"என் வயதுப் பிள்ளைகள் பேசுகிறார்கள். எனக்கு மனம் வரவில்லை. சும்மா கேட்டுக் கொண்டு, சிரித்துக் கொண்டு இருப்பேன்."
"எனக்கு என்னவோ, இது பிடிக்கவில்லை"
"எனக்குப் பழகிப்போச்சு, பெரிய வீட்டுப் பையன் என்று எல்லோரும் அன்பாகப் பேசுகிறார்கள். என்ன செய்வது?" என்றான்.
சந்திரன் தோப்புக் காவலாளை அழைத்துப் பல் துலக்கக் குச்சி ஒடித்துத் தரச் சொன்னான். அவன் கருவேலங்குச்சி இரண்டு கொண்டு வந்து கொடுத்தான். கிணற்றங்கரையில் உட்கார்ந்து பல் துலக்கிக் கொண்டிருந்தோம். காவலாள் எங்கள் எதிரே வந்து, "எப்போ சாமி கலியாணம்? பெண்ணெல்லாம் பெரிசாகி விலையாகிப் போகுது. நீ மட்டும் சும்மா இருந்தால் எப்படி? ஏதாவது இரண்டு மூணு பார்த்துக் கட்டிக்கொள் சாமி" என்றான்.
சந்திரன் அவனுடைய வாயை அடக்கி, "இந்தப் பேச்செல்லாம் இவனுக்குப் பிடிக்காது. நீ போ" என்றான்.
பல் துலக்கியானதும், சந்திரன் எழுந்து, "நீ இங்கேயே இரு. நான் மட்டும் கிணற்றில் இறங்கி இரண்டு சுற்று நீந்திக் குளித்து விட்டு வந்து விடுவேன், உனக்கு அம்மா வெந்நீர் வைத்திருப்பார்" என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு படியாய் இறங்கினான்.
"நீ எப்போதும் தண்ணீரில்தான் குளிப்பதா?" என்றேன்.
"ஆமாம், சனிக்கிழமை தவிர."
"வாலாசாவில் வெந்நீரில் குளித்தாயே."
"என்ன செய்வது? அந்தத் தண்ணீர் ஒரே உப்பு, எனக்குப் பிடிக்கவில்லை. உடம்புக்கும் நல்லது அல்ல. பாலாற்றுக்குப் போய்க் குளித்துவிட்டு வரலாம் என்றால் யாரும் துணை இல்லை.