(Reading time: 2 - 3 minutes)

கவிதை - மதிப்பிழந்த மதிப்புகள்! - ரவை

noValue

காலை எழுந்து காபி குடித்து,
மாலை வந்ததும் மது அருந்தி,
சேலையின் பின்னே செல்வதா
சீர்மிகு மானுடப் பண்பு?

சாதிவெறியில் மகளை வெட்டி
சூதுவாதில் மக்களை ஏய்த்து
வீதியில் கட்சி சண்டையிட்டு
வஞ்சனை புரிவதோ, மனிதநேயம்?

வெளிநாட்டுவேலை மற்றும்
வருமானம் அதிகம் என்று
இளிச்சவாயர் பலரை
ஏய்ப்பதோ மனிதபண்பு!

மக்களின் பிரதிநிதிகளில்
மெஜாரிடி நபர்கள்மீது
க்ரிமினல் வழக்கு கோடி
நிலுவையில் உள்ளது இன்று!

ஓட்டுக்கு பணம் தராமல்
ஜெயித்தவர் ஒருவர்கூட
நாட்டினில் இல்லையென்று
நவிலுதே நாளிதழ்கள்!

மதுக்கடை வருமானத்தில்
மக்களுக்கு சலுகை தந்து
பொதுமக்கள் வாழ நாங்கள்
பாதையை தந்தோம் என்பார்!

நீதிமன்றம் ஆணையிட்டும்
நியாயத்தை வலுப்படுத்த
போதிய சட்டம் இயற்ற
பதுங்குது, இன்று ஆட்சி!

கட்சிகள் தாவுதல் செய்து
காசுக்கு தம்மை விற்று
நாட்டிலே ஏய்ப்பவர்கள்
நாள்தொறும் கூடுதிங்கே!

மாதரை தெய்வமென்று
மேடையில் முழங்கிவிட்டு
பாதகம் செய்பவர்கள்
பெருகுதல், யார் மறுப்பர்?

எளியவர்க்கு நீதி கேட்கும்
இயக்கத்தின் தலைவரையே
ஒளித்திடும் போக்கு இன்று
ஊரறிந்த உண்மையன்றோ!

மானுடப் பண்பும் அறமும்
மறைந்துபோய் நாட்களாச்சு!
போனதை மீட்க எவரும்
பாடுபடத் தயாரில்லை!

மதிப்பின் மதிப்பு பூஜ்யம்!
மனிதமும் இல்லா ராஜ்யம்!
விதியினை நொந்துகொண்டு
வாழ்வதோ நமது வாழ்வு!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.