(Reading time: 2 - 4 minutes)

அம்மா, உனக்கு நான் வேண்டாமா ? - பார்கவி

Amma unakku naan vendama

அன்பிற்கு உருவே நீதானே
உன் உயிர் கொடுத்து எனக்கு உரு கொடுத்தாயே
உயிர் பெற்று நான் உன்னுள் வளர
உன் கனவுகளும் வளர்ந்தன

உன் அன்பினில் வளர்ந்தேன்
உன் ஸ்பரிசத்தில் துள்ளினேன்
உன் சந்தோஷத்தில் ஆனந்தம் கொண்டேன்
உன் துக்கத்தில் இருளைக் கண்டேன்

நீ உண்ணும் உணவைப் பகிர்ந்தாய்
உனது உணர்வுகளைப் பகிர்ந்தாய்
எனக்கான கனவுகளைப் பகிர்ந்தாய்
எல்லாமுமாய் இருந்தாய்

சுதந்திரத்தை இழந்தாய் நீ
உன் கனவுகளையும் இழந்தாய் 
உன் நிம்மதியை இழந்தாய்
என்னையும் இழக்கத் துணிந்தாயே, ஏன்?

ஏதோ ஒரு உயிராக இல்லாமல் உனது அங்கமாகவே
மூன்று மாதங்கள் நினைத்தாயே
உனது மன உறுதியின் வாழ்நாள்
சில மாதங்கள் தானா??

ஒரு உயிரின் அருமை தெரியாதவளா நீ?
இல்லையேல், பெண்ணாய் நீ படும் துன்பங்கள் 
எனக்கு வேண்டாமென நினைத்தாயா?

என் அப்பாவின் குணங்கள் வந்துவிடும் என பயந்தாயா?
உன் மகள் தானே அம்மா நான்,
உன்னைப்போல் இருக்க மாட்டேனா?

வேண்டாத உறவுக்கு வம்சம் எதற்கென நினைத்தாயா?
எனில், உன்னில் பாதியல்லவா நான்?
உன் இரத்தத்தின் இரத்தம் அல்லவா நான்
உன் குணங்களின் பிரதிபலிப்பல்லவா நான்

களையை அறுக்கக் கூட துணியாத நீ 
ஒரு உயிரை அறுக்கத் துணிந்ததேன்?
உன் உயிரையே அறுக்கத் துணிந்ததேன்?

எனக்கு உயிர் கொடுத்த நீ 
என் கடவுள் என்று எண்ணினேன்
கடவுளுக்கே உயிரைப் பறிக்கும் உரிமையும் உள்ளதாம்
அதை எனக்கு உணர்த்தினாய் அம்மா

எனை இழக்கத் துணிந்த உனக்கு
தைரியம் போதவில்லை அம்மா
உன் அழுகுரலும் அதில் உள்ள அன்பும் 
எனை வழுவிழக்க செய்கின்றன

உன் முகம் பார்க்கும் வரம் இல்லை எனக்கு
உன் உயிராய் வளர்ந்த சுகம் போதும்
உன் கைகளில் தூங்கிடும் வரம் இல்லை எனக்கு
விழிக்காமல் உறங்கப் போகும் எனக்கு உன் நினைவுகள் போதும்

இன்னும் சில நேரத்தில் என் கடைசி இதயத்துடிப்பு
என் முதல் இதயத்துடிப்பறிந்த உன் முதலும் கடைசியுமான புன்னகை போதும் 
என் கண்ணீர் அறிய உனக்கு வரம் இல்லை
கள்ளம் இல்லாத உன் கண்ணீர் போதும்

நானே போகிறேன் அம்மா
உன்னைவிட்டு நானே போகிறேன்
இன்னொரு குற்ற உணர்ச்சி வேண்டாம் உனக்கு

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.