(Reading time: 1 - 2 minutes)

கவிதை - வேறு வேறாய் தொடர்ந்திருப்போம்! - ரவை

krishna

இடுப்பு நோகாதோ, இறைவா!
   இறக்கிவிடேன், என்னை!
 கடுக்காதோ தோள்தான்?
     கெஞ்சுகிறேன், உன்னை!
 வெடுக்கென கடித்தும், என்னை
     விடுவதற்கு மறுப்பதென்ன?
 துடுக்காகப் பேசும் என்னை
     துறந்திட தயக்கமென்ன?
 
 இன்றா? நேற்றா? வருடம்!
     எண்பத்திரண்டு ஆண்டு!
 அன்பை பொழிந்த உன்னை
     அலட்சியம் செய்துமென்னை
 கன்னத்தில் முத்தமிட்டே இன்னும்
     கொஞ்சி மகிழும் உன்னை
 என்ன சொல்வதென்றே, ஒன்றும்
      என்மதிக்கு எட்டவில்லை! 
 
 பாரினில் ஒருநாள் என்னை
     பாராட்டும் நண்பர்கூட்டம்
 தூற்றிட அடுத்த நாளே
     தயங்கமாட்டார், உண்மை!
 மார்பினில் அணைத்து முத்தம்
     வரிசையாய் நல்கும் அன்பே!
 கார்முகில்வண்ணா, கண்ணா!
     கண்ணுக்குள் நிறைந்துவிட்டாய்!
 
 உன்னுடன் கலப்பதொன்றே
     உயர்ந்த சொர்க்கம் என்பார்!
 உன்னுடன் கலந்துவிட்டால்,
      அன்புக்கு எங்கு போவேன்?
 என்னைநீ என்றும்உந்தன்
       இனியநல் சிசுவாய் ஏற்று
 அன்பிலே திணறவைத்தால்
        அதுவே எனக்கு சொர்க்கம்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.