(Reading time: 4 - 7 minutes)

கவிதை - இது  ஒரு காதல் கதை  - ரம்யா

couple

அவன் உள்ளம்:

 

இதோடு இருபதாவது முறை

உன் வீதியில் நான் வருவது

நிலவே நீ போனதெங்கே!

 

அடைத்திருக்கும் ஜன்னலும் பூட்டயிருக்கும்

வாசலும் உன் முகவரி சொல்லவில்லை

பூவே நீ போனதெங்கே!

 

வீதியோடு நான் போக

வாசல்கதவோரம் நின்று காதல் வீச்சு எறியும்

வஞ்சி நீ போனதெங்கே!

 

எப்போதும் திறந்திருக்கும் உன் ஜன்னல்

நான் கடக்க வெட்கப்புன்னகை பூக்கும்

காதல் கொடியே நீ போனதெங்கே!

 

திருவிழா கூட்டத்தில் தெரியாமல் நான் உரச

முகமெல்லாம் சிவந்த என்

ரோசாப்பூ நீ போனதெங்கே!

 

என் ஆசை சொல்ல தவித்த போது

கண்ஜாடையில் சம்மதம் சொன்ன

கண்மணியே நீ போனதெங்கே!

 

கரும்பு தோட்டத்திலே எனை

கட்டியணைத்து காதல் சொன்ன என்

கட்டிகரும்பே நீ போனதெங்கே!

 

பேச்சுக்கள் பல உரசல்கள் பல

தீண்டல்கள் பல முத்தங்கள் பல என எனை கிறங்கடித்த

காதலியே நீ போனதெங்கே!

 

என்னவள் என்ற எண்ணத்தில் எல்லை மீறிய போதும்

என்னை முழுமையாய் நேசித்த

என் உயிரே நீ போனதெங்கே!

 

வெளியூர் செல்ல விருப்பம் சொன்னபோது

வெள்ளை சிரிப்போடு வழியனுப்பிய என்

தேவதையே நீ போனதெங்கே!

 

வெளியூர் சென்று திரும்பும் வேளையில் அறிந்தேன்

வேறோடு பெயர்ந்துவிட்டாய் காரணம் நான் அன்றோ

என்னவளை நீ போனதெங்கே!

 

பாராமுகம் சற்றுநான் காட்ட யாருடனோ உனை இணைத்த

பழிசொல்லோடு நம் பிள்ளை சுமந்து சென்ற

தாயே நீ போனதெங்கே!

 

நீ போட்டகோலம் கலைய ஒன்றிரண்டு மழைதுளியும்

மீதம் என் கண்ணீர்துளியும் விழ

கண்ணே நீ போனதெங்கே!

 

உயிரே !உறவே !உண்மை காதலே!

உயர்ந்தவளே உடன்வர நீயில்லாமல்

நானும் தான் போவதெங்கே! 

 

அவள் மனம்:

காத்திருந்த காலம் எல்லாம் கண்ணீராய்  கரைந்திருக்க

காதல் தந்த கண்ணாளா உன் கண்கள் காணாமல் நான் போகிறேன்

 

என் வீதி கடக்கும் போதெல்லாம் கண்ஜாடையில்  நீர் காதல்வீச

கதவோரம் நான் நின்று ஸ்வாசித்த நினைவுகள் எல்லாம்

மூச்சுகாற்றாக உள்ளிறக்கி நான் போகிறேன்

 

மூடாத ஜன்னல்வழி உனை பார்க்க காத்திருப்பேன்

நீர் வரும் அந்த நோடி வெட்கப்பூ பூத்திருப்பேன்

இமைமூடா அந்நோடிகள் விழியில் தேக்கி நான் போகிறேன்

 

நீர் சொல்லும் முன்பே உம்ம மனசு ஒடிவந்து சொன்னதய்யா

என் மனம் நான் திறக்க கரும்புதோட்டம் தான் சாட்சியய்யா

கட்டுக்கடங்காத ஆசையில் கட்டியணைத்த கனம்தான்

என் நெஞ்சுகுழியில் கட்டி நான் போகிறேன்

 

எத்தனையோ பேசினீர் எங்கெங்கோ தீண்டினீர்

எல்லையில்லா காதலேத்தான் என் உயிருக்குள் ஊற்றினீர்

ஊற்றெடுத்த நேசத்தை என் உயிரில் ஏற்றி

ஊமையாய் ஊரைவிட்டு நான் போகிறேன்

 

கண்டதும் காதலா கண்மூடி காமமா கண்டபடி ஊரார் ஏச

உம்ம குணம் நான் கூறமுடியாம உங்கப்பா எனை மிரட்டிய

வலியெல்லாம் வழித்தெடுத்து வாசல் கோலத்தில் வீசியெறிந்து நான் போகிறேன்

 

வயிற்றில் வளர்வது வியாதி அறுத்தெறி என்று அன்னை அலற

வியாதியல்ல கருவறை என் சாமி நீர் தந்த வரமென்று கதறி அழுது

துடித்து வென்று நம் கண்மணி பெற்றெடுக்க பெயர்ந்து நான் போகிறேன்

 

காலங்கள் மாறினாலும் கவலைகள் கூடினாலும் மாறாது நம் காதல் என்றே

கொக்கரிக்க ஒரு காளை கன்று கொண்டுவர

கனநேரம் கண்காணாமல் கரைந்து நான் போகிறேன்

 

தடுமாறும் தருணம் தான் உமக்கு தெரிந்தும் பிரிகிறேன்

பிள்ளை சுமந்து வந்து உம் சுமை போக்க  வருகிறேன்

தந்தை நான் தாயும் நீ என்ற தளராத உறுதியோடு

தலைநிமிர்ந்து இப்போது தடமில்லாமல் நான் போகிறேன்

 

முடிவு

குறுகுறு பார்வையோடும் குறுநகை ஒன்றினோடும்

அன்னை கரம்பிடித்து மெல்ல அவள் நடந்துவர

வெள்ளை வேட்டியோடும் வெளுத்த தாடியோடும்

வெளியே புறப்பட்ட அவன் கண்ணில் அவள் அன்னை விழ

இடிந்துவிழுந்த நெஞ்சங்களுக்குள் சாரல்மழை பூவாய் தூவ

கண்கள் நான்கும் குளமாக

அங்கு காதல் வென்றது

காற்றும் நின்றது

புரியாமல் நின்றிருந்த பிள்ளையை தூக்கி

உன் அப்பா என்று கை காட்ட

பொங்கும் மழலையில் தன் உறவை புதுபிக்க

புயலாய் வந்து பூவையை சேர்ந்தான்

பரிதவித்து அவர்களுக்காய் காத்திருந்த பாவியவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.