(Reading time: 2 - 4 minutes)

கவிதை - இரண்டும் உண்டிங்கே! - ரவை

kidsSlum

"குப்பத்து கண்ணம்மா!
எப்பம்மா, சிரிச்சீங்க?
தப்பம்மா! எப்போது
துயரத்தை மறந்தீங்க?"

"யாரையா எமை பார்த்து
ஏதேதோ பேசுவது?
கூரைக்குள் குனிந்தாலும்
நிமிர்ந்தே நடக்கின்றோம்!"

"பொய்சொல்லி என்னைநீர்
விரட்டிடவே நினையாதீர்!
கையடித்துச் சொல்லுங்கள்,
சந்தோஷம் உமக்குண்டா?"

"தரித்திரத்தின் ஊடேயும்
சந்தோஷம் எமக்குண்டு!
வறுமையிலே வெந்தாலும்
வற்றாத மகிழ்வுண்டு!"

"எங்கேநீர் சொல்லுங்கள்,
ஏதுமக்கு சந்தோஷம்?
தங்கும் இடத்தினிலா?
கிள்ளும் பசியினிலா?

கிழிந்த உடையினிலா?
காசில்லா கொடுமையிலா?
பிழிந்து உறிஞ்சுகின்ற
பொருளில்லா ஏழ்மையிலா?

பள்ளிக்கு சென்றறியா
பாமரத்தன்மையிலா?
சுள்ளி பொறுக்கிதினம்
அடுப்பெரிக்கும்அவலத்திலா?

கால்வயிற்றுக் கஞ்சிக்கே
காலமெலாம்உழைக்கின்றீர்!
நாள்முழுதும் பணிசெய்து
நலிந்தேநீர் தேய்கின்றீர்!

காபி, டீ,  உன் குடிலில்
என்றேனும் குடித்ததுண்டா?
பாலும் சர்க்கரையும்,
பணமுண்டா, வாங்கிடவே?

புதுச்சேலை உனக்குண்டா?
பிள்ளைக்கு படிப்புண்டா?
வெளியூர் சென்றிடவே
ரயிலேறிப் போனதுண்டா?

சினிமா பார்த்துண்டா?
சிரித்து மகிழ்ந்ததுண்டா?
சுகமாக உறங்கிடவே
பஞ்சுமெத்தை உண்டா?

கொசுக்கடி எறும்பூறல்
இல்லாத இரவுண்டா?
சாக்கடை துர்நாற்றம்
முகராத துயிலுண்டா?

குடிகாரக் கணவனுனை
மிதிக்காத நாளுண்டா?
இடிபட்டு மிதிபட்டு
வாழ்வதிலே சுகமுண்டா?"

" நிறுத்தையா! அடுக்குவதை!
  வறுமைதனை விளக்குவதை!
   செல்வமுடன் சந்தோஷம்
   சேர்ந்தில்லை, அறிவாயா?

பஞ்சுமெத்தை பணக்காரன்
உறக்கமின்றி புரள்கின்றான்!
கட்டாந்தரையிலும் நான்
குறட்டையுடன் தூங்குகிறேன்!

சினிமா தொலைக்காட்சி
நாடகம் பார்ப்போர்கள்
எந்நாளும் மகிழ்ச்சியிலே
இல்லையென்பதறிவாயா?

கஞ்சிகூழ் குடித்தாலும்
வயிறார குடிக்கின்றேன்!
உழைப்பதால் பிணியில்லா
ஆரோக்கியம் எனக்குண்டு!

மேல்தட்டு மக்களுக்கோ
இல்லாத நோயில்லை!
வேளைக்கு சோறிருந்தும்
சாப்பிடவே பசியில்லை!

ஏமாற்று, பித்தலாட்டம்,
சூதாட்டம், களியாட்டம்
ஏதுமிலா என்வாழ்வில்
இன்பம் என்றுமுண்டு!

களவுபயமில்லை, பொய்
கூறத் தேவையில்லை!
பிறர்குடியை கெடுக்க
மோசடியும் செய்வதிலை!

வறுமைக்கும் மகிழ்வுக்கும்
பங்காளி சண்டையிலை!
இரண்டும் சேர்ந்திருந்து
இருப்பதைநீ இங்கேபார்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.