(Reading time: 2 - 3 minutes)

கவிதை - கொரோனா - ஜெப மலர்

கண்ணுக்கு தெரியாத நீ

கலங்கடித்து விட்டாய் மானிடரை...

கையோடு கை சண்டையிட

வாய்க்கு உறவாக அளித்து விட்டாய் மாஸ்க்... 

 

அழைத்து செல்ல வந்த

எமலோக தூதனென்று அறிவேன்... 

காலம் நிறைவேறினவர்களை 

காலம் தாழ்த்தாமல் கொண்டு செல்வது

எமதர்மன் அளித்த கட்டளையல்லவா... 

 

காலத்தை தள்ள முடியாமல்

கதறி அழும் ஏழைகளை விட்டு விட்டு

கதற வைத்து சுற்றி திரியும் 

கயவர்களை அழைத்துச் செல்... 

 

கால் வயிற்று பசி நீங்க 

கால் கடுக்க உழைப்பவனை விட்டு விட்டு 

கையோடு கை கோர்த்து 

சுரண்டும் சுயநலங்களை அழைத்துச் செல்.. 

 

கண்ணுக்கு புலப்படாமல் 

கண்ணாமூச்சி ஆடும் நீ.... 

நீதியின் கண்ணை மூடி விட்டு 

நல்லவனாய் வேஷம் போடும் வேடதாரிகளை அழைத்து செல்... 

 

பசியால் துடிக்கும் பாமரர்களுக்கு

பசியாற்றுபவனை விட்டு விட்டு 

பாவ புண்ணியம் பாராமல்

பாதகத்தை சேர்ப்பவனை அழைத்து செல்... 

 

பிஞ்சு குழந்தைகளையும்

பல் விழுந்த மூதாட்டிகளையும் விட்டு விட்டு 

அவர்களை கொண்டு தன்

காம பசியாற்றிட துடிக்கும் ஈனங்களை அழைத்து செல்... 

 

பெண்ணின் வயிற்றிலே பிறந்து 

பெண்ணினத்தையே சீரழிக்கும் 

காம வெறி கொண்ட

காமுகர்களை அழைத்து செல்... 

 

மக்களை காக்க வேண்டிய தலைகள்

மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டு 

மானிடர்களை மனங்குமுற வைக்கும் 

மனிதநேயமற்ற கல்லுகளை அழைத்துச் செல்... 

 

உயிர் தேடி வந்திருக்கும் நீ

உயிர் வாழ தகுதியற்ற சுயநலங்களை

உன்னுடன் அழைத்து சென்று 

உன் பசி தீர்த்துக் கொள்... 

 

உண்மையில் மனம் வருந்தி 

உருகி நிற்கும் மனங்களை வாழ விடு.. 

இரக்கம் இல்லாத மனிதரைப் போல

இரக்கம் இல்லாமல் கொன்று விடாதே நீயும்... 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.