(Reading time: 2 - 3 minutes)

கவிதை - வாழ்க்கையை நகர்த்திச் செல்வது எது? - இரா.இராம்கி

வாழ்வில் எத்தனை இன்பங்கள்,  எத்தனை துன்பங்கள்; 

நான் வாழும்

சமூகத்தில் தான் எத்தனை ஏற்றத்தாழ்வுகள்;

ஒருவன் மாடமாளிகையில்

மற்றொருவன் நடைமேடையில்;

 

ஒருவனுக்கோ, அறுசுவை விருந்து நட்சத்திர உணவகத்தில்;

மற்றொருவனுக்கோ,

ஒரு வேளை அரை வயிறு உணவிற்கு கையேந்தும் நிலை;

 

இவை யாவும் சிந்தித்தால், நம் சிந்தனையில் தோன்றுமோ, சோர்வும் பொறாமையும்;

நம் நிலை கண்டு ,இறைவனுக்கு நன்றி சொல்லத்தானே தோன்றும்.

 

எத்தனை எத்தனை நோய்கள் 

அத்தனை அத்தனை மருத்துவ கண்டுபிடிப்புகள்?

புதிதாய் புறப்படும் அதிசய நோய்கள்?

புதிய மருந்துகளுக்கு,

தன்னை தகவு அமைத்துக் கொள்ளும் நுண் கிருமிகள்?

 

ஆயினும் இந்த வாழ்வு அனைவருக்கும் எங்கனமோ நகர்கிறதே?

இன்பத்தில் கரைவதாகவும்,  துன்பத்தில் நீள்வதாகவும்

தெரிகிறதே.

 

இதயத்தின் ஆழத்தில் ஓர் மெல்லிய ஓசை , வாழ்வின் ஓட்டத்திற்கு நாளும்

பலம் தருதே;

 

நெஞ்சத்தின் நெற்றியில் நீங்கா ஓர் சிறு நம்பிக்கைக்கீற்று நாளும் வாழ்வின் பாதைக்கு ஒளி தருதே;

 

ஒளியும் ஒலியும் ஓங்கி நம்முடன் நிற்க, வாழ்வில் வளம் பெற நாம் அயராது முயற்சிக்க, இறைவனருள் இனிதே உடன் வர, 

புறக்கண்ணில் நோக்கின்,  புரியாத இந்த வாழ்வு ,அகக்கண்ணில் நோக்கின் , வளமாய்

வாகை சூடும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.