(Reading time: 3 - 6 minutes)
India Independence

கவிதை - இளைய சமுதாயமே எழுந்து வா.. - தங்கமணி சுவாமினாதன்

இளைய சமுதாயமே எழுந்து வா..

மனபலம் பெற்றுவா..புஜம்தனைத்-

                                           தட்டி வா..

புதிய பாரதம்..வலிமை பாரதம்..

வளமை பாரதம்..சீர்பெற்றுச் சிறக்க..

சிங்கமென எழுந்து வா. 

பாரதநாடு பழம் பெரும் நாடு..

செழுமையும் வளமையும்..

நீதியும்.. பக்தியும்..

இணக்கமும்..அன்புமாய்..

பாரினில் சிறந்து பரிமளித்த நாடு..

புனித பூமியாம் நம் தாய்த்திருநாட்டை

அந்நியர் புகுந்து ஆள்கின்ற வேளை

தம் இன்னுயிர் நீத்து சுதந்திரம் பெற்ற..

சுயநலம் கருதா ஆயிரமாயிரம்..

போராட்ட வீரர்களைப் பெற்றிருந்த நாடு

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்துத்..

தாய்நாட்டை தரணியில் தலைநிமிர்த்த..

அரும்பாடுபட்ட அற்புதத் தலைவர்கள்

அந்நாளில் ஏராளம் ஏராளம்..

ஆனால் இன்றோ..

பாழ்பட்டுக்கிடக்குதம்மா பாரததேசம்

எங்கும் எதிலும் லஞ்சம்.. சுரண்டல்..

பேரம்..கொள்ளை..

அரசியல்  வேசிகள் கையிலகப்பட்டு

வேர்வரை செல்லரித்து.. ஆடிப்போய்..

வாடிப்போய் துவண்டு நிக்குதின்று..

நம்பாட்டனும்.. முப்பாட்டனும்..

வீரம் மிக்கப் பெண்டிரும்..தம்      

கண்ணீரும் செந்நீரும் ஊற்றி வளர்த்த

பாரதமெனும் பழம்பெரும் ஆலமரம்.

காவிவேட்டி..கதர் சட்டை..கரைவேட்டி

கருப்புச்சட்டையென மேடைபோட்டுக்

                                          கூட்டம்கூட்டி..

நீட்டென்றும்..ஸ்டெர்லைட்டென்றும்..

மீத்தேனென்றும்..பசுமைவழியென்றும்

மொழித்திணிப்பு.. முத்தலாக்கென்றும்..

ஒருவரையொருவர் ஏசிப்பேசி..

மாற்றிமாற்றிப் பழிபல சொல்லி..

ஏதுமறியா மக்கள்தனையே..

சிந்திக்கவிடாமல்  சித்தம் கலக்கி..

சுயலாபம் காணும் சூதென்ன சொல்ல?

பரவிக்கிடக்கும் இப்புற்றுச் செல்களை

சிங்கப்பிள்ளைகளே சிதைத்து விடுங்கள்

பாரதத்தாயவள் நாடிநரம்பெலாம்..

புதுரத்தம் பாய்ந்து புத்தொளிபெறவே

இளையசமுதாயமே நீ..

ஆகச்சிறந்த முயற்சிகள் செய்வாய்..

கோடிகள் குவிக்கும்..

சினிமா ஹீரோவுக்கு..அறுபதடி கட்டவுட்..

ஆவின்பால் அபிஷேகம்..

இவற்றால் இங்கு ஆகப்போவதென்ன?

மட்டைப்பந்து வீரர்க்கு லட்சத்தில்

                                         சம்பளம்..

விளம்பர முகம்காட்ட கோடியில்..

                                       ஊதியம்..

இவர்கள் ஆட்டம் பார்க்க..

வரிசையில் நின்று ஆயிரம் தந்து

சீட்டுவாங்கி சீட்டிலமர்ந்து..

பாப்கார்ன் கொறித்து கூல்டிரிங்ஸ்

                                            குடித்து..

ஆரவாரம்செய்து ஆட்டம்போட்டு..

இளம் பிள்ளைகளே... ஏனுங்கள்..

பொன்னான காலம்தனை..

வீணாக்கியிழக்கின்றீர்?

பொழுதுபோக்கு நல்லதே..

                  ஆயினும் அளவோடு..

இளையசமுதாயமே எழுந்திரு..

இனி நம்நாடு உங்கள் கைகளில்..

அறிவு ஆற்றல் வீரம் விவேகம்

துணிவு முயற்சி எனும் ஆயுதங்கள்

உங்கள் அணிகலன்களாகட்டும்..

அல்லவை தேயட்டும்..

பீடித்த பீடைகள் ஒழியட்டும்..

தாய்த்திருநாட்டை பற்றியுள்ள

சண்டாளச் சனியன்கள் தொலையட்டும்

நாட்டைத் துண்டாட நினைக்கும்..

துரோகிகள் அழியட்டும்..

இளைய சமுதாயமே எழுந்து வா!

மனபலம் பெற்று வா! புஜம்தனைத்

                                         தட்டி வா!

எங்கள் தாய்த்திருநாட்டை..

ஊழலை ஒழித்து..

உழைப்பால் உயர்த்துவோம்..

புதிதாய் மாற்றுவோம்..

வளமான இந்தியாவை..

வலிமை இந்தியாவை..

தூய்மை இந்தியாவை..

ஓரணியாய் நின்று..

உயர்த்திக்காட்டுவோமென்று..

இன்றைய **சுதந்திர தின**

                                 நன்னாளில்..

தலையைநிமிர்த்தி கையை உயர்த்தி..

சூளுரை செய்யுங்கள்..காரியமாற்றுங்கள்.

சத்தமாய்ச் சொல்லுங்கள்..

வந்தே மாதரம்..வந்தே மாதரம்..

ஜெய்ஹிந்த்..

அனைவர்க்கும் சுதந்திரதின --நல்வாழ்த்துக்கள்..ஜெய்ஹிந்த்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.