(Reading time: 13 - 26 minutes)

காலை ஆறு மணிவாக்கில் நந்தனுக்கு முழிப்பு தட்ட எழுந்தவன் மயக்க மருந்தின் வீரியத்தால் உறங்கிக்கொண்டிருந்த ப்ரியாவை பார்த்து ஒரு பெருமூச்சொன்றை இழுத்து விட்டு தன் இல்லத்திற்கு சென்றான். காவலாளி வாயிற்கதவை திறக்க ஒரு சிறு தலையசைப்புடன் தன் நான்கு சக்கர வாகனத்தை அதன் இடத்தில் விட்டுவிட்டு வேகமாய் படியேறி தன்னறைக்கு சென்றுவிட்டான். 

 

அவனுக்கு தெரியும் வீட்டில் உள்ளவர்கள் அவன் இரவு வீட்டிற்கு வராததற்கு தன்னை கேள்விக்கு மேல் கேள்வி கேட்பார்கள் என்று. அவர்கள் வீட்டில் ஒரு வழக்கம் உண்டு இரவில் யாரும் வெளியே தங்க கூடாது. அதையும் மீறி தங்குவதானால் அதற்குரிய காரணத்தை சொல்ல வேண்டும். நந்தன் வீட்டில் என்ன வென்று சொல்வான்.... பிரியாவை பற்றி வீட்டில் உள்ளவர்கள் அறிவார்கள் தான் எனினும் அவளது நினைவில் அவனே அறியாமல் உறங்கியதால் வீட்டிற்கு வர முடியவில்லை என்றா??? மகனால் தன் மனதை கட்டுப்படுத்தும் விதம் அறியாமல் தவிப்பதை பெற்றவர்கள் உணர்ந்து அவர்கள்  வருந்துவதில்  அவனுக்கு என்ன ஆசையா?  அதனாலே யார் கண்ணுக்கும் சிக்காமல் தன்னறை புகுந்துக்கொண்டான். 

 

நந்தன் வானதியின் ஆண் மகவை மருத்துவமனையிலே வைத்து கவனித்துக்கொள்ள ஒரு ஆளையும் இரவே நியமித்திருந்தான். வீட்டிற்கு வந்தவன் அரை மணி நேரத்திலே குளித்து மருத்துவமனை செல்ல தாயாராகிக்கொண்டிருந்தான். ஐந்து மணிக்கே எழுந்து ஜாகிங் சென்றிருந்த ஆதிநந்தன் தம்பியின் காரை பார்த்துவிட்டு அவன் இருந்த அறைக்கு சென்று வாசலில் கைகளை மார்பின் குறுக்கே கட்டி கிளம்பிக்கொண்டிருக்கும் மீராநந்தனை பார்த்துக்கொண்டிருந்தான். 

 

கைகளில் கார் சாவியையும் பிரியாவுக்கென முன்னொரு முறை வாங்கி அவளிடம் கொடுக்காமல் வைத்திருந்த காட்டன் புடவையையும் கையில் எடுத்துக்கொண்டு மீராநந்தன் திரும்ப அங்கு தன் அண்ணனை கண்டு அவன் திகைத்தது என்னவோ ஒரு நொடி தான். 

 

பின் தன்னை இயல்பாய் காட்டிக்கொண்டு "என்ன டா என்னை சைட் அடிச்சுட்டு இருக்க?? அண்ணிக்கிட்ட சொல்லவா..." என்று கிண்டலாய் கேட்டான். 

 

"நீ ஏன் கேக்கமாட்டா..? நைட்டு ஏன் டா வீட்டுக்கு வரல?" என்று நேரடியாய்  கேள்வி கேட்டான். 

 

ஒன்றும் அறியாதவன் போல் "என்ன டா உளறுற... நான் நைட்டு வீட்டுல தான் இருந்தேன். இதோ இப்போ ஒரு ஆபரேஷன் இருக்கு அதுக்கு தான் ஹாஸ்பிடல் கிளம்பிட்டேன்.." என்றான் மீராநந்தன். 

 

"ஏன் நந்து பொய் சொல்ற? நான் ஜாகிங் கிளம்பும்போது உன்னோட கார் வீட்ல இல்ல.... ஆனா வீட்டுக்கு வரும் போது நின்னுட்டு இருக்கு.... இதோ இப்பவும் வந்த உடனே கிளம்பிட்ட போல... ஏதாவது பிரச்சனையா நந்து??" என்று ஆராய்ச்சி பார்வை ஒன்றை நந்தனை நோக்கி வீசினான் ஆதி. 

 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.