(Reading time: 1 - 2 minutes)

கவிதை - எனக்கென்ன கவலை? - ரவை

எனைக் கேட்டு தாயென்னை
இப்புவியில் படைத்தாளா? இலை,
எனைக்கேட்டு எமனும்தான்
எனைக் கொண்டு செல்வானா?
இடைப்பட்ட வாழ்வினிலேன்
நான் கவலைப்படவேண்டும்?
எண்ணம்போல் வாழ்ந்திடுவேன்!
எதுவரினும் ஏற்றிடுவேன்!

பிறக்கையிலேகொணர்ந்ததெதை?
இறக்கையிலே எடுப்பது எதை?
பிறக்கும்போது வந்தவர் யார்?
இறக்கும்போது வருபவர் யார்?
தருவதற்கு, எது என் உடைமை?
பெறுவதற்கு, எவரிடம் எது உளது?
இறைவன் எனக்கிடுவதனை
ஏற்றிடுவேன், மகிழ்வுடனே!

இடைப்பட்ட நாட்களிலே
இடைவிடாத போட்டிகளேன்?
இடர்களெது சூழ்ந்திடினும்
இறைவன் அவை நீக்கிடுவான்!
கொடுப்பதவன், எடுப்பதவன்!
காண்பதெலாம் தந்ததவன்!
அடுத்தவனும் உனைப்போலே!
அன்பனைத்தும் அவனுக்கே!

பிரிவுகளேன்? எல்லைகளேன்?
பகைமையேன்? போரும் ஏன்?
உரிமைகளும் உடைமைகளும்
அர்த்தமிலா வெறும் சொற்கள்!
விரிந்து பரந்து கிடக்கும்
அகிலமெலாம் உன் உறவு!
சிரித்து மகிழ்ந்து வாழ்வாய்!
கவலைகளை வீசி களைவாய்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.