(Reading time: 14 - 28 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 08 - நா. பார்த்தசாரதி

  

சந்தி மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே வந்த போது காமாட்சியம்மாள் மணைப் பலகையைத் தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு புடவைத் தலைப்பையே விரித்துச் சமையல்கட்டு முகப்பில் ஒருக்களித்தாற்போலப் படுத்துக் கொண்டிருந்தாள். மாமி தூங்கிக் கொண்டிருக்கிறாளோ என்று முதலில் தயங்கிய வசந்தி, அருகே நெருங்கிச் சென்று பார்த்ததும் அவள் விழித்திருப்பதைக் கண்டாள்.

  

"நீ அம்மானைக் காய் கேட்டேன்னு பாரு வந்து வாங்கிண்டு போனாளே...? இன்னும் என்னமாவது வேணுமா...?" என்று மாமியே வசந்தி வருவதைக் கண்டு எழுந்திருந்து உட்கார்ந்து விட்டாள்.

  

பாதி அயர்ந்த அந்தத் தோற்றத்திலும் கூடக் காமாட்சியம்மாள் ஏதோ கோவில் கர்ப்பக்கிருகத்திலிருந்து ஓர் அம்மன் விக்ரகம் உயிருடனும் உருவுடனும் புறப்பட்டு வந்து அமர்ந்திருப்பது போல் இலட்சணமாயிருந்தாள். "இந்த வீட்டின் கிருகலட்சுமி நான் இதன் அன்னபூரணி நான்" என்ற கம்பீரமான செருக்குடன் அழகும், தவ ஒளியும் குன்றாத ஒரு ரிஷிபத்தினிபோல் அப்போது அங்கு அமர்ந்திருந்தாள் காமாட்சியம்மாள்!

  

மாமி நிர்த்தாட்சண்யமாக மறுத்து விடுவாளோ என்ற பயத்தோடும் தயக்கத்தோடும் வசந்தி வந்திருந்தாள்.

  

"நம்ம பூர்வீகக் கலைகள், பாட்டுக்கள், விளையாட்டுக்கள், பழக்க வழக்கங்கள், எல்லாத்திலியும் கமலிக்குக் கொள்ளை ஆசை... நீங்க கொஞ்சம் சிரமத்தைப் பாராமே வந்து அவளுக்கு அம்மானை ஆடிக் காமிக்கணும் மாமீ! நானே 'டிரை' பண்ணினேன்... எனக்கு நன்னா ஆட வரலை... பழக்கம் விட்டுப் போச்சு..."

  

"மொட்டைக் கழுத்தும் மூளித் தோளுமாக் கையில்லாமே ஒரு ரவிக்கையைப் போட்டுண்டிருக்காளேடீ?"

  

"நீங்க அதைத் தப்புன்னு நெனைக்கிறதாத் தெரிஞ்சா அடுத்த நிமிஷமே கழட்டிட்டு வேறே போட்டுண்டுடுவா... கமலிக்கு உங்ககிட்ட அத்தனை மரியாதை... அத்தனை பயபக்தி..."

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.