(Reading time: 2 - 3 minutes)

கவிதை -  என்று தணியும் இந்த... - ரவை

சந்திராயன் இரண்டு
சந்திரனை அடைந்தாலும்,
சுந்தரத் தமிழினில்
சட்டங்கள் வந்தாலும்,
குந்தகம் இல்லாமல்
காவிரிநீர் கிடைத்தாலும்,
இந்தியர்கள் மடமையினை
என்றுதான் துறப்பாரோ?

மக்களுக்கு சேவைசெய்ய
மாமன்றம் செல்வோரும்
வெட்கமின்றி பதவிக்கே
வெறிபிடித்து அலைவார்கள்!
எக்கணமும் கட்சிமாறி
ஆட்சியினை கவிழ்ப்பார்கள்!
வக்கீல்போல் அடுக்கடுக்காய்
வாதங்கள் புரிவார்கள்!

எவரேனும் அந்நியர்கள்
இங்கொருநாள் வந்தாலோ
அவர்மீது பழிசுமத்தி
அடித்தே கொல்வார்கள்!
குவலயத்தில் யாவருமே
சொற்படி நடந்திடவே
இவரிழைக்கும் கொடுமைகள்
இருகோடி மேலிருக்கும்!

சொத்தின்மீது கண்வைத்து
சொந்தங்களை கொல்வார்!
செத்தாலும், சாதிமதம்
சொல்லிப் பிரித்திடுவார்!
மொத்தத்தில், அறிவில்லா
மிருகம்போல் நடந்திடுவார்!
புத்தன், ஏசு, பெயர்சொல்லி
பொய்பேசி வாழ்ந்திடுவார்!

திருந்துவரோ, இவரெல்லாம்!
தெளிந்திடுமோ, கூவம்தான்!
அறிவுடனே வாழ்வாரோ?
அன்புவழி வருவாரோ?
பெரும்புகழை மீண்டும்நாம்
பெறுவோமா, யாரறிவார்?
இருந்தாலும், என்கடமை!
இறைவனிடம் வேண்டுகிறேன்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.