(Reading time: 2 - 4 minutes)

கவிதை - உன்னோடு  - ரம்யா

couple

உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்

புதிதாய் தான் பிறக்கிறேன் பழைய பாதை மறக்கிறேன்

கட்டியணைத்த சில தருணம்

முத்தமழையில் சில தருணம்

உன் அத்தனை தழுவளிலும்

கூச்சம் அறுந்த இன்ப தருணம்

உன்னோடு ஒவ்வொரு தருணம்

புதிதாய் தான் பிறக்கிறேன்

 

உனக்காக காத்திருந்த கண்ணீர் காலங்கள்

 உன் சிறு கண்ணிமை சிமிட்டலில் கரைந்து போன தருணம்

ஏக்கங்கள் ஏற்றி நின்ற என் நெஞ்சுக்குழி பள்ளங்கள் எல்லாம்

உன் ஒற்றை தொடுதலில் மட்டும்முழுதாய் நிறைந்த தருணம்

உன்னோடு ஒவ்வொரு தருணம்

புதிதாய் தான் பிறக்கிறேன்

 

மூடி வைத்த என் தடமுலையும்  உன் மூச்சுகாற்றில் மலர்ந்து

சிறுதுளியாய் என் உயிர்துளி உன் தொண்டை தாண்டிய அழகு தருணம்

கண்ணோடு கண் நோக்கி உன் இதழ் பூத்த புன்னகையோடு

அம்மா என்ற ஒற்றை வார்த்தை என் வாழ்வு நிறைத்த அமுத தருணம்

உன்னோடு ஒவ்வொரு தருணம்

புதிதாய் தான் பிறக்கிறேன்

 

பிஞ்சு கால்கள் கொஞ்ச கெஞ்ச ஒய்யார நடைபோட்டு வந்து

என் முந்தானை இழுத்து சிணுங்கிய ஒப்பில்லா ஒரு தருணம்

கோபம் கொட்டிய கொடுங்கனத்தில் இதழ் பிதுக்கி நின்று

கண்ணீர் தேக்கிய கண்ணில் ஏக்கம்  காட்டிய கருணை தருணம்

உன்னோடு ஒவ்வொரு தருணம்

புதிதாய் தான் பிறக்கிறேன்

 

ஓயாமல் உன்னருகே நானிருந்து குதூகலிக்க

பள்ளி என்னும் பெயரில் உனை பிரிந்த ஏக்கத்தருணம்

 ஊனும்உறவும்  காலமும் நேரமும் மாற்றம் பல பெற்றிருக்க

அன்பு அன்றி எதுவும் நிலையில்லை என்றுணர்ந்த மெய் தருணம்

உன்னோடு ஒவ்வொரு தருணம்

புதிதாய் தான் பிறக்கிறேன்

 

விளையாட்டாய் உன் மடிசாய என் தலை கோதி

உச்சி பொட்டில் உன் இதழ் பதித்த ஈரத்தருணம்

உன் சின்ன கையால் சோறு ஊட்ட என்னோடு நீயும் வாய் பிளந்து

என் அப்பனாய் அன்னையாய் நீ மாறிய அந்த தருணம்

புதிதாய் தான்  பிறந்துவிட்டேன்

பழமைகள் அறுத்துவிட்டேன்

பெண்ணாய் பிறக்க நான் செய்த தவப்பயனை  

உன்னால் இன்று நிறைவாய்பெற்றுவிட்டேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.