(Reading time: 2 - 3 minutes)

கவிதை - நான் அழியும் நாளே, நன்னாளாம்! - ரவை

myEnemy

என் முதல் எதிரியே, நான்தான்!
எனை அழிக்கும் விஷம் அதுதான்!
என்னவொரு இரும்புப்பிடி, அதற்கு!
இதுபடுத்தும்பாடு, துன்பப்பெருக்கு!

என்று என்னுடன் இணைந்தது என்று
எதுவும் தெளிவாய் புரிந்திடவில்லை!
கொன்றிட அதனை  இயலவுமில்லை!
காத்திட எவரும் முன்வரவில்லை!

ஏட்டில், பாட்டில், வழிதனை காணேன்,
எங்கும் எதிலும் விடையெதுமில்லை!
நாட்டில் இருக்கும் ஆலயம் சென்றும்,
நற்பயன் எதுவும் கிடைத்திடவில்லை!

எவரோ சொன்னார், உடனே சென்றேன்,
ஏழ்மலையேறி கடவுளை கண்டேன்,
அவரின் எதிரே புழுவாய் நின்றேன்,
அருளும் அன்பும் உருவாய் பார்த்தேன்!


ஏழ்மலை ஏறிய களைப்பா உனக்கு?
இளைப்பினை போக்க இடுப்பில் ஏறு!
ஏறிக்கொள்! என்றவரே, என் தாய்!
என்று சொல்ல துடித்தது என் வாய்!
வாரியணைத்தவரோ, கேளென்றார்,
விரும்பும் வரம் எதுவெனினும் கேள்!

நான் அழிந்திட வழி எது என்று 
நனைந்து நடுங்கிடக் கேட்டேன்,
ஏன் உனக்கு இத்தனை கோபம்?
என்ன செய்தது உனக்கு துரோகம்?
தூணென நின்றேன், சிறிதே சிரித்தாள்!
கூறு! எவருடை நானை அழித்திடவேண்டும்?
வீணே எதையும் அழிப்பது கோபம்,
மலைபோல் சேர்ந்திடும் அதனால் பாவம்!

உதட்டில் சிரிப்பு! எனக்கோ தவிப்பு!
உனதா, எனதா, எது உனக்குவப்பு?
எது நீ? எது நான்? என்பதை கூறு!
இம்மெனும் முன்னே,  நடப்பதைப் பாரு!

என்ன சொல்வது என்பது தெரியா
என்மனம் தாய்க்கு புரிந்ததனாலே
இன்முகம்காட்டி ஆறுதலாக
எதுவும் எவர்க்கும் நிரந்தரமில்லை!
என்றும் எல்லா உயிர்களனைத்தும்
எனக்குள் அடக்கம், நல்லதே நடக்கும்,
இன்றுபிறந்த குழந்தையைப்போல
இருப்பாய் என்றும் கவலைமறந்து!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.