(Reading time: 3 - 5 minutes)

சிகப்புக் கவிதை... - தங்கமணி சுவாமினாதன்

Blood

நுங்கம்பாக்கம்-- அன்று..

நொந்தபாக்கம் ஆயிற்று..

விடிந்தும் விடியாத காலை..

அணைந்து போனது--அந்த..

ஆனந்த ஜோதி.

நாசியாடிக்குள் சிரிக்கும்..

வசீகரக் கண்கள்..

இமை மூடி நிலத்தில்..

வீழ்ந்து கிடந்ததென்ன?

பூவைத்தப்பூங்கொடி..

பொட்டுவைத்தப் பைங்கிளி..

சாதிக்கப் பிறந்த--சக தோழி..

சண்டாளன் ஒருவனால்..

வீச்சரிவாள் கொண்டு..

வெட்டப்பட்ட கொடுமை..

குருதி கொப்பளிக்கக்..

கொலையுண்டு போனதென்ன?

காட்சி ஊடகத்தில் காட்டப்பட்ட

இன்னிகழ்வு கண் மூடித் திறந்தாலும்.

மறைய மறுப்பதென்ன?

யாரந்த பாவி?எவனந்த கயவன்?

ஏனிந்த கொடுமை?யார் செய்த பாபம்?

நிர்பயாவும்,வினோதினியும்..

விட்டுச் சென்ற துயரம்--இன்னும்..

மனம்விட்டு நீங்காமல்..

அடி மனதில் உறுத்தும் ஆறாக் காயமாய்..

இன்று சுவாதியும்,வினுப்ரியாவும்..

நாளை இன்னும் யார்யாரோ?..

பெண்ணை வன்புணர்ச்சி செய்து..

தூக்கிலிடும் கயவர்கள்..

மங்கையின் புகைப்படத்தை..

மார்பிங் செய்து மானம் போக்கி..

மரணம் தழுவச் செய்யும் நீசர்கள்..

ஆசிட் ஊற்றி உருகச் செய்து..

ஆவி பிரிக்கும் அயோக்கியர்..

காதலை மறுத்தால்--சினம் கொண்டு..

சிரம் அறுக்கும் கொடியவர்கள்....

பெற்ற மகளைப் பெண்டாளும்..

தன் மலம் தின்னும் நாய்போன்ற..

கேவலப்பட்ட தந்தையர்கள்...

பத்து வயதுச் சிறுமியைக் கூட..

பதுக்கிவைத்துப் பாய் போடும்..

பல்லுப்போன கிழவர்கள்..

வரதட்சணைக் கொடுமையால்..

எரியும் நெருப்புக்கும்--ஒரு முழக்..

கயிற்றுக்கும் இரையாகும் பெண்கள்..

இப்படி எத்தனை எத்தனைக் கொடுமைகள்?

பெண்களுக்கு ஏனிந்த துயரங்கள்?..

ஆணாதிக்க சமுதாயத்தில்--பெண்கள்..

அமைதியாய் வாழ வழியில்லையா?

தினம் தினம் பெண்களுக்கு..

அக்னிப் பரிட்சைதான்..

ஆறாத ரணங்கள்தான்..

மேடை போட்டுப் பேசுதலும்..

சாலை மறித்து கத்துதலும்..

நேருக்கு நேரான விவாதமும்..

அக்கினிப் பரீட்சையில் அலசுவதும்..

ஒருவார காலமே ஆயுளோடு..

அடுத்த நிகழ்வு நிகழ்ந்து விட்டால்..

அனைத்தும் மாறுமே அடியோடு..

மீண்டும் மேடை போட்டுப் பேசுவதும்..

நேருக்கு நேரான விவாதமும்..

அக்னிப் பரிட்சையில் அலசுவதும்..

பெண்களே நமக்கு வேண்டாம்--இதனோடு..

உடன்பாடு..

இனி மீண்டுமோர் பாரதி பிறக்க மாட்டான்..

இது உறுதி..

பெண்களே ஒன்று படுங்கள்..

வென்றெடுப்போம்..நம் ..நலனை.. 

ஆண்களிடம் யாசிக்காதீர்..

நம் உரிமை நம்கையில்..நம் பலம் நம் மனதில்..

நான் பெண்ணியம் பேசவில்லை--ஒரு..

சராசரி பெண்ணாய்ப் பேசுகிறேன்..

வாருங்கள் தோழியரே--.இதுபோல் இனியொரு..

பெண்ணிறப்பு நிகழாமல் தடுப்போம்..

ஆயுதம் தரிக்க வேண்டாம்..அலைந்து திரிய வேண்டாம்..

மாயம் செய்ய வேண்டாம்..மாற்றம் செய்தல் வேண்டும்..

ஆம் சமுதாய மாற்றம் செய்தல் வேண்டும்..

அதற்காக கிளர்ச்சி செய்ய வேண்டாம்..கீழ் நிலை

செல்ல வேண்டாம்..கொஞ்சம் முயற்சி செய்தால் போதும்..

பெண்ணினம் முன்னேறும்...நல் பாதை நமக்குத் தெரியும்..

வாருங்கள் தோழியரே....நாம் அனைவரும் கரமிணைப்போம்..

வெற்றியை வென்றெடுப்போம்...வையத்தில் தலை நிமிர்வோம்..

 

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதியின் மரணம் ஏற்படுத்திய விளைவே இக்கவிதை

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.