(Reading time: 2 - 4 minutes)

கவிதை - கடவுளின் கடிதம் - ரவை

கருத்து:ராம்.ராமகிருஷ்ணன்

letter-from-god

எனதருமை நண்பா!
எப்போதும் என்னுடன்
மனம்விட்டு பேசலாம்!
மகிழ்வோடு வாழலாம்!
உனதினிய குரல் கேட்க
உளமார ஏங்குகிறேன்!
எனதன்பே! உன் கவலை
எதுவாயினும் போக்கிடுவேன்!

உனைநான் நன்கறிவேன்
உன்னுள்ளே இருப்பதனால்!
எனக்குப் பெயர் எத்தனையோ!
எல்லாமே வைத்தவன் நீ!
நினைத்தாலும், அழைத்தாலும்,
 நின்றிடுவேன், உன்முன்னே!
எனையழைக்க மாட்டாயா
என்பதே எனது ஏக்கம்!

ஓரடி எனைநோக்கி வைத்தால்,
ஒன்பதடி நான் வருவேன்!
வேறெந்த உருவத்தில் பார்த்தாலும்
மகிழ்வெனக்கு, பாரென்னை!
மாறாக உருவமேயின்றியும்
விளித்தாலே வந்திடுவேன்!
 யாரது கடவுள்? என்றாலும்
எனக்கில்லை ஒரு வருத்தம்!

வாழும் உயிர்களில் எல்லாம்
வசிக்கின்றேன், நம்புங்கள்!
வாழ்ந்த ஞானிகள் கூறியவை
வாழ நான் விடுத்த செய்திகளே!
சூழ்ந்துள்ள கஷ்டங்கள் ஏன்?
கவலைகளும் சோகமும் ஏன்?
ஏழ்மையேன்? சண்டைகளேன்?
என்போருக்கு, சொல்லுகிறேன்!

 காண கண்களும், கேட்பதற்கு
  செவிகளுடன், அறிவும் தந்தேன்!
ஆணவமாய் தீமை, வஞ்சகம்
அத்தனையும் புரிந்தது, மனிதர்!
போனதெலாம் போகட்டும்!
புதுவாழ்வு மலர்ந்திடவே
ஞானமுனக்கு தருகின்றேன்!
நேசமொன்றே மந்திரமாம்!

அன்பின் உறைவிடம் நான்!
அனைவரையும் நேசிக்கிறேன்!
அன்பிருக்கும் இடங்களிலே
அமைதி, ஆனந்தம் இருக்கும்!
அன்புடன் வாழ்ந்து நலம்பல
அடைந்து மகிழ்வுடன் வாழ்வீர்!
இன்பங்கள்எய்தி யாவரும்
எல்லா சுகமும் பெறுவீர்!

கவலைப்படுதல், கவைக்குதவாது!
காலம் வீணே கரைந்துபோகும்!
கவலையனைத்தும் என்னிடம் தந்து
களிப்புடன் வாழ்வீர், உயிருள்ள வரை!
உவப்புடன் பிரச்னையை நானேதீர்த்து
உன்னை என்றும் வாழந்திட செய்வேன்!
துவளுதல் தவிர்த்து, அச்சம் விலக்கி
துணிவுடன் வாழ்வீர், சுகமும் பெறுவீர்!

நம்பிடவேண்டும், என்வாக்குறுதி!
நானுனை காப்பேன்! உறுதி! உறுதி!
இம்மெனும் முன்னே உன்முன் நிற்பேன்!
என்றும் எதையும் என்னிடம் பேசு!
 கும்பிடவேண்டாம் கூப்பிடு, போதும்!
கணத்தினில் வந்து கஷ்டம் களைவேன்!
உம்மிடம் உள்ளதை பிறர்க்குத் தந்து
உலகம் வாழ, நீயும் வாழ்வாய்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.