(Reading time: 2 - 4 minutes)

நன்றி கெட்ட ஊழியன் - வின்னி

Employee

நன்றி கெட்ட ஊழியன்!  

அப்படி ஒருவனைத் தேடுகிறாயா?

வேறெங்கும் போகாதே,

அவன் இங்குதான் இருக்கிறான்

ஏன்?, எப்படி? என்று கேட்க

இல்லை!  என்று சொல்ல

காத்திருக்கிறான்

 

ஆம்! நான் உனது வேலையாள்!   

ஏன்? எப்படி?, என்று கேட்காமல்

உனது ஊழல்களுக்கு

உறுதுணையாக இருப்பேன்,

உனக்கு வேண்டியதை 

இல்லை என்று சொல்லாமல்

செய்வேன் என்று  நீ  நினைத்தாயா? 

 

உன் ஆதாயத்தைக் குறுக்கு வழியில் பெருக்க,

என் மனதுக்கு பிழை என்று பட்டதை,

‘இல்லை’ என்று சொல்ல நான் தயங்க மாட்டேன்

 

குடும்பத்தைப் பராமரிக்க

ஊதியம் தேடி உன்னிடம் வந்தேன்.

நீ நினைப்பது போல

பொய் சொல்ல,

ஏமாற்ற,

திருட,

என்னால் முடியும்!

ஆனால்,

 நீ என்னையும்

உன்னைப்போல் ஒருவனாக  மாற்ற,

நான் ஒருபோதும்

அனுமதிக்க மாட்டேன்!

 

எனக்கு வேலை தந்ததால்

நான் வாழ்நாள் முழுவதும்

உனக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்

என்று நீ நினைக்கிறாய்!

 

உன்னிடம் வேலை தேடி வந்த

அந்தப் பிழைக்கு,

வாழ்க்கையில் ஏற்கனவே  விட்ட

அந்த மிகப் பெரிய  பிழைக்கு,

நான் மிகவும் வருந்துவது உனக்குத் தெரியாது. 

 

நீயும் ஒரு பிழை விட்டுவிட் டாய்!

பல வருடங்களுக்கு முன் நீ அறிவித்தது

‘எமது கம்பெனி ஒரு சிறந்த கம்பெனி    

அதற்கு நேர்மையாக உழைக்கக்கூடிய

ஊழியர்கள் தேவை’ என்று

நான் அதை நம்பினேன்  

‘எமக்கு நேர்மையான ஊழியர்கள் தேவை இல்லை ‘

என்று ஏன் நீ என்னிடம் சொல்லவில்லை?

 

நீதான் நேர்மை இல்லாதவனே!

என்னை நன்றி உள்ளவனாக மாற்றுவதற்கு

நீ செய்ய வேண்டியது என்ன என்று உனக்குத் தெரியும்

நீ பலருக்குச்  செய்ததுபோல,

என்னையும் வேலையிலிருந்து நீக்கிவிடு,

என்னை வீட்டுக்கு அனுப்பிவிடு

நான் நன்றி உள்ளவனாக

இருந்து விடுகிறேன்!

 

சற்றுப் பொறு….

என்னால் என்ன செய்ய முடியும்

என்று நீ நினைக்கிறாயா?

நான் என் எழுதுகோலின் பலத்தால்

உன்போன்ற ஊழல்காரர்களை

வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன்! 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.