(Reading time: 6 - 11 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 20 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி

அத்தியாயம் 20 -- இரக்கமற்ற இரவுகள்

  

ன்றிரவு பவானிக்குத் தூக்கமே வரவில்லை. அன்று மட்டும்தானா? இது போன்ற எத்தனையோ இரவுகள் அவளிடம் இரக்கமின்றி நடந்து கொண்டு வதைத்திருக்கின்றன.

  

மாறனின் மலர்க் கணைகளால் தாக்குண்டவர்கள் இப்படி உரக்கமின்றித் தவிப்பது சகஜம் என்று அவள் படித்திருக்கிறாள். அது உண்மைதான். அவள் விஷயத்தில். உமாகாந்தனும் இப்போது எங்கோ கண்காணாத இடத்தில் அவளை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால் வியப்பில்லை.

  

ஆயினும் அதே மன்மதன் பல சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டு மலர்க் கணைகளுக்குப் பதில் அரும்பு அம்புகளை ஏவிவிடுவதாக அவளுக்குப்பட்டது. அதுதான் ஒருதலைப்பட்சமான காதலாகப் பரிணமித்துப் பல குழப்பங்களுக்கும் துயரங்களுக்கும் மக்களை ஆளாக்குவதாக அவள் தர்க்கரீதியாக ஒரு முடிவுக்கு வந்தாள். தன்னைச் சுற்றியுள்ளவர்களையே அவள் எண்ணிப் பார்த்தாள். 'எவ்வளவு விசித்திரமான நிலை! கமலாவுக்குக் கல்யாணத்தின் மீது காதல். கல்யாணமோ என்னை அடைய ஆசைப்படுகிறார். மாமா குணசேகரன் தன் மருமாள் மாஜிஸ்திரேட்டைத் திருமணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். கோவர்த்தனனுக்குக் கொஞ்சம் இடமளித்தால் போதும். அவர் என்னை விழுங்கி ஏப்பம்கூட விட்டு விடுவார்! அத்தனை மோகம் அவருக்கு என் மீது! ஆனால் நான் மனமார நேசிப்பதோ உமாகாந்தனை. அவரோ எங்கே இருக்கிறார், என்று திரும்புவார் என்பதொன்றும் தெரியவில்லை!'

  

இந்தச் சிக்கல்கள் எப்படித் தீரப் போகின்றன என்று நினைத்தபோது பவானிக்குச் சிரிப்பு வந்தது. கூடவே உமாகாந்த் இந்த நிமிஷத்தில் எங்கு, எத்தனை கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ என்ற எண்ணத்தில் மனம் வேதனைப்பட்டது.

  

உள்ளத்தை முறுக்கிப் பிழியும் இந்தத் துயரத்தை யாரிடமாவது சொல்லிக்கொண்டு ஆறுதல் பெறக்கூட அவளால் முடியவில்லை. 'கமலாவுக்கும் எனக்குமிடையே இது விஷயத்தில் எவ்வளவு வித்தியாசம்! கமலா கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் மனம் விட்டு வாய்விட்டுத் தன் ஆசைகளை என்னிடம் வெளியிட்டாளே. அப்படி என்றால் யாரிடமாவது பேச முடிந்ததா?

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.