(Reading time: 2 - 3 minutes)
India Independence

கவிதை - கண்ணீர் விட்டு வளர்த்த பயிர்! - ரவை

முண்டாசுக் கவிஞன் பாரதி
வரிந்து கட்டி வளர்த்த பயிர்!
கண்ணீரால் காத்த பயிர்!
குப்பனும் சுப்பனும் பின்னேவர
அண்ணல் காந்தியும் நேருவும்
அன்னை கஸ்தூரியும் படேலும்
கண்டெடுத்த நற்பயிரின் வயது
எழுபத்திரண்டு ஆண்டுகளாம்!

ஜாலியன்வாலாபாகில் 
சிந்திய ரத்தமும் உயிரும்
ஞாலமே புகழ்ந்து போற்றும்
அகிம்சை வழியில் நின்றும்
காலனுக்கு அஞ்சிடாது
கொடுமையும் அனுபவித்து
சீலநல் சுதந்திரம் பெற்று
சரித்திரம் படைத்துவிட்டோம்!

பெற்ற சுதந்திரத்தை
பேணி வளர்த்திடாது
உற்றநல் மக்களுக்கு
உதவிகள் செய்திடாது
கற்றவர் காட்டும் வழியில்
கவனமாய் சென்றிடாது
குற்றமே நீதியாக்கி
தலைகீழாய் தொங்குகின்றோம்!

சாதியின் பெயரால் கொலை!
சொல்லவும் கூசிடும் நிலை!
வீதியில் வாழும் ஏழைகள்!
வரட்சியில் வாடும் வயல்கள்!
நீதி கேட்டலையும் பெண்கள்!
நாணயம் இல்லா ஆட்சி!
மீதியை உலகே அறியும்!
வார்த்தைகள் இன்றி தெரியும்!

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!
சொல்லவும் பதைக்குதடா உள்ளம்!
நல்லவர் சொல்லை கேட்பவரில்லை!
நாட்டில் நடப்பது ஆட்சியே இல்லை!
கல்லாதவர் துயரை தீர்ப்பவரில்லை!
கருப்புப் பணத்துக் களவேயில்லை!
மெல்ல அறமினி சாகும்!
மேலோர் தியாகம் வீணாய் போகும்!

இந்நிலை துடைத்திட விரைவாய்
இக்கணம் சபதம் எடுப்போம்!
இன்னமும் துயரில் மாள்வோர்
இன்னல் அகன்றிடச் செய்வோம்!
புன்னகை முகங்களை காண்போம்!
புதியதோர் உலகம் படைப்போம்!
வென்றுநாம் அநீதியை அழிப்போம்!
வெற்றி பெற்று சுகமாய் வாழ்வோம்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.