(Reading time: 2 - 3 minutes)

கவிதை - நண்பர்கள் தின வாழ்த்துக்கள் - ஜெப மலர்

Happy-Friendship-Day

குழந்தையாய் விளையாடுகையில்

குப்புற விழும் போது 

கை பிடித்து தூக்கி விட்டு 

கை தட்டி சிரிக்கும் போது 

அங்கே கருவானது நட்பு....

 

பள்ளி பருவத்தில் 

பட்டாம்பூச்சி பிடிக்கையில்

தட்டி விட்டு போது

தப்பி பறப்பதை கண்டு 

கண் சிமிட்டி சிரிக்கும் போது 

கோபம் கனலோடு முறைக்கையில்

அங்கே பிறந்தது நட்பு... 

 

கல்லெறிந்து பழம் பறிக்கையில்

காவலாளி வருகிறாரென்று

பொய்யை சத்தமாய் கூற

பயந்து ஓடும் போது 

விழுந்த பழத்தை 

வேகமாக எடுக்கையில் 

அங்கே வளர்ந்தது நட்பு.... 

 

கல்லூரி வாசலில் 

காதலுக்காக காத்திருக்கையில்

ஒதுக்கி விட்டு 

ஒய்யாரமாக போகும் காதலால்

மனதில் ஏற்பட்ட வலியை

கண்கள் காட்டிட துடிக்கும் போது

தோளோடு தோழன் அணைத்து கொள்ள 

அங்கே வேர் விட்டது நட்பு... 

 

ஆண்டுகள் சில கடக்க 

அடித்து பிடித்து வேலையில் அமர

மனதின் அழுத்தம்

முகத்தில் தெரியும் போது 

ஆதரவாக தலைகோத

ஆனந்தம் கரை புரள 

அங்கே விருட்சமானது நட்பு... 

 

குடும்பங்கள் என்ற உறவு தொடங்க

காலங்கள் கடந்து போக

நினைவுகளை மட்டும் 

நெஞ்சில் சுமந்து விடை பெற்ற நட்பு 

முதுமையின் தொடக்கத்தில் எதிர்பாராமல்

முகம் காணும் போது 

கண் முன் தெரியும் நட்பை

கட்டி அணைத்து கொள்ள 

கண்களில் ஆனந்த நீர் பொங்க

அங்கே மீண்டும் துளிர்க்கிறது நட்பு.... 

 

          நட்பிற்கு முடிவில்லை.... 

          நட்பிற்கு தொடக்கமுமில்லை.... 

         விவரமறியா பருவத்தில் 

         விவரங்கள் ஏதும் தேவையின்றி 

         தானாய் முளைத்து விட்டது நட்பு... 

இன்று, 

         நட்பு என்ற ஆலமரத்தில்

         நண்பர்கள் படை சூழ

         நானிலமெங்கும் பெருகி

         நண்பர்கள் தினம் கொண்டாடுகிறோம்....

          Happy friendship day 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.