(Reading time: 2 - 4 minutes)

கவிதை - ஒரே நாளில் கவிஞர் ஆக வேண்டுமா? - இரா.இராம்கி

உமக்கு ஒரே நாளில் கவிஞர் ஆக வேண்டுமா

நான் சொல்வதை செய்யுங்கள்;

 

விடியற்காலையில் பறவைகளின் சப்தங்களை,  பக்திப் பாடலாய் கேளுங்கள்

 

உதிக்கும் செங்கதிர்சுடர்களில் சுவையானதொரு தேநீர்

அருந்துங்கள்

 

சிற்றுண்டி நேரத்தில் வெண்கதிர்களை வெண் பொங்கலாய் உண்ணுங்கள்.

 

அவ்வபொழுது மரக்கிளைகளை நோட்டமிடுங்கள்

 

மதியம் ,காகம்  கூட்டாய் அன்னம் உண்ணும்

காட்சியை குதூகலமாய் நீங்கள் உண்ணுங்கள்

 

மாலை நேரத்து மகத்தான மஞ்சள் வெயிலை மயங்கி மயங்கி பருகுங்கள்

 

மல்லிகை வாசத்தை நுகருங்கள்

 

கருவானில் உலா வரும் நிலவை உங்கள் கருவிழியில் படமெடுங்கள்

 

நிலாச் சோறு உண்ணுங்கள்

வேண்டாம் வேண்டாம்

இன்றொரு நாள்,

நிலாவையே சோறாய் உண்ணுங்கள்

பால் நிலாவும்,  ஒரு கோப்பை விண்மீன்களும்

கலந்து பதமாய் தயாரான,  பனிக்கூழை இதமாய் சுவையுங்கள்

 

அப்படியே வெட்டவெளியைப் பார்த்து விழி மூடாமல் விடியுங்கள்;

 

மறுநாள் உங்களில் நிகழும் மாற்றங்களை சொல்கிறேன் கேளுங்கள்;

 

பறவைகளின் இசையில்,மனதில் பட்டாம்பூச்சி பறப்பதாய் உணர்வீர்கள்

 

உதிக்கும் வட்ட செங்கதிர் வான்மகள் இஷ்டமிட்டு சில மணித்துளிகள் இட்டுக்கொண்ட பொட்டு என்பீர்கள்

 

வெண்மேகத்திட்டை வெண்னெய் என நினைப்பீர்கள்

 

காற்றில் பறந்தோடும் சருகுகளை கூட வண்ண இறகுகளாக பார்ப்பீர்கள்.

 

தென்றல் வந்து தேகம் தீண்ட, நாவில், அது கடந்து வந்த மலரது தேனின் சுவையை உணர்வீர்கள்

 

அச்சம் கொள்ள வேண்டாம், ஐயமின்றி சொல்கிறேன்

நீங்கள் இன்று முதல் கவிஞர் என்று.

 

நான்

சொன்னதை செய்யுங்கள் 

தயவு செய்து நான் சொன்னேன் என்பதற்காக செய்யாதீர்கள்;

சொல்லும் பொருளும் உணர்ந்து 

உடலும் உள்ளமும் இணைந்து

உள்ளார்ந்த நேசத்துடன் செய்யுங்கள்

நீர் கவிஞர் ஆவதென்ன உம் உள்ளார்ந்த நேசத்தில் உந்தப்பட்டு தேசமெல்லாம், கவிஞர்கள்

பிரசவிப்பார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.