ஆண்களுக்கு நன்றி - புவனேஸ்வரி
பெண்ணென பூமிதனில் பிறந்துவிட்டால்,
பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் !
என்றானே முண்டாசு கவிஞன்,
ஆண் என்ற திமிரில் துகிலுரியும்
அந்த கயவர்களை பற்றி அன்றே
கண்டுகொண்டுவிட்டானே என் பாரதி !
இன்பமும் அமைதியும் சூழ்ந்திருக்க வேண்டிய
அழகிய புவியில் யார் தந்த சாபம் இது ?
பூக்களால் எங்கெங்கும் அலங்கரிக்க வேண்டிய பூமியில்
பெண்ணின் மேலாடை குருதிக் கரையில் அலங்கரிக்க படுகிறதே !
கவிர்ச்சியூட்டும் ஒப்பனைதான் காரணம் என்றீர்
மூன்று வயது சிறுமிக்கு என்ன தெரியும் ஒப்பனையை பற்றி ?
உணர்ச்சிகள் தூண்டும் உடைகள் என்றீர்
எழுபது வயது மூதாட்டியிடம் அப்படி என்ன உணர்ச்சிகள் கிளர்ந்துவிட்டது ?
கத்தியால் பதம் பார்த்த காயத்தில்
தீ வாரி இறைத்தது போல ஊடங்களும் பத்திரிக்கைகளும் !
தினசரி பெண்ணின் பரிசுத்தம் கலைக்கபட்ட செய்தியை
ரசிப்பதற்காகவே உரைப்பது போன்ற பாணியில் நாளிதழ்கள் !
ஊடகங்கள் உயர்ந்தன அதைவிட ஒருபடி
மாதம் ஒரு முறை கணக்கெடுப்பு !
" குற்றம் புரிந்தவனுக்கு என்ன தண்டனை அளிக்கலாம் " ?
கறக்கின்றனர் மக்களிடம் சுடச்சுட பதில்கள் !
ஆனால் இதுவரை காணவில்லை ஓர் மாற்றம்
கணினியில் கோபமாய் பதில்கள் கொடுத்தும் !
வானொலியில் உணர்ச்சிபொங்க பதிலளித்தும்
கிடைத்தது என்னவோ தொகுப்பாளரின் "கருத்துக்கு நன்றி "
என்ற பதிவு மட்டும்தான்!
நீதியில் ஏதும் பெரிய மாற்றமில்லை
என் வீதியிலும் தர்ம தேவதை வளம் வரவில்லை !
சொன்னான் எங்கிருந்தோ ஒரு பெரியவன்
ஏழு மணிக்கு மேல் வெளிவராதே என்று !
அய்யா பெரியவரே,
பெரிதொரு கூண்டு கட்டி எங்களை அடைத்து விடுங்களேன் !
அல்லது சிறைச்சாலையில் குற்றவாளிகளை வெளியேற்றிவிட்டு
எங்களை அங்கு பூட்டி வையுங்கள் !
சூரியன் உதிப்பது தப்பல்ல
அதன் கதிர் உன் மேனியில் படுவதுதான் தப்பு!
என்று வாதிடும் வஞ்சக நெஞ்சங்களை கூருபோடவே
ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் காளி அவதரிக்கிறாள் !
ஆண் என்பவன்
உறவுகளை உண்டாக்குவதில் பிரம்மனாகிறான் !
உறவுகளை காப்பத்தில் விஷ்ணுவாகிறான் !
துன்பங்கள் எரிப்பதில் சிவனாகிறான் !
ஆனால் இங்கு மட்டும்
துச்சாதணன்களின் நடுவில் ஒருசில தேவர்கள் !
வேலியே பயிரை மேய்கிறது என்பதா ?
கடலே கடல்ஜீவன்களை விழுகியது என்பதா ?
வேரே மரத்தை சாய்க்கிறது என்பதா
தாயே சேய்களை கொள்கிறாள் என்பதா ?
தூணிலும் துரும்பிலும் இருப்பேன் என்றானே
அவள் தாவணி பரிக்கபட்டபோது அவன் எங்கு சென்றுவிட்டான் ?
அழைத்தால் வருவேன் என்றானே
அவள் பெண்மை அழியும் கூக்குரல் அவனை எட்டவில்லையா ?
ஒளவையின் இளமையை முதுமையாய் மாற்றிய
ஆணை முகத்தான் கணேஷன் எங்கே ?
எங்களையும் உருமாற வைத்துவிடு இறைவா
தினம் தினம் கயர்வர்களின் பார்வையினாலே
துகிளுரிக்கப்படும் எங்கள் அவலநிலையை பார் !
மலராய் நாங்கள் மலரும்முன் மொட்டகவே எங்களை கருகவிட்டுவிடு !
அல்லது எங்களை தொட்டால்
அவன் எறிந்துவிடுவான் என்றொரு வரமாவது பிட்சையாக தா !
ராமனின் ஜானகியை தன்னோடு சேர்த்துக் கொண்ட பூமித்தாயே
கயவன் எனது கூந்தலை பற்றும்போதே
பூகம்பமாய் வந்து என்னை விழுங்கிவிடு !
நீ எங்களுக்கு தந்த ஒரே ஆறுதல்
பெண்ணை சதை மலராய் பார்க்காத சில ஆண்கள் தான் !
துச்சாதனன் எனும் ஆணால் துகிளுரிக்கப்பட்டாள் பாஞ்சாலி
மாதவன் எனும் ஆணால் காக்கவும் பட்டாள் அவள் !
ராவணன் எனும் ஆணால் கடத்தப்பட்டாள் சீதை
ராமன் எனும் ஆணால் ரட்சிக்கபட்டாள் அவள் !
இதன் மூலம் தேவம் சொல்லவரும் நீதி என்ன ?
ஆண்களால் அபாயமும் உண்டு
ஆண்களால் அபயமும் உண்டு என்றா ?
அப்படி என்றால் இத்தகையே ஆண்களை நான் போற்றிதானே ஆக வேண்டும்?
அலுவலகத்தின் அதிகநேரம் வேலை செய்கையில்
அக்கறையாய் பாதுகாக்கும் அலுவலக காவலர் ,
கண்ணீரில் தோள் சாயும்போது
அதை சாதகமாக்கி கொள்ளாத காதலன் ,
நேரம் காலம் இல்லாமல் நடுஇரவில் பேசினாலும்
கல்மிஷம் இல்லாமல் கண்ணியம் காட்கும் நண்பன் ,
பிரசவத்திற்கும் அறுவை சிகிச்சைக்கும் வரும் நோயாளிகளை
காமத்துடன் காணாத மருத்துவன் ,
யார் என்று தெரியாமல் பொது இடத்தில் உதவிட்டு
ஒரு நன்றிக்கு கூட புன்னகையை மட்டும் பதிலாய் சிந்திவிட்டு
சாலையை கடக்கும் சாதாரண குடிமகன்,
இவர்களை நான் போற்றிதானே ஆகவேண்டும் ?
கொதித்து கொண்டிருக்கும் எரிமலையாய் பெண்மனம்
அதை பாகாய் உருகவைப்பது ஆணின் கண்ணியமும் காவலும் தான் !
இன்றும் கண்ணியம் தவறாமல்
என்னை பெண்ணியவாதி என்று முத்திரையிடாமல்
சமூகத்தில் சரியான பார்வையில் நோக்கும்
என் பாரதி குடிகொண்டிருக்கும் அனைத்து
ஆணுள்ளத்திற்கும் எனது நன்றி !
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.