(Reading time: 12 - 23 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

 

  "என்ன பானூ அப்படிப் பேசறே?"

 

  அதற்குப் பதில் சொல்லாமல், "சரிதான் ஆவட்டும், ஏலக்காய் பொடி பண்ணியா? முந்திரிப் பருப்பு உரிச்சியா? அய்யய்யோ! என்ன வேலெடா! பெரிசா செய்வேன்னு உனக்குச் சொன்னேன். எல்லாம் துண்டு துண்டாக் கிள்ளிப் போட்டுட்டே துருவல் எல்லாத்தெயும் தூள் பண்ணிட்ட" என்று என்னைக் குறைசொல்லிவிட்டு மறுபடியும் அதைச் சரிப்படுத்தத் தொடங்கினாள். நான் கோபித்துக்கொண்டு உட்கார்ந்தேன்.

 

  ஆறுமணி ஆவதற்குள் இரண்டு காரியர்களில் நிரப்பி வைத்துவிட்டாள். எனக்கு வெந்நீர் விளாவிக்கொடுத்து, அதற்குள் நானி எழுந்திருக்க, அவனைக் குளிப்பாட்டினாள். அவளும் குளித்துவிட்டு எல்லாவற்றையும் சரி செய்து வெளிர் நீலப் பட்டுப் புடவை கட்டிக்கொண்டு தயாரானாள்.

 

  மாமா எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டு வர, பல் ப்ரஷ்ஷை எடுத்துக் கொடுத்தாள். அவர் குளித்து விட்டுச் சிற்றுண்டி எல்லாம் முடித்துக்கொண்டு தெரு நடைக்குச் செல்வதற்குள் யாரோ ஒருவர் இதயமே வெடித்துவிடுவது போல ஓடிவந்து சேர்ந்தான். "ராஜு! ராத்ரி மெயில்லே ராமம் வந்துட்டாம்பா! இன்னக்கு ஞாயித்திக் கிழமெ இல்லியா? உன்னெக் காபி எல்லாம் ஆனதும் வரச்சொல்லி சொல்லச் சொன்னான்."

 

  அதென்ன சொல்லோ தெரியாது, கேட்டதுமே மாமாவின் முகம் மின்சார வளக்குபோல் ஒளி வீசியது. "ராமம் வந்துட்டானா? என்ன செய்தி சொன்னேயா! போ, போ - உன் பின்னாடியே வர்றேன். அப்படியே மூர்த்தியெக் கூட கூப்ட்டுட்டு போ" என்று சொல்லிவிட்டு உள்ளே வந்துகொண்டே "பானூ! டிரஸ் எடுத்துவை. ஒரு வேளெ மத்தியானம் சாப்பாட்டுக்கு வர முடியாது போல இருக்குது. அந்த சாக்ஸ் அழுக்கா இருக்கறாப்போல இருக்குது. வேறே எடுத்துவை." என்று சொல்லிக்கொண்டே ஏதேதோ கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டே இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. அதென்ன! இரவு பிக்னிக் போகலாம் என்று பேசிக் கொண்டதை மறந்துவிட்டாரா?

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.