(Reading time: 2 - 3 minutes)

கவிதை - குணாவின் குப்பைகள் - ரவை

குணாவின் 'குப்பைகள்'
கூறுவது ஒரு கோடி!
அனாதையாய் மூலையிலே
அருவருப்பாய் கிடந்ததனை
சுனாமியென வந்தபெரும்
சூறைக்காற்றின் ஆதரவால்,
அனைத்துலகம் நிறைத்தவனாம்
ஆண்டவனின் செய்தி என்ன?

நாடிருக்கும் நிலைமையினை
நாம் வாழும் வாழ்க்கைதனை
சாடிவிட்டான் குப்பையென,
சூசகமாய் சொல்லாமல்!
கூடிப் பிதற்றுகிறார்,
கூட்டாய் சுரண்டுகிறார்,
கோடிகளில் பிறர்சொத்தை
கொள்ளை அடிக்கின்றார்!

ஏழைகளை ஏமாற்றி,
ஏதேதோ வழிகளிலே,
வாழும் கயவர்கள்
வளம்பல காண்கின்றார்!
தாழ்ந்து மனம்நொந்து
தரித்திரம் வசப்பட்டு
கூழுக்கும் வழியின்றி
கோடிபேர் மடிகின்றார்!

மாடமாளிகை ஒருபக்கம்,
சேரியும் குப்பமும் மறுபக்கம்!
வாட்டும் ஏழ்மை ஒருபக்கம்,
வளமை கொழிக்கும் மறுபக்கம்!
ஆட்டமும் பாடலும் ஒருபக்கம்,
அழித்திடும் வறுமை மறுபக்கம்!
மோட்டார் வாகனம் ஒருபக்கம்!
முடமும் குருடும் மறுபக்கம்!

இதற்கொரு தீர்வை உடனடியாய்
இன்றே கண்டிட, முயன்றிடுவோம்!
உதவிடும்கரங்கள் நீட்டிடுவோம்!
ஊரும் திருந்திட சேர்ந்திடுவோம்!
குதலைகள்நலத்தை வளர்த்திடுவோம்!
குமரிகள் கற்பை காத்திடுவோம்!
நிதமொரு திட்டம் தீட்டிடுவோம்!
நிச்சயம் வெற்றி கண்டிடுவோம்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.