளம்பினோம் என்றாலும், ஒரு இடத்தில ஹை-வே வளைவு ஒன்றை மிஸ் செய்து விட, எங்கள் GPS இலவச நியூயார்க் நகர டூர் போல எங்களை நகரத்தின் உள்ளே அழைத்து சென்று எங்கெங்கோ சுற்றிக் காட்டியது!

இப்படி தலைவலி, ஊர் சுற்றல் என்ற அமோகமான தொடக்கத்துடன், சென்னை நோக்கி செல்ல முதல் அடி எடுத்து வைக்க உதவும் நியூயார்க் JFK விமான நிலையத்தை வந்து சேர்ந்தோம்.

பெட்டிகளை செக் இன் கொடுத்த போது ஒவ்வொன்றும் நிர்ணயிக்கப் பட்ட எடையினுள்ளே இருக்க அவ்வளவு சந்தோஷம். டென்த், ப்ளஸ் டூ ரிசல்ட்ஸ் பார்த்த போது கூட இவ்வளவு சந்தோஷப் பட்டிருக்க மாட்டேன் என நினைக்கிறேன்.

கடந்த பல நாட்களாக அடுக்கி, எடை பார்த்து பார்த்து வைத்த பெட்டிகள் பயணத்தை தொடங்க உள்ளே போய் விட, சிம்பிள் லஞ்ச் சாப்பிட முடிவு செய்தோம்.

அத்தனை பெரிய ஏர்போர்ட்டில், நாங்கள் இருந்த டெர்மினலில் ஒரே ஒரு உணவகம் இருந்தது ஆச்சர்யம் + அதிர்ச்சியாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.