(Reading time: 3 - 6 minutes)
humanity

கவிதை - முன்மொழிவு - ரம்யா

அவன்:

என்னோடு ஒரு பயணம் உடன்வர சம்மதமா

வாசலில் தோரணம் கட்டி மலர்சரங்கள் பல சூட்டி

இதய அரியணையில் இதமாய் ஏற்றி வைப்பேன்

இப்படி பொய் உரைக்க போவதில்லை என் ஓரழகே

என்னைப்பற்றி கேள்

 

காற்றில் திரியும் சறகு முதல் பூமி பிளக்கும் செடிவரை

அத்தனையும் குழந்தையாய் கைக்கொட்டி இரசிப்பவன் நான்

மோட்டு ஒன்று மலர்வதை காண சலிக்காமல் காத்திருந்து

அது அவிழும் நேரம் தீபாவளி கொண்டாடும் கிறுக்கன் நான்

மேகம் தப்பிக்கும் முதல்துளி என் உள்ளங்கைய ல் ஏந்தி

வைரமென பேழையில் பூட்ட நினைக்கும் பித்தன் தான்

மழை நின்ற வேளையில் என்னோடு நனைந்த மரங்களுடன்

காற்றில் தலை உலர்த்தும் பைத்தியக்காரன் நான்

நான்காம் பிறையோடு அமாவாசை அன்று வராத காரணம் கேட்டு

மொட்டை மாடியில் விசாரணை நடத்தும் கேலிக்கூத்தன் நான்

சுட்டெரிக்கும் சூரியனை என் சுடுபார்வை ஒன்றனுப்பி

அடங்க மறுக்கும் பிள்ளை நீ என்று கண்டிக்கும் பேதலி நான்

பட்டாம்பபூச்சி பின் சென்று பூக்கள் நோகாமல்

தேன குடிக்கும் யுக்தி அறிய துடிக்கும் மூடன் நான்

இயற்கையோடு இத்தனை நேசம் பிறகெதற்கு மனித காதல்

உன் கேள்விக்கு பதில் உண்டு என்னிடம்

 

உன் ஸ்பரித்தின் சூட்டில் என் மழைதுளி தீண்டல்

உன் மேடு பள்ளங்களில் மலைகளின் சாயல்

உன் இதழ் விரித்து சிரிப்பதில் மொட்டின் மலர்ச்சி

உன்  ஓரப்பார்வையில் நிலவின் குளிர்ச்சி

 

என் ப்ரபஞ்சத்தின் ப்ரதிபலிப்பு நீ

என் இயற்கையின் மனித உரு நீ

என்னை நிறப்பும் என் உயிரின் பாதி நீ

உயிரே வா

வின்வெளி பாதையில் நட்சத்திர பூ கம்பளம்

நம் கை கோர்த்து அதில் வானம் அளந்து வரலாம்

மேகம் ஏறி காற்றில் பறந்து முதல் துளியில் ஒளிந்து

பூமிக்கு திரும்பி வரலாம்

மலர்ந்த பூவுக்குள் புகுந்து நாம் காதல் வேள்வி துவங்கலாம்

பட்டாம்பூச்சிக்கும் புதியதோர் முத்தபாடம் உரைக்கலாம்

இரவோ பகலோ பேதம் தெரியாமல்

இருக்கும்வரை காற்றில் பறந்து திரியலாம்

காதலில் தொலைந்து மறுபிறவி  எடுக்கலாம்

 

என்னோடு ஒரு.பயணம் உடன்வர சம்மதமா

அவள்:

 

உம்மோடு ஒரு பயணம் எப்போதும் ஆசை தான்

உம் பயணச்சுமையாக நான் மாறாத தருணத்தில்

 

நட்சத்திர கம்பளத்தில் உம் கைகோர்க்கும் நேரத்தில்

நடக்க இயலா பிஞ்சுகள் பலர் நினைவு   என் நடை உறுத்தும்

அப்போது சுமையாவேன்

மேக்த்தில் நாம் மிதந்து மழை வழியே பூமி தொட

வயலும் வாழ்வும் தேய்ந்த என் விவசாயி முகம் என் கண் உறுத்தும்

அப்போது சுமையாவேன்

மலருக்குள் நீர் காதல் கவி பாட

மலராத மொட்டுக்கள் கருகும் வாசம் என் தவம் கலைக்கும்

அப்போது சுமையாவேன்

பட்டாம்பூச்சிக்கு முத்தபாடம் நீர் நடத்த

பாரமான திருமணம் அதில் நசுங்கிய பூக்கள் என் விழி நனைக்கும்

அப்போது சுமையாவேன்

உம் உலகில் நான் என்றும் ஒரு சுமை தான்

என் உலகம் நீர் வர இயலாது

உம் உலகம் நான் ஏற முடியாது

இயற்கையோடு ஒன்றிவிட்ட இயல்பான ஞானி நீர்

இல்லாமை இல்லாது ஆக்க இயங்கும் இயல்பான ஜீவன் நான்

நான் என்றும் உம் உலகில் ஒரு சுமை தான்

 

உம் கவிதையில் உம்மை காதலிக்கும் காதலியாய்

உம் தீண்டலில் மட்டும் தீ வளர்க்கும் தீச்சுடராய்

உம்மில் ஒளிந்து என்னை தொலைக்கும் ஒர் உயிராய்

என்றுமே உமை பிரியா பேரானந்தத்தின் சிறுதுளியாய்

இப்படியே உம்மோடு என்றும் பயணிக்க ஆசை தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.