சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு புத்தகம் சிறிது வெளியே வந்திருந்தது. அதை எடுத்துப் பார்க்குமாறு வேலையாளிடம் சொன்னேன். அவன் தயங்கித் தயங்கி எடுத்தான். "திருவருட்பா. சந்திரன் என்று பெயர் எழுதியிருக்கிறான்" என்று அவன் சொன்னவுடனே, "ஆ" என்று திகைத்து அலறினேன். "சந்திரா" என்று குனிந்து அழைத்தேன். குரல் இல்லை. மூர்ச்சையாய் விழுந்து கிடப்பதை உணர்ந்தேன். முகமெல்லாம் வீக்கமும் தடிப்புமாக இருந்தன. "அய்யோ! சந்திரா!" என்று அழைத்து வருந்தினேன். வேலையாள் என் முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றான். காப்பி வாங்கி வருமாறு சொல்லியனுப்பினேன். வழியில் சென்ற ஒரு டாக்சியைக் கூப்பிட்டு நிறுத்தினேன். மக்கள் மேலும் சிலர் கூடுவதைக் கண்டு, விரைந்து வீட்டுக்குப் போவதே நல்லது என்று உணர்ந்தேன். காப்பி வந்ததும், சந்திரனைத் திருப்பி அவன் வாயில் சிறிது விடச் செய்தேன். மூர்ச்சை தெளிந்ததும் கண் விழித்துப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தன. என்னைப் பார்த்து, "வேலு! வேலு!" என்றான். "என்ன சந்திரா?" என்றேன். "வேலு! வேலு! வேலு!" என்று தலைகுனிந்து விம்மினான். "வீட்டுக்குப் போகலாம், வா. அப்புறம் பேசலாம்" என்று பிடித்து டாக்சியில் உட்கார வைத்தேன்" என் பை எங்கே?" என்றான். வேலையாள் தரையிலிருந்த பையை எடுத்துக் கொடுத்தான்.
டாக்சியில் வந்தபோது, அவனுடைய அழகிய முகம் பார்க்க அருவருப்பாக மாறியிருந்ததைக் கண்டு வருந்தினேன். தொழுநோய் அவனுடைய, காதுகளையும் மூக்கையும் அழகிய உதடுகளையும் கெடுத்துப் பாழ்படுத்தி அச்சமான தோற்றத்தை உண்டாக்கியிருந்தது. அவனுடைய இனிய குரல் - பெண் வேடம் போட்டு நடித்துப் பாடிப் புகழ்பெற்ற அந்தக் குரல் - கம்மலாய்க் கரகரப்பாய்க் கெட்டும் போனதை எண்ணி வருந்தினேன்.
"அய்யோ! வேலு! உன்னைப் பார்க்கப் போகிறேனா என்று ஏங்கினேன். பார்த்துவிட்டேன் அப்பா, இனி நான் செத்துப் போனாலும் கவலைப் படமாட்டேன். சாகத்தயார்" சாவு வரட்டும், வரட்டும்" என்றான்.
"அப்படி எல்லாம் பேசாதே. கவலைப்படாதே. எங்கே இருந்து வருகிறாய்?" என்று கேட்டேன்.
"திருமணியில் இருந்தேன், அங்கிருந்துதான் வருகிறேன்."
"ஆஸ்பத்திரியிலா?"